நெற்றிக்கண்

Friday, January 27, 2012
Sunday, January 22, 2012
2011ஆம் ஆண்டு டாப் டென் ஊழல்
1. சுதந்திர இந்தியாவின் மெகா ஊழலான அலைக் கற்றை ஊழல் ஏற்படுத்திய சுனாமியில்
பதவி இழந்தவர்கள், மத்திய அமைச்சர் ராசா மற்றும் தயாநிதி மாறன். பிப்ரவரி
17ஆம் தேதி, திஹார் சிறையில் நுழைந்த ராசா, 2012ல்தான் ஜாமீனில் வெளி
வருவார். இதே விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை
இழுக்கடித்து,
அந்த நிறுவனத்தைத் தமது லாபத்துக்காக உள்நோக்கத்துடன் கைமாற வைத்த
விவகாரத்தில் தயாநிதிமாறன் அவுட். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் லாபம் பெற்ற
நிறுவனம்
214 கோடியை, கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுத்த விவகாரம் பங்குதாரர்
கனிமொழியை, ஆறுமாத காலம் திஹார் சிறையில் போட்டு விட்டது. ராசாவின் நண்பர
சாதிக்பாட்சா இறப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இப்போது மறக்கப்பட்டு
விட்டது.
2. 2011ன் இந்தியக் கதாநாயகன் அண்ணா ஹசாரே - ரேலேகான் சித்தி என்ற
குக்கிராமத்திலிருந்து புறப்பட்ட இந்த முன்னாள் ராணுவ வீரர், இன்று
இந்தியாவின் ஊழல்
எதிர்ப்பு பிம்பம். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இவர் பின்னால்
காஷ்மீரிலிருந்து குமரி வரை திரண்டது ஊழல் எதிர்ப்புப் படை. இவரது
உண்ணாவிரதங்கள்
ஏற்படுத்திய பதற்றத்தில் தடுமாறிய மத்திய அரசு, ஒரு வழியாக, டீம் அண்ணாவைத்
திருப்திப்படுத்தும் அளவுக்கு ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்து விடும்
என்ற நம்பிக்கையை வளர்க்கிறது.
3. அண்ணா எங்கே தங்களுக்கு எதிராக வந்து விடுவாரோ என்ற களத்தில் (ரதத்தில்)
குதித்தார் எல்.கே.அத்வானி. 1992ல் செய்ததுபோல நமது நிலப்பரப்பு முழுவதும்
செல்லவில்லை அத்வானிஜி (வயதாகிவிட்டது). 7600 கி.மீ. 38 நாட்கள்; 27
மாநிலங்கள். இந்த யாத்திரையில் 14 முறை விமானத்திலும் 6 முறை
ஹெலிகாப்டரிலும்
பயணித்திருக்கிறார் அத்வானி. இடையில் ஊழலை ஒழிக்க பாபா ராம்தேவ் இருந்த
உண்ணாவிரதம் கேலிக்கூத்து என்றால், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திய
நரேந்திரமோடி
கேலிச்சித்திரம்.
4. மல்லோ ஜூலா கோடே ஸ்வரராவ்! இவரை கிஷண்ஜி என்றால்தான் எல்லோருக்கும்
தெரியும். நக்ஸலைட் பிரிவு பொதுவுடைமை இயக்கத்தில் சிறு வயது முதற்கொண்டு
தம்மை ஈடுபடுத்திக் கொண்டு உச்சத்துக்கு வந்த கிஷண்ஜி, நமது பாதுகாப்புப்
படைகளுக்கு ஒரு சவாலாகவே விளங்கி வந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் அடர்ந்த
காட்டுப்
பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிஷண்ஜி, மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டாரா
அல்லது என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்களா என்ற சர்ச்சை நீடிக்கிறது.
மாவோயிஸ்ட்டுகளுக்குப்
பெரிய பின்னடைவு.
5. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுக்கு மற்றொரு உதாரணம் தலைமைக் கண்காணிப்பு
ஆணையர் (விஜிலன்ஸ் கமிஷனர்) நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்
பட்டது.
விஷயம் என்னவென்றால், தாமஸ் அண்ணன் கேரளாவில் உணவுத் துறைச் செயலாளராக
இருந்தபோது, மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ததில் ஆதாயம்
பார்த்தார்
என்பதுதான். ‘இவரை ஊழலை ஒழிக்கும் பணியில் போடுவதா’ என்று புறப்பட்டது
பொதுநல வழக்கு. உச்சநீதிமன்றம் கறையைப் போக்கியது.
6. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் கூட ஊழலுக்கு எதிராகத் திரண்ட மக்கள்
கருணாநிதியின் அரசைத் தூக்கிப் போட்டார்கள். மிக புத்திசாலித்தனமாக,
விஜயகாந்தின்
தே.மு.தி.க.வுடன் கூட்டணி கண்ட ஜெயலலிதா, மூன்றாவது முறை ஆட்சியைப்
பிடித்தார். ஆறே மாதத்தில் கூட்டணி ஹனிமூன் முடிந்து, ‘தனியா நின்னா
வெற்றி பெற்றிருக்க முடியுமா?’ என்று கேப்டன் சவால் விடும் நிலை
வந்திருக்கிறது. புரட்சித் தலைவியும்,கேப்டனும் மோதிக் கொள்ள இன்னமும் பல
களங்கள் காத்திருக்கின்றன.
7. தமிழ் நாட்டின் மின் தேவை அதிகரிக்க, உற்பத்தி சரிந்த நிலையில் மின் வெட்டோ
வெட்டு. இந்த நிலையில் டிசம்பரில் மின் உற்பத்தியைத் தொடங்க இருந்த
கூடங்குளம்
அணுமின் நிலையத்துக்கு பிரேக் போட்டு விட்டார்கள் உள்ளூர் மக்கள். 13000
கோடி ரூபாய் செலவழித்த நிலையில் ஷாக் அடித்து நிற்கிறது மத்திய அரசு.
மின்பற்றாக்குறை
போக்கப் பாடுபடும் ஜெயலலிதா, உள்ளூர் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்துப்
பேசாமல் இருக்கிறார். மக்களின் அச்ச உணர்வைப் போக்கி, அணுமின் நிலையத்தைச்
செயல்பட
வையுங்கள் என்று சொல்பவர்களின் குரல் வலுவாகிக் கொண்டே வரும் நிலையில்
எதிர்ப்பாளர்கள் பக்கம் சோர்வு தெரிகிறது.
8. கூட்டணிக் கட்சிகள் தயவே வேண்டாம்’ என்று அவர்களை கட் செய்துவிட்டு,
தனியாகவே உள்ளாட்சித் தேர்தல் களத்தில் குதித்தது அ.தி.மு.க. மொத்தம் உள்ள
20000
உள்ளாட்சிப் பதவிகளில், 50 சதவிகிதத்தை அள்ளிக் கொண்டு போனார் ஜெயலலிதா.
நீண்ட காலத்துக்குப் பிறகு கட்சிகள் தனியாகவே தேர்தலைச் சந்தித்ததுதான்
குறிப்பிடத்தக்க விஷயம். மிகக் குறைவான இடங்களைப் பிடித்த பா.ம.க.மற்றும்
ம.தி.மு.க. கட்சிகளும் கூட ‘வெற்றி... வெற்றி...’ என்று முழங்கியது
சற்று வினோதம்தான்.
9. நல்ல மாற்றத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ஜெ.வுக்கு வோட்டுப்
போட்டார்கள் மக்கள். சமச்சீர் கல்வி குழப்பம், தலைமைச் செயலகக் கட்டடம்,
அண்ணா
நூற்றாண்டு நூலகக் கட்டடம் ஆகியவை மருத்துவ மனைகளாக மாறும் என்ற
அறிவிப்புகள் மக்களால் அவ்வளவு ரசிக்கப்படவில்லை. மக்கள் நலப் பணியாளர்களை
வீட்டுக்கு அனுப்பியது, உச்ச நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டது. பால்
கட்டணம், பஸ் கட்டண உயர்வு மக்களைக் காயப்படுத்தி விட்டது. கடனைக் குவித்து
கஜானாவைக்
காலி செய்துவிட்டார் கருணாநிதி. நிதி ஒழுக்கத்தைக் கொண்டுவந்து, எனது
திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கசப்பு மருந்து அவசியம்," என்றார் ஜெ.
10. வருடம் முடியும் நேரத்தில் தமிழகத்தைக் கலக்கிவிட்டது முல்லைப் பெரியாறு
அணை விவகாரம். ‘120 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்கலாம்’ என்று
அழிச்சாட்டியம்
பண்ணும் கேரளாவுக்கு எதிராக, தமிழகமே திரண்டுவிட்டது. ஆட்சியில்
இருப்பதால் ரொம்பவே பொறுப்புணர்வுடன் விவகாரத்தைக் கையாள்கிறார் முதல்வர்.
ஆனால்,
மத்திய அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்தால், அம்மா தமது வழக்கமான
அதிரடியால் மன்மோகன்சிங்கை அதிர்ச்சியடைய வைப்பார். 2012ல் தமிழகத்துக்கு
நியாயம்
கிடைக்குமென்று நம்புவோமாக!
தொகுப்பு : ப்ரியன்
பில் கேட்ஸ்
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவரும், உலகத்தின் மிகப்பெரிய
பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், செல்வச் செழிப்பு மிக்க
குடும்பத்தில் பிறந்தவர்.
அப்பா வில்லியம் ஹென்றி ஜூனியர் பிரபலமான வக்கீல். அம்மா மேரி மேக்ஸ் வெல்
பள்ளி ஆசிரியர். கேட்ஸுக்கு கிறிஸ்டி என்ற அக்காவும் லிப்பி என்ற
தங்கையும்
உண்டு. பில்கேட்ஸ் சிறு வயது முதலே படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தார்.
கணக்கும் அறிவியலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. கேட்ஸின்
முழுப்பெயர்
வில்லியம் ஹென்றி கேட்ஸ்.சியாட்டில் நகரத்தில் இருந்த படிப்புக்கு பெயர்
போன லேக்சைடு பள்ளியில்
படித்தான் கேட்ஸ். அங்கே நிலவிய சூழ்நிலை, பாடத் திட்டம், கற்பிக்கும்
முறை, ஆசிரியர்களின்
அரவணைப்பு போன்ற பல அம்சங்களும், கேட்ஸின் அறிவு வளர்ச்சிக்கு உரமிட்டன.
கேட்ஸுக்கு முதன் முதலாக கம்ப்யூட்டர் அறிமுகமானது அங்கேதான்! ஞாயிற்றுக்
கிழமைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து டின்னர்
சாப்பிடுவது வழக்கம். அது கேட்ஸுக்கு மிகவும் பிடிக்கும். சீட்டுக்
கட்டு, டேபிள் டென்னிஸ் போன்றவை கேட்ஸ் விரும்பிய விளையாட்டுகள். ஒவ்வோர்
ஆண்டும், கிறிஸ்துமஸ் சமயத்தில் தானே வாழ்த்து அட்டைகள் தயாரித்து
நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பார் கேட்ஸ்.
கேட்ஸின் பெற்றோர் தங்கள் மகனை ஒரு வக்கீலாக்க விரும்பினார்கள். ஆனால்
கேட்ஸையும் பால் ஆலன் உள்ளிட்ட அவனுடைய நண்பர்களையும், அந்தப் பள்ளியின்
கம்ப்யூட்டர் கவர்ந்து இழுத்தது. அந்த மாணவர்கள் நாள் முழுக்க
கம்ப்யூட்டர் அறையிலேயே தவமாகக் கிடந்தார்கள். பல நாள்கள் இரவு வெகு நேரம்
வரை கண்
விழித்து கம்ப்யூட்டர் பற்றிய புத்தகங்களைப் படிப்பது, புரோகிராம்கள்
எழுதுவது என்று நேரத்தைச் செலவிட்டார்கள். கேட்ஸுக்கும் நண்பர்களுக்கும்
மற்ற பாடங்களில்
ஆர்வம் குறைந்தது. கேட்ஸ் குழுவினரின் ஆர்வத்தால், பள்ளி கம்ப்யூட்டரே அடிக்கடி ரிப்பேர்
ஆனது. கம்ப்யூட்டர் அறைக்குள்ளேயே நுழையக் கூடாது என்று தடை வந்தது.
இவர்களின் திறமையை
அறிந்த கம்ப்யூட்டர் சென்டர் கார்பரேஷன் நிறுவனம், கேட்ஸ் குழுவினரை
அழைத்து, வேலை கொடுத்தது. அப்போது கேட்ஸுக்கு வயது 15. கேட்ஸ் குழுவினர்
தங்களை
‘லேக்சைடு புரோக்ராமர்கள் குழு’ என்று அழைத்துக் கொண்டார்கள். ஒரு வருடத்தில் அவர்களுக்கு இன்ஃபர்மேஷன் சயின்ஸஸ் நிறுவனத்தில் வேலை
கிடைத்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கணக்கிடும் பணியைச் செய்ய
ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கினார்கள். இதற்குள், கேட்ஸ் ஒரு திறமையான
கம்ப்யூட்டர் புரோகிராமராகத் தன்னை நிரூபித்துக்கொண்டார். கேட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1975-ம் ஆண்டு ஜனவரி மாதம்
‘பாபுலர் மெக்கனிக்’ பத்திரிகையில் 350 டாலரில் ‘ஆல்டர்’ என்ற பெயரில்
உருவாக்கப்பட்ட மைக்ரோ கம்ப்யூட்டர் பற்றிய விரிவான கட்டுரை வெளியாகி
இருந்தது. நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த அந்தப் புதிய
கம்ப்யூட்டர்
பற்றி மேலும் பல தகவல்களைத் தேடிப் படித்தார்கள் கேட்ஸும் ஆலனும். ‘இனி
கம்ப்யூட்டர்கள் இந்த உலகில் புதிய சரித்திரம் படைக்கப் போகின்றன’
என்பதையும், இந்த
கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராம்களை எழுதும் பணிக்கு எதிர்காலத்தில்
பெரும் வாய்ப்புகள் இருப்பதையும் தெரிந்துகொண்டார்கள்.
அதே ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக் கழக படிப்புக்கு குட் பை சொல்லி விட்டு,
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் நுழைய முடிவு செய்தார்கள். இருவரும்
சேர்ந்து
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். கம்ப்யூட்டர்களைக் கொண்டு
பல்வேறு வேலைகளைச் செய்வதற்குத் தேவையான சாஃப்ட்வேர் புரோகிராம்களை எழுதித்
தர
ஆரம்பித்தார்கள். ஓராண்டுக்குள்ளாகவே, உலகப் புகழ்பெற்ற ஐ.பி.எம்.
நிறுவனத்துக்கு எம்.எஸ்.டாஸ் (MS&DOS) என அழைக்கப்படும் கம்ப்யூட்டர்
ஆபரேடிங் சிஸ்டத்தை
உருவாக்கிக் கொடுக்க பெரும் வாய்ப்பு வந்தது.
கெளதம் ராம்
தூக்கமின்மை பிரச்னை..
- தூக்கத்தின் ரகசியத்தைப் பளிச்சென போட்டு சொல்லும் பாடல் வரிகள்தான் இது!
கடின உடல் உழைப்பும், உயிரியல் கடிகாரத்தை மீறாத வாழ்க்கை முறையையும் கொண்டவர்களுக்கு தூக்கம் என்பது வரம்! ஆனால், கடின உடல் உழைப்பு இல்லாத அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலருக்கும் நிம்மதியானத் தூக்கம் என்பது கனவே. இதே பிரச்னை இவர்களுக்கு தொடர்ந்து நீடித்தால், உடலும் மனமும் சோர்ந்துவிடுவதோடு புதுப்புது நோய்களையும் வரவழைத்துவிடும். ''நம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடம்புக்குத் தேவையான ஓய்வும், புத்துணர்ச்சியும் தூக்கத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. ஏ.சி. அறை, சொகுசு மெத்தையில் தூக்கத்தைத் தேடினாலும், இயல்பான வாழ்க்கை முறையை பின்பற்றும்போதுதான் தூக்கமும் கண்களைத் தழுவும் என்பதே மருத்துவ உண்மை!இரவில், ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். நல்ல ஆழ்ந்த தூக்கம் தூங்குபவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினாலே போதும். நன்றாகத் தூங்கி எழுபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
படுக்கை அறையிலும் லேப்டாப், செல்போன் சகிதம் அலுவலகம் நடத்துபவர்களும் பகலில் தூக்கம் இரவில் வேலை என்று வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிக் கொண்டவர்களும் இன்றைய நாளில் பெருகிவிட்டார்கள். இதனால், சுறுசுறுப்பின்மை, கவனமின்மை போன்ற தொல்லைகளுக்கு ஆளாகி, நல்லத் தூக்கமின்றி தவிப்பவர்களும் ஏராளம்.பாலில் உள்ள டிரிப்டோபன் அமினோ ஆசிட்டுக்கு (Trypto-phan amino ac) தூக்கத்தை வரவழைக்கும் சக்தி இருப்பதால், படுக்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வாழைப்பழம், ஓட்ஸ், தேனிலும் இந்த அமிலம் அதிக அளவில் இருக்கிறது. டீ, காபி போன்ற பானங்கள் தூக்கத்தை விரட்டியடிக்கும். எனவே, தூங்குவதற்கு ஐந்து மணி நேரம் முன்பாகவே பானங்கள் அருந்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. புகை, மது போன்ற தீயப் பழக்கங்களும் தூக்கத்துக்கு எதிரான செயல்கள்தான். வயிறுமுட்ட, சாப்பிட்டுவிட்டு தூங்குவதும் நல்லதல்ல. குறைந்தபட்சம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே சாப்பாட்டை முடித்துக் கொள்ளவேண்டும். இரவில் தூங்குவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியும் செய்து முடித்துவிடுவது நல்லது!''
படுக்கை அறை என்பது உறங்குவதற்கு மட்டுமே. வீடு, அலுவலகப் பிரச்னைகள் பற்றிப் பேசுவது, கணக்கு வழக்கு பார்ப்பது, பட்ஜெட் போடுவது இவற்றையெல்லாம் படுக்கையறையில் வைத்துக் கொண்டால், நித்திரை கெடுவதோடு மன நிம்மதியும் போய்விடும். எனவே படுக்கையில் சாய்வதற்கு முன்னரே, அன்றையப் பொழுதில் நடந்த நிகழ்வுகளையும் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளையும் மனதுக்குள்ளேயே ஓட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ண ஓட்டங்களை முழுவதுமாக ஓட்டிப் பார்த்துவிட்டு நிம்மதியாகப் படுக்கையில் சாய்வதே ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைத்துப் போகும்!''
டாக்டர் மதனமோகன்.
டாக்டர் விகடன்
சீனப் பெருஞ்சுவர் அழியுமா?
சீனப் பெருஞ்சுவர் அழிந்து கொண்டே வருகிறது என்று கூறுகிறார்களே, உண்மையா?
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது சீனப் பெருஞ்சுவர்.
தொழிநுட்பம் வளராத சூழ்நிலையில் மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இந்தச்
சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செங்கல், மண், மரம் போன்ற
பொருள்களால் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் சில இடங்களில் மிகவும்
பாதுகாப்பாக
நல்ல நிலையில் இருக்கிறது. சில இடங்களில் சுவற்றைச் சரி
செய்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை.
அவற்றைப் பாதுகாக்கும்
நடவடிக்கையும் அவ்வளவாக மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் இருபது ஆண்டுகளில்
இந்தப் பகுதிகள் மணற் புயலால் அழியும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள் மம்தாராம்.
--Thanks to MalaiKhahidam
ஐஸ் கட்டிய வரலாறு
இன்று வீட்டுக்கு வீடு
குளிர்சாதனப் பெட்டி யில் ஐஸ்
தயாரித்துக்கொள்கிறோம்; வீதிக்கு வீதி ஐஸ்கிரீம் கடைகள் இருக்கின்றன. ஐஸ்
கட்டிகளின் பின்னேயும்கூட கரையாத வரலாறு ஒன்று இருக்கிறது தெரியுமா?175
வருடங்களுக்கு முன், ஒரு சாதாரண மனிதன் ஐஸ் கட்டி வாங்க வேண்டும்
என்றால், அவன் டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு போக வேண்டும்.
காரணம், ஐஸ் கட்டி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. மருத்துவர்களுக்கும்
பிரபுக்களுக்கும் மட்டுமே ஐஸ் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுவும்,
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான ஐஸ்.இந்தியாவுக்கு ஐஸ் அறிமுகமானதன்
பின்னால் மிகப் பெரிய கதை இருக் கிறது.
சென்னையில் வசிக்கும் பலருக் கும் கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர்
இல்லம் தெரிந்து இருக்கும். அந்த இடத்தை இன்றும் 'ஐஸ் ஹவுஸ்’ என்றுதான்
அழைக்கிறார்கள். அது என்ன ஐஸ் ஹவுஸ்? அங்கே யார் ஐஸ் வணிகம் செய்தது?
எப்போது அந்த வணிகம் நடைபெற்றது?இந்தியாவுக்கு ஐஸ் கட்டிகள் அறிமுகமானதன்
விளைவு... வெறும் குளிர்ச்சி சார்ந்தது மட்டும்இல்லை, அது இந்தியர்களின் மன
இயல்பை பெருமளவு மாற்றியது. அந்த மாற்றத்தின்
உச்சபட்சம்தான் இன்று குளிர்சாதன வசதி இல்லாமல் பெரும்பாலான இந்தியர்களால்
தூங்க முடியவில்லை. பயணம் செய்ய முடியவில்லை, அலுவலகத்தில் வேலை செய்ய
முடியவில்லை. குளிரூட்டப்படாத பானங்களைக் குடிக்க முடியவில்லை. குளிர்ச்சி
இல்லாத அத்தனையும் வெறுக்கக்கூடியதாக மாறி இருக்கிறது சூழல்.
வெள்ளையர்களைப் போலவே நமக்கும் இந்திய வெப்பம் எரிச்சல் ஏற்படுத்துகிறது.
இந்த மன நிலை மாற்றத்தின் வேர், அமெரிக்காவில் இருந்து கல்கத்தாவுக்கு ஐஸ்
கட்டிகள் வந்து இறங்கிய செப்டம்பர் 14-ம் தேதி, 1833-ல்
தொடங்குகிறது.அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்கையாக உருவான பனிக்
கட்டிகளை வெட்டி
எடுத்து இந்தியாவுக்கு அனுப்பி, வருடத்துக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பணம்
சம்பாதித்த ஃபிரெட்ரிக் டூடரின் கதை, இந்திய வரலாற்றில் மறக்க முடியாதது.
ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள குளங்கள், ஏரிகள் உறைந்துபோய் பனிப்
பாளங்கள் ஆகிவிடும். வீணாகக்கிடக்கும் அந்தப் பனிக் கட்டிகளை வெட்டி
எடுத்து கப்பலில் வேறு நாடுகளுக்கு அனுப்பி, ஒரு புதிய வணிகத்தை
மேற்கொள்ளலாமே என்ற எண்ணம், டூடருக்கு உருவானது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு
ஐஸ் அனுப்பும் வணிகத்தைத் தொடங் கினார். ஆனால், அவர் நினைத்தது போல ஐஸ்
கட்டிகளை, உருகாமல் கப்பலில் கொண்டுபோக முடியவில்லை. 100 டன் ஐஸ் கட்டிகளை
கப்பலில் அனுப்பினால் போய்ச் சேரும்போது, அதில் 80 டன்
கரைந்துபோயிருக்கும். ஆகவே, உருகாமல் பனிக் கட்டிகளை அனுப்புவதற்காக அவர்
வைக்கோல் சுற்றிய பெட்டிகளில் அனுப்பத் தொடங்கினார். அப்படியும் பாதி
ஐஸ்கட்டிகள் உருகின.1830-ம் ஆண்டு ஐஸ் கட்டிகள் விற்பனையில் இருந்து மாறி,
காபி வணிகத்தில்
ஈடுபட்ட டூடர் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தார். இரண்டு லட்சம் டாலருக்கும்
மேலாகக் கடன் அவருக்கு ஏற்பட் டது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க
முடியத அவர் மீது, கடன்காரர்கள் வழக்கு தொடுத்தார்கள். சிறையில்
அடைக்கப்பட்டார். அதில் இருந்து, தற்காலிகமாக மீண்டு வந்த டூடரிடம் அவரது
நண்பரான சாமுவெல் ஆஸ்டின், தான் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி
செய்வதற்காக ஒரு கப்பல் வைத்திருப்பதாகவும், அது அமெரிக்காவில் இருந்து
இந்தியா போகும்போது காலியாகத்தான் போகிறது என்பதால், அதை டூடர்
பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உதவ முன்வந்தார்.
ஆஸ்டினை ஒரு பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு, இந்தியாவுக்கு ஐஸ் அனுப்பும்
வேலையை மீண்டும் தொடங்கினார் டூடர். இவருடைய அப்பா வழக்கறிஞர். மூத்த
சகோதரர் வில்லியம் டூடர், ஓர் இலக்கியவாதி. ஹார்வர்டில் படித்த டூடர், இள
வயதிலே வணிகம் செய்யத் தொடங்கிவிட்டார்.தனது 23 வயதில் அவர், ஒரு கப்பல்
நிறைய ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்ய
முயன்றபோது, அது முழு முட்டாள்தனம் என்று ஊரே அவரைக் கேலி செய்தது.
துறைமுகத்தில் இருந்து, பனிக் கட்டிகளைக் கப்பலில் ஏற்றுவதற்குக்கூட யாரும்
முன்வரவில்லை. ஆனால், ஐஸ் கட்டி வணிகத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க
முடியும் என்று டூடர் உறுதியாக நம்பினார். ஒரு கப்பல் நிறைய ஐஸ் கட்டிகளை
ஏற்றி அனுப்பி, 4,500 டாலர்கள் சம்பாதித்துக் காட்டினார் டூடர்.ஆனால் சில
முறை, ஐஸ் கட்டிகள் ஏற்றிச் சென்ற கப்பல் வழியில் கவிழ்ந்துபோய்,
உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பனிக் கட்டிகளுடன் சேர்த்து ஏற்றி அனுப்பப்பட்ட
பழங்கள் அழுகிப்போயின. அதனால், அவரது கடன் சுமை அதிகமாகி, அதில் இருந்து
மீள முடியாமல் சிறை வாசமும் அனுபவித் தார்.கடனில் இருந்து விடுபட உள்ள ஒரே
வழி இந்தியாவுக்கு ஐஸ் அனுப்புவதே என்று
உணர்ந்துகொண்ட டூடர், அதன் மூலம் சுலபமாகப் பணம் சம்பாதிக்க முடிவு செய்
தார். அந்த நாட்களில் பனிப் பாளங்களை அறுவடை செய்வது கஷ்டமான காரியம். அதை
முறைப்படுத்தி பனிக் கட்டிகளைச் சதுர வடிவில் வெட்டி, வைக்கோல் சுற்றி
அனுப்பினால், அதை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று திட்டமிட்டார்
டூடர்.அதன்படி, பாஸ்டன் பகுதியில் உள்ள ஏரிகளில் உறைந்த பனிக் கட்டிகளை அறு
வடை செய்து கப்பலில் ஏற்றினார். 180 டன் கொள்ளவு உள்ள கிளிப்பர் டுஸ்கானி
கப்பல்,
அமெரிக்காவில் இருந்து 1833-ம் வருடம் மே மாதம் 7-ம் தேதி இந்தியாவுக்குப்
புறப்பட்டது. 16,000 மைல்கள் தூரத்தைக் கடந்து, அது கொல்கத்தாவை அடைய
வேண்டும். அதற்கு நான்கு மாதங்கள் ஆகும். அது வரை ஐஸ் கட்டிகள் கரையாமல்
இருக்க, முறையான பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு இருந் தது. அதன் கேப்டனாக
இருந்தவர் லிட்டில் ஃபீல்டு. டூடரின் சார்பில் விற்பனைப் பிரதியாக
கப்பலில் உடன் வந்தவர் வில்லியம் ரோஜர்ஸ்.
1833-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவை வந்து அடைந்தது டூடரின் கப்பல்.
50 டன்னுக்கும் மேலான ஐஸ், வழியிலே கரைந்துபோய்விட்டது. வங்காள மக்கள்
அப்போதுதான் முதன் முறையாக ஐஸ் கட்டிகளைப் பார்த்தார்கள். அவர்களால் நம்பவே
முடியவில்லை. தொட்டால் கைகளைச் சில்லிடவைக்கும் அந்த மாயப் பொருளை
வியப்போடு பார்த்தார்கள்.கல்கத்தா துறைமுகத்தில், ஐஸ் கட்டிக்கு வரி போடுவதா, வேண்டாமா என்ற விவாதம்
நடந்தது. ஐஸுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை
வைக்கப்பட்டது. அதை கவர்னர் வில்லியம் பென்டிக் ஏற்றுக்கொண்டார்.
அத்துடன், ஐஸ் கட்டிகளை ஏற்றி வரும் கப்பலில் இருந்து இரவில் சரக்குகளை
இறக்கிக்கொள்வதற்கும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.'இந்தியக் கோடையின் வெப்பத்தில் தகித்துப் போயிருந்த வெள்ளையர்களுக்கு,
அந்த ஐஸ் கட்டிகள் கடவுள் கொடுத்த அரிய பரிசைப்போல இருந்தது’ என்று
எழுதுகிறார் ஹோர்டிங் என்ற ஆங்கில அதிகாரி. ஐஸ் கட்டி இறக்குமதி, அந்தக்
காலத்தில் கல்கத்தா நகரில் பரபரப்பாகப் பேசப்பட்டது.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது
'நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலில், ஐஸ் கட்டியை முதன்முதலாகப் பார்க்கப்
போன சம்பவம் ஒன்றை விவரித்திருப்பார். அதில், ஐஸ் கட்டியைத் தொடும் சிறுவன்
'அது ஒரு விந்தை, இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு’ என்று
சொல்வான். அந்த மன நிலையே கல்கத்தாவுக்கு ஐஸ் வந்தபோது மக்களிடமும்
இருந்தது.மருத்துவர்களும் மிகவும் வசதியானவர்களும் மட்டுமே ஐஸ் வாங்க
அனுமதிக்கப்பட்டார்கள். ஐஸ் கட்டிகளை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக்
கொள்வது என்று மக்களுக்குத் தெரியவில்லை. அதை எப்படிப் பயன்படுத்துவது
என்பதும் புரியவில்லை. ஐஸ் கட்டியை மண்ணில் முளைக்கவைத்தால், ஐஸ் மரம்
வருமா என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட் டார்கள்.குளிர்பானம், மது, சுவையூட்டப்பட்ட பால் ஏடு, பழச் சாறு ஆகியவற்றுடன் ஐஸ்
சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது. அதைவிடவும், சமைத்த உணவுகளை
இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் ஐஸ் கட்டிகள் பாதுகாத்த விந்தை
ஆங்கிலேயக் குடும்பங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. காய்ச்சல் மற்றும்
வயிற்று நோவைப் போக்க மருத்துவர்கள் ஐஸைப் பரிந்துரை செய்ய
ஆரம்பித்தார்கள்.
விகடன்
ஐஸ் ஹவுஸ்
கல்கத்தாவில் வரி இல்லாமல் அனுமதிக்கப்பட்ட ஐஸ் கட்டிக்கு, பம்பாய்
துறைமுகம் வரி விதித்தது. தென் மேற்குப் பருவ காலத்தில் ஐஸ் ஏற்றி வரும்
கப்பல்களுக்கு, 110 ரூபாய் வரி விதிக்கப்பட்டது. இதே வரி, வட கிழக்குக்
காற்று வீசும் பருவ காலத்தில் பாதியாகக் குறைக்கப்பட்டு 55 ரூபாய் மட்டுமே
விதிக்கப்பட்டது. அத்துடன், லைட் ஹவுஸ் வரியாக 15 ரூபாயும், காவல் துறை வரி
10 ரூபாயும் விதிக்கப்பட்டது. அன்று, 450 கிராம் எடை உள்ள ஐஸ் கட்டியின்
விலை நான்கு அணா.மதராஸுக்கு ஐஸ் கட்டிகள் வந்து இறங்கியபோது, அதற்கு வரி
விதிக்கப்படவில்லை.
முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டது. டூடர் தனது ஐஸ் கம்பெனியின்
சேமிப்புக் கிடங்குகளை, கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகிய மூன்று
நகரங்களில் அமைத்தார். அப்படி டூடர் கட்டிய கட்டடம்தான் சென்னையில் இன்று
விவேகானந்தர் இல்லமாக உள்ள ஐஸ் ஹவுஸ்!ஐஸ் ஹவுஸ் கட்டடம், அன்று கடல் அருகே
இருந்திருக்கிறது. காலப்போக்கில்
கடல் உள்வாங்கியதால், இது கடலில் இருந்து இன்று தள்ளி இருக்கிறது!அந்த
நாட்களில், இந்தக் கட்டடத்தில் ஒரு கண்ணாடிப் பெட்டி ஒன்றில், மக்கள்
பார்த்து மகிழ்வதற்காக பெரிய ஐஸ் கட்டி ஒன்று வைக்கப்பட்டு இருக்குமாம்.
அந்தக் காலகட்டத்தில், விருந்துகளில் ஐஸ் கலந்த பானம் தரப்படுவது மிகப்
பெரிய கௌவரமாகக் கருதப்பட்டது.
மருத்துவக் காரணம் காட்டி ஐஸ் கட்டி வாங்கி, சொந்த உபயோகம் செய்து
ஏமாற்றியதாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. 1834-ல் இருந்த
இந்த நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாறி, மெள்ள ஐஸ் வணிகம் சூடு பிடிக்க
ஆரம்பித்தது. பம்பாய், கல்கத்தா, மதராஸ் ஆகிய நகரங்களில் புதிய ஐஸ்
வணிகர்கள் உருவானார்கள். அதற்கான பாதுகாப்பு கிடங்குகள் உருவாகின. கோடைக்
காலங்களில் ஐஸ் வாங்க சண்டை, தள்ளுமுள்ளு நடந்ததோடு, விலையும் கடுமையாக
ஏறியது. அன்று தொடங்கிய ஐஸ் கட்டி வணிகம் 1880-ம் ஆண்டு வரை 47 ஆண்டுகள்
மிக முக்கியமான தொழிலாக நடைபெற்றது. இந்த நிலையில் கிழக்கிந்திய
கம்பெனியின் கவர்னர் பென்டிக் - டூடர் ஆகிய இருவரும் ஓர் ஒப்பந்தம்
செய்துகொண்டனர். அதன்படி, டூடரைத் தவிர வேறு யாரும் ஐஸ் கட்டி வியாபாரம்
செய்ய முடியாது. மேலும், ஐஸ் கட்டிகளைப் பாதுகாப்பாக சேமித்துவைக்க
கிழக்கிந்திய கம்பெனியே, டூடருக்கு ஓர் இடம் ஒதுக்கிக் கொடுத்தது.
வில்லியம் பென்டிக் ஒரு படி மேலே போய், ஐஸ் ஏற்றி வந்த கப்பலின்
கேப்டனுக்கு ஒரு தங்கக் கோப்பையைப் பரிசாக அளித்துத் தன் அன்பை
வெளிப்படுத்தினார்.அமெரிக்காவில் இருந்து 1856 முதல் 1882 வரையிலான
காலத்தில், நாலு லட்சத்து
75,000 டன் ஐஸ் கட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டு, கப்பலில் இந்தியாவுக்குக்
கொண்டுவரப்பட்டு உள்ளது. அதில், ஒரு லட்சத்து 21,000 டன் வழியிலேயே
கரைந்துபோனது. மூன்று லட்சத்து 53,450 டன் ஐஸ் கட்டிகள் இந்தியா மற்றும்
அண்டை நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.இந்த ஐஸ் வியாபாரத்தால், தனது
இரண்டு லட்சத்து 10,000 டாலர் கடனைத்
திருப்பிக் கொடுத்த டூடர், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 85,000 டாலர்கள்
சம்பாதித்து இருக்கிறார். அதனால், இந்தியாவில் அவர் ஐஸ் சேமிப்புக்
கிடங்குகளை உரிய முறையில் கட்டி விற்பனையை அதிகரித்து வந்தார்.இந்த ஐஸ்
ஏற்றுமதி விஷயத்தில் இன்னோர் உண்மையும் வெளிப்படுகிறது. அன்று,
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்தே அதிகமான பொருட்கள் ஏற்றுமதி
ஆகியிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த பாதிக்
கப்பல்கள் காலியாகத்தான் வந்து இருக்கின்றன. இன்று, அந்த நிலை
தலைகீழாகிவிட்டது.
ஐஸ் கட்டிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டு, பருத்தி, வாசனைப்
பொருட்கள், தேக்கு, சந்தனம், மிளகு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா போன
கப்பலில், இந்தியாவில் இருந்த கரப்பான் பூச்சிகளும் போயின. இந்த ஐஸ்
வணிகம் பற்றி இயற்கையியலாளர் தோரூ, 'வால்டன்’ என்ற நூலில் விரிவாக
எழுதி இருக்கிறார். அவர், வால்டன் என்ற ஏரியின் அருகில் இயற்கையோடு
இணைந்து வாழ்ந்தவர். வரி கொடாமை, ஒத்துழையாமை போன்ற போராட்டங்களை இவர்தான்
முதலில் நடத்தியவர். இவரைப் பின்பற்றியே அந்த வழிமுறைகளைக் காந்தி
இந்தியாவில் அறிமுகம் செய்தார். வால்டன் ஏரிப் பகுதியில் இருந்து
நாளெல்லாம் பனிப் பாளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இந்தியா போவதை, கங்கையும்
வால்டன் தண்ணீரும் ஒன்று சேரும் சங்கமம் என்றே குறிப்பிட்டு
இருக்கிறார்.நீராவியைப் பயன்படுத்தி செயற்கை ஐஸ் உருவாக்க முடியும் என்று
நிரூபணம்
ஆகும் வரை அமெரிக்காவில் இருந்து ஐஸ் இறக்குமதி செய்யப்பட்டு முக்கிய
வணிகமாக நடைபெற்று வந்தது. 1878-ம் ஆண்டு பெங்கால் ஐஸ் கம்பெனி என்ற
செயற்கை ஐஸ் தயாரிக்கும் கம்பெனி தொடங்கப்பட்டது. ஆகவே, டூடரின் ஐஸ் வணிகம்
சரிவை நோக்கிச் சென்றது. 1882-ல் டூடரின் ஐஸ் வணிகம் முற்றிலும்
நின்றுபோனது.20 ஆண்டு காலம் இந்தியாவின் 'ஐஸ் ராஜா’ என்று கொண்டாடப்பட்ட
டூடர்,
கல்கத்தாவில் நிறைய இடங்களை விலைக்கு வாங்கியதோடு, அமெரிக்காவிலும் பெரிய
கோடீஸ்வரராகவே வாழ்ந்தார்.சென்னையில் உள்ள ஐஸ் அவுஸ் 1842-ம் ஆண்டு
கட்டப்பட்டது. கப்பலில் இருந்து
இறக்குவதற்கு வசதியாக, கடற்கரையிலேயே பெரிய கட்டடம் ஒன்றை டூடர்
உருவாக்கினார். அங்கே, தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஐஸ்
விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில், காலை இரண்டு மணி நேரம் மட்டுமே ஐஸ்
விற்பனை நடந்தது.செயற்கை ஐஸ் வந்த பிறகு, ஐஸ் ஹவுஸை விற்றுவிட முடிவு
செய்தார் டூடர்.
அன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த பிலிகிரி அய்யங்கார், ஐஸ்
ஹவுஸை விலைக்கு வாங்கி, குடியிருப்பதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து பெரிய
மாளிகையாக மாற்றினார். தனது வழிகாட்டியான, உயர் நீதிமன்ற நீதிபதி கெர்னனின்
நினைவாக, கெர்னன் கோட்டை என்று பெயரும் சூட்டினார்.1897-ம் ஆண்டு
சிகாகோவில் இருந்து தாய்நாடு திரும்பிய சுவாமி
விவேகானந்தருக்கு மதராஸ் எழும்பூர் ரயில் நிலையத்தில் மிகுந்த வரவேற்பு
அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார், அவரைத் தனது
வீட்டில் தங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அங்கு தங்கிய விவேகானந்தர்,
தினமும் ஓர் உரை நிகழ்த்தினார்.1906-ல் பிலிகிரி அய்யங்கார் இறந்த பிறகு,
அவரது வீடு
விற்கப்பட்டது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் அந்தக்
கட்டடத்தை விலைக்கு வாங்கினார். பின்னர், 1917-ல் அரசாங்கம் அந்தக்
கட்டடத்தை வாங்கி, கணவனை இழந்த பிராமணப் பெண்களுக்கான இலவசத் தங்கும் இடமாக
மாற்றியது. . பிறகு, அந்தக் கட்டடத்தில் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவியர்
தங்கும் விடுதி அமைக்கப்பட்டது.1963-ல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு
விழாவை முன்னிட்டு, அரசு அந்தக்
கட்டடத்தின் பெயரை 'விவேகானந்தர் இல்லம்’ என மாற்றியது. டூடர்,
கல்கத்தாவிலும் பம்பாயிலும் அமைத்து இருந்த ஐஸ் ஹவுஸ்கள் இன்று இல்லை.
ஆனால், சென்னையில் மட்டுமே ஐஸ் ஹவுஸ் இன்னும் ஒரு நினைவுச் சின்னமாக
இருக்கிறது.1,700-களில் குளிர்சாதனக் கருவி குறித்து ஆய்வுகளை
மேற்கொண்டவர்
ஸ்காட்லாண்டில் வசித்த வில்லியம் கல்லன். 1805-ல் ஆலிவர் இவான்ஸ் என்ற
அமெரிக்கர் முதன்முதலாக குளிர்சாதனப் பெட்டியை வடிவமைத்தார். ஆனால், அது
மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. 1834-ம் ஆண்டு ஜேக்கப் பெர்கின்ஸ்
என்பவர், அதன் திருத்தப்பட்ட வடிவத்தை உருவாக்கினார்.ஜெனரல் மோட்டார்ஸ்
நிறுவனம் 1911-ல், மக்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியை
அறிமுகப்படுத்தியது. 1918-ல் கெல்வினேட்டர் நிறுவனம் முறைப்படுத்தப்பட்ட
குளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்தது. 1958-ல்தான் இந்தியாவில்
குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இந்த 50 ஆண்டுகளில்
இந்த ஒரு சாதனத்தின் வழியே, இந்திய மக்களின் வெப்ப மண்டல உணவுப்
பழக்கங்கள் பெருமளவு மாறிவிட்டன. கூடவே, குளிர்ச்சிக்குப் பழகுதல் என்ற
புது வகைத் தகவமைப்பும் இந்தியர்களிடம் உருவாகி இருக்கிறது.
'இந்தியாவில் எதைத் தொட்டாலும் சூடாகவே இருக்கிறது. இவ்வளவு சூடான
நிலப்பகுதியில் வாழ்ந்து கொண்டும், மக்கள் சுடச்சுட உணவை சாப்பிட
விரும்புகிறார்கள். வெக்கை இவர்களுக்கு பிரச்னையே இல்லை. குளிர்ச்சி என்பதை
ஆடம்பரம் என்று இந்திய மக்கள் நினைக்கிறார்கள்’ என்று ரோஜர், தனது 1841-ம்
ஆண்டு நாட்குறிப்பில் எழுதி இருக்கிறார். ஆனால், அந்த மனநிலை இன்று
முற்றிலும் மாறிவிட்டது. குளிர்சாதனக் கருவிகளின் வருகையால் மூடப்பட்ட
ஜன்னல்களும், விலக்கப்பட்ட சூரிய வெளிச்சமும், வெம்மையறியாத உடலும் பல
புதிய நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன.ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் கோபத்தில் சொன்னது இன்னமும் நினைவில்
இருக்கிறது. ''இந்த ஃபிரிட்ஜ் வந்த பிறகு பசியோடு வரும் பிச்சைக்காரனுக்கு
மிச்சம் மீதியுள்ள உணவைத் தர மறுக்கிறார்கள். உணவை நான்கு நாட்கள்கூட
ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுகிறார்கள்!''அந்தக் குரல் சமூக வரலாற்றில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது. இந்த
விமர்சனக் குரலுக்கு நம்மிடம் பதில் இல்லை. விஞ்ஞானம், மனிதர்களின்
வசதிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் துணை நிற்பது போலவே, மனித
இயல்புகளைக் கைவிடுவதற்கும், சக மனிதனைப் புறக்கணிப்பதற்கும் காரணமாக
இருக்கிறது என்பதுதான் உண்மை.ஒவ்வொரு கோப்பை ஐஸ்கிரீம் சாப்பிடும்போதும் அதை நாம் கட்டாயம் நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
சீனா- இந்தியா: ஜெயிக்கப் போவது யாரு?
வருகிற வியாழக்கிழமை நம் நாட்டின் 63-வது
குடியரசு தினம். இன்றைக்கு அதிவேக பொருளாதார வளர்ச்சி காணும் உலகின் ஐந்து
முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த சில பத்தாண்டுகளில்
அமெரிக்காவையே நாம் முந்திவிடுவோம் என்றாலும், நம் பக்கத்து நாடான சீனாவை
நம்மால் முந்திக் கொண்டு போக முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி.
இத்தனைக்கும் 1990 வரை
இந்தியாவும் சீனாவும் சம பலத்தில் இருந்த நாடுகள்தான். ஆனால், இப்போது சீனா
6 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரம். ஆனால், நம் இந்திய பொருளாதாரமோ
வெறும் சுமார் 2 டிரில்லியன் டாலர் மட்டுமே. எப்படி உருவானது இத்தனை பெரிய
இடைவெளி? சீனாவின் பலமும், பலவீனமும் என்ன? இந்தியாவின் பலமும் பலவீனமும்
என்ன? சீனாவை முந்த வேண்டுமெனில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?''இந்தியா
1991-ம் ஆண்டுதான் புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகம் செய்தது.
ஆனால், சீனாவோ 1978-ம் ஆண்டே அதை செய்துவிட்டது. எனவே, இந்த 13 வருட
இடைவெளி இருந்து கொண்டுதான் இருக்கும். இது மாற நீண்ட காலம் ஆகும்''
பார்வை மாற வேண்டும்!
''முதல் தேவை, அணுகுமுறை மாற்றம். மேற்கத்திய உலகத்துக்கு என்ன நன்மையோ,
அதுவே நமக்கும் நன்மை என நாம் நினைக்கிறோம். இது தவறு. உதாரணமாக,
உலகமயமாக்கலிலிருந்து தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டது சீனா.
நாமோ, உலகமயமாக்கலை தெய்வமாக நினைத்து, அதனிடம் சரணாகதி அடைந்து
கிடக்கிறோம்.
வெளிநாட்டு சட்டங்களை மதிக்கிற அளவுக்கு நம் நாட்டுச் சட்டங்களை நாம்
மதிப்பதில்லை. சில வெளிநாட்டு நிறுவனங்களுக்காக நம் நாட்டுச் சட்டங்களை
மாற்றத் தயாராக இருக்கிறோம். சீனாவில் அப்படி இல்லை.
எந்த நாட்டு நிறுவனமாக இருந்தாலும் சீன சட்டப்படிதான் நடக்க வேண்டும்.
ஒழுங்கான விதிமுறைகள் இல்லாமல் வளர்ச்சி இருக்காது என்பதை சீன அரசாங்கம்
புரிந்து வைத்திருக்கிற மாதிரி நம் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மொழியறிவு!
சீனர்கள் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால்,
நம் நாட்டில் இன்னமும் ஆங்கிலத்தைத் தாண்டி அடுத்த மொழியை கற்றுக் கொள்ள
நாம் நினைக்கவில்லை. குறிப்பாக, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை கற்க
வேண்டும். அப்போதுதான் கிழக்காசிய நாடுகளுடனும் போட்டி போட முடியும்.
வங்கி!
இந்த விஷயத்தில் நம் கை கொஞ்சம் ஓங்கியே இருக்கிறது. அனைத்துவிதமான முறையான
தொழில்களுக்கும் இங்கு கடன் கிடைக்கும். வட்டி விகிதத்திலும் எந்தவிதமான
ஏற்றத்தாழ்வு களும் இல்லை.ஆனால், சீனாவில் அப்படியல்ல. தனியார் நிறுவனங்களுக்கு அதிக வட்டியும், அரசு
நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் தருவதாக சொல்கிறார்கள்.
என்றாலும், அந்நாட்டு வங்கிகளின் நிகர வாராக் கடன் 35% சதவிகிதம். ஆனால்,
இந்திய வங்கிகளின் நிகர வாராக்கடன் மிகக் குறைவு. தவிர, சீனா ஏற்றுமதியை அதிகம் நம்பி இருக்கிறது. உலகளவில் ஏதாவது பிரச்னை
ஏற்பட்டால் சீனாவால் அதை சமாளிக்க முடியாது. உதாரணமாக, 2008-ல்
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, நம் பங்குச்
சந்தையைவிட சீனச் சந்தை இரண்டு மடங்கு சரிந்தது.
தொழில்!
சீனாவில் தொழிற்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொழில்
முனைவோர்களுக்கு அங்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால், இங்கு அப்படி
இல்லை. இந்தியாவின் வளர்ச்சியில் சிறு மற்றும் குறுநிறுவனங்களின்
பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் எஸ்.எம்.இ.க்கள்
இருக்கின்றன. ஆனால், தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் இக்கால
இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. ஏதாவது ஒரு வேலையில் போய் செட்டில் ஆகவே
எல்லோரும் நினைக் கிறார்கள். இந்த சோம்பேறித்தனம் மாற வேண்டும்.
இன்ஃப்ராஸ்ட்ரக்சர்!
இதில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. நமக்கு 25 வருடங்களுக்குப்
பிறகுதான் சீனாவில் ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால், சீனாவில் தற்போது
மணிக்கு சராசரியாக 200 கி.மீட்டருக்கு மேல் ஓடும் ரயில்கள் அதிகம்.
ஷாங்காய் நகரத்துக்கும் பெய்ஜிங் நகரத்துக்கும் இடையேயான 1,300 கி.மீ.
தூரத்தைக் கடக்க 5 மணி நேரம் போதும். ஆனால், இதே அளவு இடைவெளி கொண்ட
சென்னையில் இருந்து மும்பை செல்ல 24 மணி நேரம் ஆகிறது.நாலு வருடத்திற்குள் ஒரு ஒலிம்பிக் போட்டியையே ஓஹோவென சீனா நடத்தியது.
ஆனால், ஒரு காமன்வெல்த் போட்டியை நடத்தவே நாம் தடுமாறிவிட்டோம். எத்தனை
பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் என்றாலும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே
செயல்படத் தொடங்கிவிடுகிறது. நம் நாட்டில் எத்தனை சிறிய திட்டமானாலும்
குறித்த தேதியில் நிறைவேறியதாகச் சரித்திரம் இல்லை. இதனால் செலவு பல மடங்கு
உயர்ந்துவிடுகிறது. மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறை களிலும் நமக்கும்
சீனாவுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கிறது.பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் சீனாவை நாம்
சமாளிக்க வேண்டும். பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடன் சீனா நட்பாக
இருப்பது நமக்கு பிரச்னைதான். இந்நாடுகளுடன் நாமும் நட்புடன் நடக்க
வேண்டும். இந்நாடுகளுக்கு அதிக பிஸினஸ் தருவதன் மூலம் அவர்களை நம்
நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.உதாரணமாக, இலங்கையில் அம்பாந்தோட்டை என்னுமிடத்தில் சீன அரசின் உதவியுடன்
ஒரு புதிய துறைமுகத்தை கட்டி வருகிறது இலங்கை அரசாங்கம். தூத்துகுடியில்
இருந்து இந்த துறைமுகத்திற்கு அதிக பொருட்களை கொண்டு சென்று, அங்கிருந்து
பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் இலங்கை நம்மை பகைத்துக் கொள்ள
விரும்பாது.
இறுதியாக, இந்தியாவின் வளர்ச்சிக்கு நம்பிக்கையற்ற, குழப்பமான
அணுகுமுறையால் உருவாகும் பயமும், தடுமாற்றமும் பெரிய தடையாக இருக்கும்
என்றால், சீனாவுக்கு அதன் அதீத இறுமாப்பு ஒரு தடையாக இருக்கும்.நாம் பயத்தை
விட்டொழிக்கப் போகிறோமா அல்லது சீனா இறுமாப்பை விட்டொழிக்கப்
போகிறதா என்பதைப் பொறுத்தே சரித்திரத்தில் ஜெயிக்கப் போவது யார் என்று
தெரியும்'!
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வது காலம்தான். பார்ப்போம், இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்கிறதென்று!
விகடன்
Subscribe to:
Posts (Atom)