நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, September 26, 2011

விஜயகாந்தின் வரலாற்றுத் தவறு.

ண்டுக்குள் 8.36 சதவிகித வாக்குகளை பெற்ற விஜயகாந்த் இரண்டு கட்சிகளிடமும் மரியாதையை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
 VIJAYAKANTH_2
2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று விஜயகாந்தை புறக்கணித்து விட்டு, தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் கட்சி வெற்றி பெற முடியாது என்னும் நிலைக்கு வளர்ந்தார்.

2011 சட்ட மன்றத் தேர்தலில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று திமுக காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுமே அஞ்சின.  ஆகையால், பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் தாண்டி அமைந்தது தான் அதிமுக தேமுதிக கூட்டணி.   அன்றைய சூழலில், இறுதி நேரத்தில் கூட்டணி ஏற்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள் கருணாநிதியும், அவர் வளர்ப்பு மகன் ஜாபர் சேட்டும்.  ஆனால் அத்தனை முயற்சிகளையும் தாண்டி, அந்தக் கூட்டணி அமைந்து அமோக வெற்றி பெற்றது.   திமுகவை 3வது இடத்துக்கு தள்ளி முக்கிய எதிர்க்கட்சியாகவும் வெற்றி பெற்றது தேமுதிக.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஏற்பட்ட புதிய சட்டமன்றத்தில் பெரும்பாலான நாட்களில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.  ஒரு சில நாட்களே கலந்து கொண்டு பேசினார்.   தேமுதிகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் புதியவர்கள்.   சட்டமன்ற அனுபவம் இல்லாதவர்கள்.   விஜயகாந்த் சட்டசபையில் இருந்து அவர்கள் அத்தனை பேருக்கும் வழிகாட்டியிருக்க வேண்டும்.  விஜயகாந்த் மற்றும் அவர் கட்சியினர் முக்கிய விவகாரங்களில் பங்கேற்று விவாதங்களில் பேசியிருக்க வேண்டும்.  விஜயகாந்த் வராத காரணத்தால், விஜயகாந்த் கட்சியின் எம்எல்ஏக்கள் பேச முற்பட்ட பல நேர்வுகளில், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக ஜெயலலிதா, முதலில் விபரங்களை தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று சட்டசபையில் கூறியிருக்கிறார்.  இது போன்ற நேர்வுகளில் விஜயகாந்த் அவையில் இருந்திருந்தாரேயானால், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக குறுக்கிட்டு பேசியிருக்க முடியும்.  ஆனால், 27 எம்எல்ஏக்கள் கிடைத்த திருப்தி, விஜயகாந்தை, காமராஜரைப் போல படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று எண்ண வைத்து விட்டதோ என்று தோன்றுகிறது.

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது போலவேதான் தற்பொழுது உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயலலிதா நடந்து கொண்டு இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி ஊர் கூடி இழுத்த தேர்.    தேமுதிக, இடது சாரிகள், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், செ.கு.தமிழரசனின் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை என அத்தனை கட்சிகள் மற்றும் அந்த கட்சித் தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி.    அது இரட்டை இலைக்கு மட்டும் விழுந்த வாக்காக கருதவே முடியாது. ஆனால், ஜெயலலிதா, கூட்டணிக் கட்சிகளை கருவேப்பிலையாக பயன்படுத்தியதை நிரூபித்து விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில், விஜயகாந்த் தனது அரசியல் சாதுர்யத்தை பயன்படுத்துவார் என்று எதிர்ப்பார்த்தால், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதியாக செயல்பட்டிருக்கிறார்.
 captain
ஜெயலலிதா தன்னிச்சையாக எடுத்த முடிவால், கடும் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளான, இடது சாரிகளோடு முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.  சரத்குமார் கட்சியோடும், புதிய தமிழகத்தோடும் பேசியிருக்க வேண்டும்.  தேவைப்பட்டால் விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் இணைத்துக் கொண்டிருக்கலாம்.  விஜயகாந்துக்கு இன்றும் பெரிய மனது இருந்தால், வைகோவோடும் பேசியிருக்கலாம்.   இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு மூன்றாவது அணியைக் கட்டி, இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருந்தார்களேயென்றால், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரு வலுவான மாற்றாக அந்த அணி அமைந்திருக்கும்.

திமுக அல்லது அதிமுகவுக்கு மாற்றாக வேறு கட்சியே இல்லை என்று மருகிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த மூன்றாவது அணி அருமருந்தாக இருந்திருக்கும். இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சிக்கல்கள் இல்லாமல் இருக்காது.  சிக்கல்கள் கண்டிப்பாக இருக்கும்.  ஆனால் அந்தச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, தொகுதி பங்கீடு நடந்திருக்குமேயென்றால், ஒரு மிகப் பெரிய மாற்று சக்தியாக அந்த அணி உருவாகியிருக்கும்.  ஓரளவுக்கு கணிசமான தொகுதிகளில் இந்த அணி வென்றால், அதிமுகவின் ஏகபோகத்தை உடைப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கும்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நிர்வாகிகள் எம்எல்ஏக்களை விட மக்களோடு நேரடி தொடர்பு உள்ளவர்கள்.  அவர்கள் மக்களுக்கு செம்மையான சேவையை செய்வார்களேயானால், அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் இவர்கள் செய்த மக்கள் பணி நிச்சயம் பலனளிக்கும். விஜயகாந்த் ஒரு பக்குவமான அரசியல் தலைவராக உயர்ந்திருப்பார்.

ஆனால் இன்று விஜயகாந்த் முதல் கட்டமாக 9 மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததோடு, பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.

இது விஜயகாந்தின் அரசியல் பக்குவமின்மையா அல்லது, தனது கட்சி ஏகபோகமாக வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பமா என்பது தெரியவில்லை.  ஆனால், இது ஒரு வரலாற்றுத் தவறு என்பது மட்டும் உறுதி.

இந்த தவறால், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து, அதிமுகவுக்கு வெற்றியை தங்கத் தட்டில் வைத்து தரப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

Thanks to SAVUKKU

No comments:

Post a Comment