நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, September 12, 2011

கனிமொழி பிணையில் (ஜாமீனில்) வருவது எப்படி?

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com
லகின் மிகப்பெரிய ஜனநாயகமான நமது இந்திய ஜனநாயகத்தில் பிரச்சினை என்றாலே, அதில் தொடர்பு உடையவர்களுக்குத் திண்டாட்டமோ திண்டாட்டம் என்றால், வக்கீல்களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்தான்!
அதிலும் கைது என்றால், சம்பந்தப்பட்டவர்களின் வசதி, வேலை வாய்ப்பு, வருமானம், கௌரவம், நிலபுலம், பின்புலம் ஆகிய பல்வேறு காரண காரணிகளை வைத்துதான் பிணையில் எடுப்பதற்கான கட்டணத்தை லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிர்ணயிக்கிறார்கள் என்பதால், கொண்டாட்டத்திலும் கொண்டாட்டம்தான்!!
ஆனால், உண்மையில் பிணை பெற்றுத்தர (ஜாமீன் வாங்கித்தர) குற்றவியல் நடுவர் மன்றம் என்றால் ரூ 175, மாவட்ட அமர்வு நீதிமன்றம் என்றால் ரூ 225, உயர்நீதிமன்றம் என்றால் ரூ 350 மட்டுமே கட்டணமாகும். உச்சநீதிமன்றத்திற்கு எவ்வளவு என சரியாக தெரியவில்லை. குத்து மதிப்பாக சொன்னால் கூட ரூ 500 முதல் உயர்நீதிமன்றத்தின் இரட்டிப்பு கட்டணமான 700 க்குள் தான் இருக்கும். அவ்வளவே!
ஆனால், நமது நீதியைத்தேடி... பிணை எடுப்பது எப்படி? நூலைப் படித்த வாசகர்கள் சூழ்நிலையைப் பொறுத்து சல்லிக்காசு முதல் அதிகபட்ச பதிவஞ்சல் செலவான ரூ 25 மட்டுமேதான்! நான் முதன் முதலாக கைது செய்யப்பட்ட சந்தோசத்தில், பிணையில் வர நான் விரும்பி, மனு எழுதுவதற்கான வெள்ளை காகிதம் வாங்க 75 பைசா செலவு செய்தேன்.
உண்மையில், கைது செய்யப்பட்டுள்ள ஒரு கைதிக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை, அடிப்படை உரிமை தேவைகள் எல்லாம் அரசாலும், நீதித்துறையாலும் தான் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், என்ன கொடுமை பாருங்க!
என்னோட நல்ல நேரமும், கெட்ட நேரமும் ஒண்ணு சேர்ந்ததில, சட்டம் தெரியாத பெண் நடுவர் கிட்ட சட்டம் பேச நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. நடுவர் பெயரோ மங்களகரமான "மங்களம்". பெத்தவங்க தன் மக மங்களகரமா இருக்கணும்னு நினைத்துதான் இந்தப் பெயரை வைச்சிருப்பாங்க போல. ஆனால், சுய அறிவுல மட்டுமல்ல; சொல்லறிவுல கூட, மங்களம் மகா மழுங்கல். அதனாலதான், பிணை எடுப்பது நூலில், "மக்கு மங்களம்" என்று புனைப்பேரு வச்சி எழுதியிருக்கேன். பேரு நல்லாயிருக்கா! உங்களுக்குப் பிடிச்சிருக்கா?
இந்த மக்கு மங்களத்துக்கிட்ட எவ்வளவோ தெளிவா சட்டத்தை எடுத்துச் சொல்லியும் கேட்கல. அதனால, நீதிமன்ற கட்டண ஸ்டாம்புக்காக கூடுதலாக ரூ 2 வெட்டியா செலவழிக்க வேண்டியதா போயிடுச்சு. ஆக, பெயில்ல வந்ததுக்கு மொத்த தெண்டச் செலவு ரூ 2.75 ஆகிப்போச்சு. இந்தத் தொகையில சிறைக் கைதிகள் பதினோரு பேருக்கு 25 பைசா போஸ்ட் கார்டுலியே உருப்படியான ஆலோசனைகளைச் சொல்லி பிணையில் வர வைத்திருப்பேன்.
என்னாது போஸ்ட் கார்டுலயே ஆலோசனை சொல்லி, ஜெயில்ல இருக்கிறவங்கள பெயில்ல வர வச்சிரூவிங்களா...? அதெப்படி செய்ய முடியும் என்ற சந்தேகமெல்லாம் வேண்டவே வேண்டாம். எப்படி செய்தேன் என்பது பற்றி, அதற்கான எழுத்து மூலமான இந்திய அரசின் சான்று ஆதாரத்தோடு பின்னாடி சொல்கிறேன்.
சரிங்க.. ஆனாலும், ரூ 2.75 செலவைத் தெண்டச் செலவுன்னு சொல்லதெல்லாம் ரொம்ப ஓவருங்க! கனிமொழிக்காக டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்து வாதாடின பேமஸ் வக்கீல் ராம் ஜெத் மலானிக்கு ரூபாய் ஐம்பது லட்சம் பீஸ் தந்ததாக ஊர் உலகமே பேசிக்கிறாங்க.  நீங்க என்னடான்னா...
சம்பாதித்த பணத்தைத் தெண்டமாக செலவு செய்த வலி அப்படி செய்யிறவங்களுக்குத் தாங்க தெரியும். இந்திய அரசே குற்றம் சுமத்தியுள்ளபடி, சும்மா ல(வ)ஞ்சமா வந்தப் பணத்தை வாரி கொடுங்கிறவங்களுக்கு என்ன வலி இருக்கப் போவுது. சிறப்பு நீதிமன்றம் என்பது மாவட்ட அமர்வு நீதிமன்ற அதிகாரத்துக்கு இணையானது என்பதால், ராம் ஜெத் மலானிக்கும் ரூ 225 தான் சட்டப்படியான பீஸு!
அதுக்கு மேல அவரு வாங்கியிருக்கிறது எல்லாமே, லஞ்சம் வாங்கின வழக்கிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவதற்காக வாங்கிய லஞ்சம்தான் என்பதால், வருமான வரித்துறையும், சிபிஐயும், ராம் ஜெத் மலானி மீதும் துணிந்து நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனாலும், உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன்... கேட்டுக்குங்க! வருமான வரித்துறை எதிர்கட்சி அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் என எல்லோர் வீட்டிலேயும் தாராளமாக சோதனை போடுவார்கள். தாளிச்சு எடுத்துருவாங்க.
ஆனால், வக்கீல்கள் வீட்டுல மட்டும் சோதனையே போட மாட்டார்கள். வக்கீலு என்றால் வருமான வரித்துறைக்குக் கூட அவ்வளவு பயம். இதிலிருந்து வக்கீலுங்க சட்டத்தில அறிவு வறுமை என்றால், வருமான வரித்துறையினர் அறிவு வெறுமைங்கிற உண்மை புரியிதுதானே?!
எனவே, ஊரு உலகத்துக்குத்தாங்க ராம் ஜெத் மலானி பேமஸ் வக்கீலு. சாதாரணமா சட்டம் தெரிந்த எனக்கு அவரை விட சரியான அரைவேக்காட்டு பேக்கு வக்கீலு வேறு யாருமே இல்லிங்க.. இவரப்போயி பேமஸ்சு வக்கீலுன்னு இந்தியா முழுவதும் புரிஞ்சி சொல்லுறாங்களா..! இல்ல, புரியாம சொல்லுறாங்களா..?
வக்கீல் தொழில், தாத்தா மகாத்மா காந்தியின் அகராதியில் விபச்சார தொழிலாகவும், நம்ம அகராதியில, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தொழிலாகவும் இருந்து வருவதை முதல் கட்டுரையிலேயே படித்திருப்பீர்கள்.
இதன்படி ராம் ஜெத் மலானி இந்தியாவின் மிகப்பெரிய பொய்யர்! இடைத்தரகர்!! என்பதால்தான் பேமஸ் வக்கீலாகி விட்டார்.
பின்ன என்னங்க..
இந்திய (அரசமைப்புக்) சாசனக் கோட்பாடு 74 இன் படி, இந்திய அரசை தலைமையேற்று வழிநடத்தக் கூடிய குடியரசு தலைவருக்கு ஆலோசனை கூறவும், உதவி செய்வதற்காகவுமே மத்திய மந்திரி சபை அமைக்கப்படுகிறது.
இப்படிப் பொறுப்பேற்ற மந்திரிகள் குடியரசு தலைவருக்கு என்னனென்ன ஆலோசனைகள் சொன்னார்கள் என்பது பற்றி கூட எந்த நீதிமன்றத்திலும் விசாரணை செய்ய முடியாது.
மேலும், கோட்பாடு 75(4) இன் அறிவுறுத்தலின்படி, மத்திய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் குடியரசு தலைவரால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கப் படுகிறார்கள்.
இப்படி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் அமைச்சரவையில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் இரண்டு முறை பதவியில் நியமிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் முன் இந்திய சாசனத்தை மதித்து நடப்பேன் என சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டவர், இந்த ராம் ஜெத் மலானி.
சட்ட அமைச்சராக சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக யார் யாரை நியமிக்கலாம் என சரியான முறையில் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பு, நீதித்துறையின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு, உலக நாடுகளுடன் தமது துறையின் முன்னேற்றத்திற்குத் தேவையான ஒத்துழைப்பைக் கோருவது, அந்நிய நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என பல்வேறு பொறுப்புள்ள பொறுப்புகளில் பதவி வகித்தப்பின்,
பொறுப்பே இல்லாமல் கேவலம் லட்சங்களுக்காக, லட்சியங்களை மறந்து, அரசாங்கம் தொடுத்துள்ள, வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிமுக்கியத்துவம் வாய்ந்த, உலக மகா உ(ஊ)ழல் வழக்கிற்கு எதிராக, தன்னை விட அனைத்து விதத்திலும் தகுதியில் குறைந்த ஒரு மாவட்ட நிலையிலான நீதிமன்ற நீதிபதி முன் வாதாடலாமா, கூடாதா என்பது குறித்து இந்திய சாசனத்தில் (இந்திய அரசமைப்பில்) தெளிவுபடுத்தப்பட வில்லை.
பொதுவாகவே, சட்டங்களை வரைவு செய்பவர்கள் பெரும்பாலும், சட்டப்படிப்பு படித்தவர்களோ, வக்கீல் தொழில் செய்பவர்களோ என்பதாலேயே ஊருக்குத்தான் உபதேசம் என்கிற அளவில் அச்சட்டங்களில் தங்களுக்கான சுய கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதில்லை.  இதையேதான், இந்திய சாசனத்தை வடிவமைப்பு செய்த குழுவும் முட்டாள்தனமாக செய்திருக்குமோ என்றே ஆணித்தரமாக நம்ப வேண்டியிருக்கிறது.
ஆம்! இப்படியொரு பொறுப்புள்ள பொறுப்பில் இருந்த பின், பொறுப்பில்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா அல்லது அப்படியே செய்தாலும் பொறுப்பில்லாமல் நாம் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?
ஆனாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அடிப்படை தத்துவமாக வைத்து சட்டத்தைப் படித்த முட்டாள்கள், "நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டிய பொருளாதார வல்லுனர் பிரதமர் மன்மோகன் சிங், தனது பொருளாதாரத்தை மனதிற்கொண்டு அதற்குத் தடையாக இருக்கும் லோக்பால் சட்டத்திலிருந்து நான் விதி விலக்கு என்று கூறி அச்சட்டத்தை ஜோக்பால் ஆக மாற்ற முயற்சிக்கிறாரே..!"
அதுபோலவே, நமக்கெல்லாம் தெரியாமல், வக்கீல்கள் சட்டத்தை வரைவு செய்யும் போதெல்லாம் அதிலிருந்து தங்களை விதி விலக்கு என அறிவித்துக் கொள்ளவே செய்கிறார்கள் என்ற எனது பகிரங்க குற்றச்சாற்றுக்கு மேலும் வலுவானதொரு ஆதாரம் அரசமைப்பில் இருக்கிறது.
ஆனாலும், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஆனால், கண்டு கொள்ள வேண்டும். அதற்கு, இப்படி பகுத்தாராய்ந்து பார்க்கும் அளவிற்குச் சட்டத்திறனை அவசியமாகவும், அவசரமாகவும் வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
இச்சட்டத்திறன் இல்லையென்றால், இனி நாட்டில் வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை நீங்கள் தற்போது உணர முடியவில்லை என்றாலும் கூட, இந்நீண்டதொரு கட்டுரையைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள்.
இதன் வெளிப்பாடாகத்தான், ஒருபக்கம் நாம் சட்டத்தால் சட்டத்தைச் சத்தியத்தின் வழியில் நின்று சவால் விட்டு, சாதித்துக்காட்டி அதையே சரித்திரம் மிக்க சட்ட விழிப்பறிவுணர்வூட்டிக் கொண்டு இருக்கிறோம் என்றால் மறு பக்கமோ, உண்ணா ஹசாரே, கிரண்கேடி போன்றோர் சட்ட திட்டங்களை இப்படித்தான் வரைவு செய்ய வேண்டும் என வரைவு செய்து தந்து அதை அறவழியில் ஏற்கச் செய்வதில் நம்மைப் போல் அல்லாமல் அதிரடியாகவே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் சக்கையடி என்பது போல, ஒரே நேரத்தில் நீதித்துறைக்கு நம்மால் அடிவிழுந்து கொண்டு இருக்கிறதென்றால், அரசுக்கு அண்ணா ஹசாரே குழுவின் முயற்சியால் இந்தியா முழுவதும் அடி இடியாய் இறங்கி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே இடியச்சத்தை நாம் நீதித்துறைக்கு விரைவிலேயே தர வேண்டும்.
எது எப்படி இருப்பினும், இந்திய குடிமக்களாகிய நாம்... நமது இச்சாதனைகளுக்காக நமக்கு நாமே சபாஷ் போட்டுக் கொள்ளலாம்! வேறு யாரும் போடவும் மாட்டார்கள். போட்டுக் கொள்ளவும் முடியாது.
நாம் அனைவரும் சட்டப்படியான நமது கடமையைச் செய்வதற்கு சரியான தருணமிது.
ஆம்! இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருப்பவர், இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் முன்னிலைப்படும் உரிமையை இந்திய சாசனக் கோட்பாடு 76(3) இல் தந்துள்ளனர். இதுவும் கூட சட்டப்படி சரியானதாகவோ அல்லது நியாயமானதாகவோ தெரியவில்லை.
ஏனெனில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசு சார்பாக வாதாட வக்கீல்கள் நியமிக்கப்படுவதால் அவர்களே, அந்தந்த மாநில  உயர்நீதிமன்றங்கள் வரை வழக்கைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
அவர்களையும் மிஞ்சி வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வரும் போது மட்டுமே அட்டர்னி ஜெனரலுக்கு வேலை. இதுவும் கூட, அதிமுக்கிய சட்டப் பிரச்சினைகளுக்கு உரிய வழக்குகளுக்கு மட்டுமே தான் முன்னிலையாவார். மற்ற எல்லா வழக்கிலும் அட்டர்னியின் அசிஸ்டென்டுகள்தான் முன்னிலை ஆவார்கள்.
இப்போது யோசித்து பாருங்கள்... இந்திய சாசனக் கோட்பாடு 76(3) ஆனது சட்டப்படியும், நியாயப்படியும் தேவையற்றது என்பது நன்றாகவே விளங்கும்.
ஆனாலும் கூட, எதிர் காலத்தில் இது போன்று கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களின் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதல்லவா! இதற்கான சட்டப் பிரச்சினைகளை எழுப்ப வேண்டியிருக்கிறது அல்லவா? அதனால், இதற்கு மேலும், வலுவிற்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய அரசமைப்பின் பிற அதிகார பீடங்களை முன்னிருத்தி ஆராய்ந்து பார்ப்போமா?
இந்திய சாசனக் கோட்பாடு 124(7) இன் அறிவுருத்தல்படி, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய எவரும் இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வக்கீலாக ஆஜராக முடியாது.
இதேபோல், கோட்பாடு 220 இன் அறிவுருத்தல்படி, இந்தியாவின் ஒர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய எவரும் உச்சநீதிமன்றம் அல்லது மற்ற உயர்நீதிமன்றங்களில் மட்டுமே வக்கீலாக பணி செய்ய முடியும்.
இவ்விரு கட்டுப்பாடுகளின் அடிப்படை நோக்கமென்ன?
நீதித்துறையின் உயரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி தான் வகித்த பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னை விட கீழான பதவி வகிக்கும் ஒருவரிடம் வாதாடுவது போல் அணுகி, நான் உன்னை விட மேலானவன் என்றோ அல்லது உனக்கு இணையானவன் தான் என்றோ அல்லது வேறு எவ்விதத்திலோ நீதியைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விடக்கூடாது என்பதுதானே?
அப்படியானால், இதேபோன்ற தடைகளையும், அதற்கான கோட்பாடுகளையும் இந்திய சாசனத்தின் கீழ் நியமனம் செய்யப்படுகின்ற மத்திய, மாநில அரசு தலைமை மற்றும் எடுபிடி வக்கீல்களுக்கு மட்டும் கொண்டு வராதது எந்த வகையில் நியாயமாகும்?
மாறாக, அநியாயத்திலும் அநியாயம் அல்லவா..!
சரி.. தடையே விதிக்கப்படவில்லை என்றாலும் கூட, ராம் ஜெத் மலானி ஓர் அறிவார்ந்த வக்கீலாக இருந்திருந்தால், மேற்சொன்ன நியாயங்களைத் தனக்குத்தானே கணக்கிட்டு தனது தகுதியை நிலைநிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இதே காரணங்களை முன் வைத்து சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, மேற்சொன்னபடி இந்திய சாசனம் குறித்த சட்டப் பிரச்சினையை எழுப்பி ராம் ஜெத் மலானி அவர்களின் பரிந்து பேசும் உரிமை மனுவை (வக்காலத்தை) நிராகரித்திருக்கலாம் அல்லது இந்திய சாசனக் கோட்பாடு 228 மற்றும் குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 395 இன்கீழ் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி கருத்து கேட்டிருக்கலாம். அல்ல அல்ல கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், எந்தவொரு கீழ்நீதிமன்றமும் தனக்கு ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க கோரி, மேல்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து, மேல்முறையீட்டுக்கான வித்தைத் தடுத்ததாக வரலாறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
நானே, பல நீதிமன்றங்களில் இதனை வலியுறுத்தி மனு கொடுத்துள்ள போதும், "நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். நீ என்ன புதிது புதிதாக எங்களுக்குத் தெரியாததை எல்லாம் போதிப்பது" என நீதிபதிகள் அசைந்து கொடுக்கவில்லை.
அரிதிலும் அரிதாக அவர்களின் அஸ்திவாரத்தையே அசைய வைத்த சுவையான சம்பவமும் உண்டு. இதனால், மீண்டும் ஒரு முறை சிறைக்குச் செல்வதற்கான அதிர்ஷ்டத்தை இழந்தேன். இதற்காக வி.எஸ்.குமரேசன் என்ற அந்த நடுவரை நேருக்கு நேர் நின்று எழுத்து மூலமாக, அதற்கான சட்டப்பிரிவைக் குறிப்பிட்டே மன்னித்தேன். மனிதர் நொந்தே போய் விட்டார்.
இது என்ன புதுக்கதையாக இருக்கு..?
ஓர் நீதிபதி தான் விசாரணை செய்யும் குற்ற வழக்கில் கைதியைத் தண்டிக்காமல் மன்னித்து விடுதலை செய்ய முடியும் என கேள்விப்பட்டிருக்கோம். அதெப்படி, ஒரு விசாரணையை எதிர் கொண்டுள்ள கைதி அவ்வழக்கை விசாரணை செய்யும் நீதிபதியைச் சட்டப்படி மன்னிக்க முடியும்? இப்படியொரு சட்டம் இருக்குமா என்ற ஆச்சரியம் அல்லது சந்தேகம் உங்களுக்கு எழுந்தால்...
இயற்கை தவறிழைக்காது (இறைவன் தவறிழைக்கமாட்டான்) என்பதே முதுமொழி. நீதிபதி கடவுள் அல்ல! சாதாரண மனிதரே. எனது சட்ட ஆய்வு முடிவைப் பொருத்தவரை சாதாரண மனிதரை விட அதிக அளவில் குற்றம் புரிபவரே...
விளக்கமாக சொன்னால், ஒரு சாதாரண மனிதர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக, சட்டப்படி ஒரு நாள் சிறையில் ராஜ மரியாதையோடு (விஐபிகளை வைத்திருப்பது போல) தங்க வைக்க வேண்டியிருக்கும் என வைத்துக் கொண்டால், ஒரு நீதிபதியை ஏழேழு ஜென்மத்திற்கும் (ஏழு ஜென்மங்கள் உண்மையாக இருந்தால்) சிறையில் அடைத்து, அரை வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி சித்தரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க வேண்டியிருக்கும். அவ்வளவு குற்றங்களை அனு நிமிடமும் தெரிந்தேயும் வேண்டுமென்றேயும் தங்களின் சுயநலனுக்காகவே செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட நீதிபதி என்ற மனிதருக்குத் தவறு செய்தவரை தண்டிக்காமல் மன்னிக்கும் சட்ட அதிகாரம் இருக்கும் போது, அதே நீதிபதி செய்யும் ஒரு தவறை மன்னிக்க அனைத்து விதத்திலும் தகுதியுடைய கைதியாக உள்ள மனிதருக்கு மாத்திரம் எப்படி சட்டம் இல்லாமல் போகும்?
அப்படியில்லாமல் போயிருந்தால்தான், நீங்கள் ஆச்சரியப்பட, அல்ல அல்ல, அதிர்ச்சியடைய வேண்டும். இதுதானே நிஜம்! இது குறித்தும் சமயம் வரும் போது விரிவானதொரு கட்டுரையை வடிக்கிறேன்.
இதேபோல், தனக்கு கீழானதொரு நீதிமன்றத்தில் முக்கியத்துவம் மிக்க அல்லது சிக்கலான சட்டப்பிரச்சினை இருப்பதாக மேல்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரும் போது, அதனைத் தாமாகவே முன்வந்து விசாரணை செய்து தீர்க்க வேண்டும் என்ற அறிவுருத்தல், இந்திய சாசனக்கோட்பாடு 228 இன்கீழ் உயர்நீதிமன்றங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நான் முன்பாக சொன்ன கீழ்நீதிமன்றங்களில் சட்டப் பிரச்சினையை எழுப்பி என்னாலும், பல வாசகர்களாலும் தரப்பட்ட மனுக்களின் நகல்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டு, அப்படி வழங்கப்பட்டதற்கான சட்டப்படியான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
ஆனால், அரிதிலும் அரிதாகத்தான் அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட அதிகாரமும் அரைகுறைதான். மற்ற மனுக்கள் எல்லாம் பாழே.
இதேபோல, பிரச்சினைக்குத் தக்கவாறு தீர்வு காண கோட்பாடு 131 முதல் 139அ வரையிலான அறிவுருத்தல்கள் உச்சநீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகளைப் பொருத்தமட்டில் கோட்பாடு 32 இன்கீழ் அறிவுருத்தப்பட்டுள்ளது. கனிமொழியில் பிணை விசயத்தில் இக்கோட்பாடு உச்சநீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி இந்தியாவில் அருமையான, பெருமைப்படத்தக்க பற்பல சட்டங்கள் இருந்தும், அதைக் கொண்டு சச்சரவுகளைப் போக்க முயற்சிக்காமல், பத்திரமாக வைத்து சாம்பிராணி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இந்திய நி(நீ)திபதிகள்.
ஆனால், அமெரிக்காவில் சாதாரண சட்டப்பிரச்சினைகளுக்கே, மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களும் அப்படியே செய்கிறார்கள். இதனால், கீழ்மை நீதிமன்றத்திலேயே வழக்கு தீர்க்கப்பட்டு மேல்முறையீடு என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடுகிறார்கள், அந்நாட்டு அறிவார்ந்த நீதிபதி பெருமக்கள்.
மொத்தத்தில் இந்திய நீதிபதிகளின் இச்செயல்களைப் பார்க்கும் போது, வக்கீல்களுக்கு வழக்கு பிடித்து தரும் இடைத்தரகர்களாகவும், இதன் மூலம் தங்களின் லஞ்ச வருமானத்தை மறைமுகமாக பொறு(பெரு)க்கிக் கொள்கின்றனர் என்பதும் திண்ணம்.
நான் கேட்கும் இதே கேள்வியை ராம் ஜெத் மலானியிடம், நீதிபதி ஓ.பி.சைனி கேட்டிருந்தால், இப்படியொரு பிரச்சினை இருக்கிறதா என்பது இந்தியா முழுவதும் தெரிந்திருக்கும். மீண்டும் இப்படியொரு கூத்து எதிர் காலத்தில் நடக்கா வண்ணம் தீர்வும் வந்திருக்கும். ஆனால், ஓ.பி.சைனி இவ்விசயத்தில் உண்மையிலேயே ஓ.பி அடித்து விட்டார்.
ஆதலால், இந்த விவகாரமான விவகாரத்தில், இப்படியொரு சட்டப்பிரச்சினை இருப்பது இப்போது, இந்நேரத்தில் படிக்கும் உங்களுக்கு மட்டுமே தெரிகிறது. நீங்கள் நினைத்தால் இதனைப் பாரதத்தின் பல கோடி மக்களுக்கும் தெரியப்படுத்த முடியும் என்பதால் தெரிந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்யுங்கள்.
ஒரு தரமான நீதிபதி இப்படிப்பட்டதொரு பிரச்சினையை நியாயமாக தீர்க்கத்தானே முயன்றிருக்கணும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், நிச்சயமாக இதைத்தான் செய்திருப்பேன்.
மொத்தத்தில், இந்திய நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் சட்டத்தைப் பயன்படுத்தும் விதத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், பெருமைக்கு எருமை மேய்த்துக் கொண்டிருப்பவர்கள்.
கனிமொழி ஒரு பெண் என்பதால், அவரைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற உலக மகா பொய்யை ராம் ஜெத் மலானி கோரிக்கை வைத்த போது, இப்படியும் கூட சட்டத்தில் ஓட்டை இருக்கிறதா.. என ஊர் உலகமே கனிமொழியின் பிணையை உற்று நோக்கியது அல்லவா?
உண்மையில் குற்ற விசாரணை முறை விதிகள் 437(1) இன் அறிவுருத்தல்படி, 18 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண் அல்லது ஆண் மீது கைது செய்வதற்கு உரிய, பிணையில் விடத்தகாத குற்றம் சாற்றப்பட்டிருந்தாலும் கூட அவரை, உடனே பிணையில் விடுவிக்க வேண்டும். இது நோய் வாய்ப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும். கனிமொழி 18 வயதுக்கு உட்பட்டவர் என்கிறாரா, பொய்யர் ராம் ஜெத் மலானி?
நமது இந்திய சாசனம் மற்றும் மற்ற சட்டங்களின் அடிப்படை சிறப்பே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே! என்பது எல்லோருக்கும் தெரியும். இது எப்படி அவருக்குத் தெரியாமல் போனது என்பது தெரியவில்லை. இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், இப்படி பெண் என்ற காரணத்தை முன் வைத்தது எந்ச்த சட்டத்திற்கு உட்பட்டது என்பதைத் தெளிவுப் படுத்தியிருக்க வேண்டுமல்லவா?
ஆனால், அப்படிச் செய்யவில்லையே.. சட்டப்பிரிவு இருந்தால்தானே குறிப்பிடுவதற்கு?!  இந்த மகா பொய்யர் நாட்டுக்கு அட்டர்னி ஜெனரலாக இருந்து எத்தனை கோடிக்கணக்கான இந்தியர்களின் உரிமைகளை, உடமைகளை, வாழ்க்கையை எப்படியெல்லாம் முடக்கி முடமாக்கினாரோ..! யாருக்குத் தெரியும்?
ஆனாலும், கழுவுற மீனில் நழுவுற மீனாக, அதற்கான சட்டப்படியான காரணத்தை, இப்படி விரிவாக எடுத்துக் கூற முடியாவிட்டாலும் கூட பெண் என்ற காரணத்தை முன்வைத்தும், தன்னால் கனிமொழியைப் பிணையில் விடுவிக்க முடியவில்லைன்னு தனது தள்ளுபடி குறிப்பில் தெளிவாக சொல்லிவிட்டார், நீதிபதி சைனி.
உண்மையில் பிணை மனு தாக்கல் செய்யும் போது, இது போன்று ஒன்றுக்கும் உதவாத துக்கடா காரணங்களை எல்லாம் சொல்லவே கூடாது. இப்படி கேட்பது நமது சட்டப்படியான உரிமையை கேட்பது அல்ல. மாறாக, பிச்சை கேட்பதாகும். உரிமையைக் கேட்கும் தொனியிலேயே ஒரு துணிவு அல்லது வீரம் நிறைந்த தனித்தன்மை (கெட்த்) தெரிய வேண்டும்.
சட்டப்படியான உரிமையைக் கேட்கும் போது, அவர்களும் கொடுத்துதான் ஆக வேண்டும்.  மறுத்தால் அதற்குரிய சட்டப்படியான, பிடிப்பு மிக்க காரணங்களை அவர்களும் எழுத வேண்டியிருக்கும் என்பதால், அதிக பட்சம் மறுக்கமாட்டார்கள். அப்படியே மறுத்தாலும், அதற்குறிய காரணத்தைச் சரி செய்து மீண்டும் உரிமையை வலியுறுத்த முடியும்.
ஆனால், பிச்சை கேட்கும் போது அதை கொடுப்பதும், கொடுக்காததும் கொடுப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. நீங்களும் இதைத்தானே செய்வீர்கள்? இதைத்தான் நீதிபதி ஓ.பி.சைனியும் கனிமொழி பிணை விவகாரத்தில் செய்தார். அப்ப பிணை மனு தள்ளுபடியானத்துக்கு யார் காரணம்? இந்த அடிப்படை அறிவே இல்லாத ராம் ஜெத் மலானிதானே?
எனவே, பிணை மனு கொடுக்கும் போது அதில்,
அ) வழக்கு பொய் என்பதை ஆதாரப்பூர்வமாகவோ...
ஆ) தன் மீதான சுமத்தப்பட்டுள்ள குற்றம் சட்டப்படி சரி என்றாலும், நியாயப்படி சரியல்ல என்றோ...
இ) சுமத்தப்பட்டுள்ள குற்றம் தான், தனது உயிரையும் உடமையையும் தற்காத்துக் கொள்ள மேற்கொண்ட சட்டப்படியான தற்காப்பு நடவடிக்கை என்றோ...
ஈ) எந்த அளவிற்கு உண்மை மற்றும் பொய் அடங்கியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தோ... வழக்கை எதிர்த்து நடத்த இருப்பதாக...
உ) சம்பவம் நடந்ததற்கு அடிப்படை காரணமே, அச்சம்பவத்தைச் சட்டப்படி தடுத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள அரசு ஊழியர் தடுக்காமல் போனதுதான் என்றோ...

ஊ) சம்பவம் நடந்த சூழ்நிலைக்கு யாராக இருந்தாலும், (நீதிபதியாகிய நீங்களாகவே இருந்தாலும்) தவிர்க்க முடியாதது என்றோ... (இப்படியும் ஒரு நீதிபதியை வசமாக சிக்க வைத்து தண்டனையில் இருந்தே தப்பித்திருக்கிறார், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்)
அதற்குறிய சட்டக் காரண காரியங்களோடு தெரிவித்து பிணை கோர வேண்டும். இதனை இந்த ஆறிலேயே பிணை கோருவதற்கான அனைத்து கருத்துகளும் அடங்கி விடும். தேவைப்பட்டால், சூழ்நிலைக்கு தக்கவாறு வேறு காரண காரியங்களையும் எடுத்துக் கூறலாம்.
இவற்றையெல்லாம் விட சிறப்பாக பிணை மனுவின் இறுதியில், இம்மனுவில் சொல்லப்பட்டுள்ள காரணங்களை மெய்ப்பிக்க தவறும் போது அதற்கான சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நாமே முன்வந்து தெரிவிப்பது உங்களது உண்மைக்கு, உண்மையிலேயே வலுவூட்டும்.
பிணை மனுவைப் பரிசீலனை செய்யும் நீதிபதிக்கு மிகவும் வித்தியாசமானதாகவும், விபரமானதாகவும், விவகாரமானதாகவும், இருக்க வேண்டும். இக்காரணங்களைச் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து எந்த அளவிற்கு விளக்கமாக சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொன்னால் போதுமானது.
இதெல்லாம் ரொம்பவே சரித்தாங்க...
ஆனால், வழக்கு முற்றிலும் உண்மையாக இருக்கும் போது என்ன செய்வது என்று கேட்கமாட்டீர்கள் என்பதை உணர்கிறேன். ஏனெனில், பொய்யர்கள் அல்லாது கொள்கையுள்ளவர்களான நமக்கு உண்மையை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி என்ன இருக்கு என்பதை உணர்ந்து  விட்டீர்கள், அல்லவா?!
உண்மையை ஒப்புக் கொள்வதால் நமக்கு ஏதும் நன்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அதெப்படி, சட்டத்தில் இல்லாமல் போகும் என்றுதான் உங்களிடமே  திருப்பி கேள்வி கேட்பேன்.
ஆம்! குற்ற  விசாரணை முறை விதிகளில் குற்றத்தைச் சமரசம் செய்து கொள்ள கூடியவை மற்றும் சமரசம் செய்து கொள்ள இயலாதவை என்று இரண்டு வகையாக பிரித்துள்ளார்கள். இதிலும் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றங்களைப் பொறுத்தவரை, விதி 320 இன்படி, பாதிக்கப்படவருடன் நேரடியாகவும் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சமரசம் செய்து கொள்ள இரண்டு வழி வகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக தனி மனிதர் உட்பட சமுதாயத்தை வெகுவாக பாதிக்க கூடிய குற்றங்களான கொலை, கொள்ளை, கள்ள நோட்டு, அரசு மற்றும் பொது ஊழியர்கள் கடமை தவறுதல், தேர்தல் முறைகேடு குறித்த குற்றங்கள் போன்றவைகள் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங்களாகும். மற்றவைகள்  சமரசம் செய்து கொள்ளக் கூடியவையாகும்.
இதிலும், விதி விலக்காக பாலியல் தொடர்பான வன்புணர்ச்சி (கற்பழிப்பு) குற்றங்களில் திருமணம் ஆன பெண்ணைப் பொறுத்தவரை, அவரது கணவருடன் சமரசம் செய்து கொள்ள கூடியவை என்றும், மற்ற எப்பெண்களைப் பொறுத்த வரை எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ள இயலாத குற்றங்கள் எனவும் வழி வகை செய்திருப்பது சிறப்பிலும் சிறப்பு.
ஆனாலும், பாலியல் குற்றங்கள் பலவும் பெண்களால் பணம் பறிக்கவே திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. இது குறித்து பணம் பறிக்கும் பாலியல் குற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் பின்னர் வடிக்கிறேன்.
எனவே, தப்பித்தவறி தெரியாமல் தவறு செய்து விட்டாலோ அல்லது அதற்கான சூழ்நிலையைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டாலோ, அதனால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்து, சமரசம் செய்து கொள்ள திறந்த மனதுடன் அணுக வேண்டும்.
பொதுவாக நீதிபதிதான் நீதி வழங்க முடியும் என மக்கள் மடத்தனமாக நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறு.  உண்மையில், நீதிபதிகள் வழங்குவது எல்லாம் அநீதியே!? நீதிக்கு சமாதியே..? இதனை அடிப்படையாக வைத்துதான்,
கேட்காமல் கொடுப்பது நீதி!
கேட்ட பின் கொடுப்பது அநீதி?
கேட்டும் கொடுக்க மறுப்பது, நீதிக்குச் சமாதி...
என்ற தத்துவத்தைப் பிணை எடுப்பது நூலில் முன்மொழிந்துள்ளேன்.
உண்மையில், யார் வேண்டுமானாலும் நீதி வழங்க முடியும். இப்படி வழங்கிக் கொண்டு இருப்பதால் தாம், அனுநிமிடமும், தினமும், நாம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் செய்யும் சிற்சில சமரச குற்றங்களில் இருந்து மன்னிக்கப்பட்டு சுதந்திரமாக வெளியில் வாழ்கிறோம். இதில் நீதிபதிகளும்  அடங்குவர்.
இதையே சமரசம் செய்து கொள்ள வழியிருந்தும், செய்து கொள்ள மனமில்லாத அல்லது சமரசம் செய்து கொள்ளவே வழி இல்லாத குற்றங்களில் தண்டிக்கப்பட்டு சிறைத்தண்டனைக்கு ஆளாகி அபத்தமாக ஆயுளையே கழித்து விடுகிறோம்.
எனது சட்ட ஆராய்ச்சியில், இப்படியும் நடக்கும் என நானே நினைத்துப் பார்க்காத வகையில் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு பாதிக்கப்பட்டவரே நீதி வழங்கிய மனதை நெகிழ வைக்கும், பல சுவையான சம்பவ முடிவுகள், ஆதாரப்பூர்வமாக உள்ளன. அதனால், உங்களது சமரச முயற்சியில், உங்களால் பாதிக்கப் பட்டவரே  நீதி வழங்குவார்கள் என உறுதியாக நம்புங்கள்.
ஒருவேளை  உங்களின் சமரச முயற்சி அரிதிலும் அரிதாக பழிவாங்கும் கெட்ட எண்ணத்தோடு நிறைவேறாமல் போனால், அதற்காக கவலைப்பட தேவையில்லை. எடுத்த எடுப்பிலேயே விசாரணை ஏதும் இல்லாமலேயே நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி ஒப்புக் கொண்டால், அதிகபட்ச தண்டனையில் பாதியாவது குறையும். வாழ்க்கையில் சிறைக்குச் சென்று வந்த திருப்தியும் இருக்கும்.
என்னங்க இது...
ஒருபக்கம் குற்றம் புரிந்தாலும் தண்டனையில் இருந்து சமரசத்தின் வழியாக தப்பிக்கலாம் என்ற நல்ல யோசனையைச் சொல்கிறீர்கள். இது முற்றிலும் சரியே! ஆனால், மற்றொரு புறம், சமுதாயத்தின் அவமானகர இடமான சிறைக்குச் சென்று வாருங்கள் என சர்வ சாதாரணமாக வாழ்த்துவது போல் சொல்கிறீர்களே!! இது முன்னுக்குப்பின் முரண்பாடாக இல்லையா, இது எந்த விதத்தில் நியாயம் என  கேட்கலாம்.
"அவமானம் என்பது குற்றம் புரிவதில்தான் இருக்க வேண்டுமே தவிர, புரிந்த குற்றத்திற்கான தண்டனையை ஏற்பதில் ஒருபோதும் இருக்க கூடாது" என்பது தாத்தா மகாத்மா காந்தியின் கருத்து.
இதே கருத்துதான் அடிப்படையில் என்னுடையதும் ஆகும். ஆனாலும், சிறைக்குச் சென்று வருவதில் கூடுதலாக பல சிறப்புகள், அனுகூலங்கள் உள்ளன என்பது ஆணித்தரமான, அசைக்க இயலா கருத்தாகும்.
ஆம்! இந்த உலகத்தில் நாம் எங்கு செல்ல வேண்டும் என நினைக்கிறோமோ, அதற்கான பயணத்தை நமக்கான வசதி வாய்ப்பைப் பொறுத்து அடுத்த நிமிடமே கூட தொடங்கி விட முடியும். ஆனால், இதில் ஒரேயொரு இடம் மட்டும் விதிவிலக்கு என்றால் அது தவச்சாலை என்னும் சிறைச் சாலையே!
என்னைப் பொறுத்தவரை, சிறைக்குச் செல்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். இந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அடிக்காது. ஆதலால், யாருக்காவது சிறைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால், உடனே போய் விடுங்கள். வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள். கவனமாக காத்திருங்கள். எச்சரிக்கை!
யாருக்காவது தாமாக முன்வந்து ஜெயிலுக்குப் போகவேண்டும் என்ற ஆசை வருமா?! இப்படியொரு விபரீத ஆசை எப்படிங்க வரும் என்ற கேள்விதான் உங்களுக்கு எழும்.
உங்களின் கேள்வி நியாயமானதுதான். குற்றமில்லாத சமுதாயம் மலர, எல்லோருக்குமே கட்டாய சிறைக்கல்வி வேண்டுமென்பதே என் ஆவல். போராடி சிறைக்குச் செல்லும் வாய்ப்பு சட்ட விழிப்பறிவுணர்வில்லா சாதாரண மக்களில் பெரும்பான்மையானோருக்குச் சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
ஆனால், சட்டத்தில் நிறைய சந்து பொந்துகள் என்று சவடால் பேசும், தங்களைச் சட்ட அறிவுள்ளவர்களாக சொல்லிக் கொள்ளும் வக்கீல்களுக்குச் சிறை செல்வதென்பது சர்வ சாதாரணமாக சாத்தியப்பட வேண்டும்தானே! ஆனால், சாத்தியப்படவில்லையே ஏன்?
அதாவது, கைது என்றால் வக்கீல்களும் பீதி அடைகிறார்கள், ஓடி ஒளிகிறார்கள், தலைமறைவு ஆகிறார்கள் என்பதுதானே உண்மை. அப்படியானால், இந்த உண்மையின் அடிப்படையில், சட்டத்தில் சந்து பொந்துகள்  ஏதும் இல்லை என்பதால்தானே?!
ஒன்று சட்டத்தில் சந்து பொந்துகள் இருந்தால் அதன் வழியாக தப்பித்து வர வேண்டும். மற்றொன்று, தனக்கு போதிய சட்ட அறிவு இருக்கிறது என வக்கீல்கள் நம்பினால், வழக்கை எதிர்கொண்டு பொய் வழக்கு என்பதை மெய்பித்து விடுதலையான பின், பொய் வழக்கு புனைந்ததற்காக குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு போட்டவரை சிறையில் தள்ளலாம்.
மேலும், தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக மானநஷ்ட ஈட்டுத்தொகையும் பெறலாம். ஆனால், இப்படி எந்த வக்கீலாவது செய்திருக்கிறார்களா?
மாறாக, ஆர்ப்பாட்டம், போராட்டம், மனித சங்கிலி, தர்ணா, நீதிமன்ற புறக்கணிப்பு, அடிதடி என ஆகியவற்றில் தானே களமிறங்குகிறார்கள். வக்கீலாய் இருக்கும் அவர்களின் பிரச்சினையை அவர்களே சட்டப்படி தீர்த்துக் கொள்ள முடியாத போது, உங்களின் பிரச்சினை தீர்த்து தருகிறேன் என சொல்வது, உங்களின் சட்ட அறியாமையை பயன்படுத்தி பணம் பறிக்கும் கொள்ளைச் செயல்தானே?!
உண்மை இப்படி இருக்கும் போது, சட்ட அறிவில் உங்களை விட வக்கீல்கள் மேலானவர்கள் என்று எதன் அடிப்படையில் ஒப்புக் கொள்வீர்கள்? என்பதே நான் உங்களுக்கு விடுக்கும் சவாலான கேள்வி. பதில் சொல்லுங்க, பார்க்கலாம்.
சரி.. நம்ம விசயத்துக்கு வருவோம்.
(சு)தந்திர இந்தியாவில், ஐந்து நாள் முன்பாகவே அப்பாயிண்மென்ட் கொடுத்து, கைது செய்ய வைத்து, இதுவும் சும்மா சர்வ சாதாரணமாக செய்யல. சுமார் பதினைந்து மாதம் போராடிதான் என்னாலேயே, என்னைக் கைது செய்ய வைக்க முடிந்தது என்றால், கற்பனை செய்து பாருங்கள், சிறைக்குப் போவதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கும் என்பதை.
ஆனா, நீங்க என்னடான்னா ஜெயிலுக்குப் போறதெல்லாம் பெரிய வேலையா என பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்கள்.
இதனையெல்லாம், தனது பெருமையைத் தானே சொல்லிக் கொள்வார்களே... அந்த நோக்கத்தில் நான் சொல்லவில்லை. மாறாக, கைதுக்கோ அல்லது சிறைக்குச் செல்வதற்கோ நாம் பயப்படக் கூடாது. அப்படிச் செய்வதற்கு அவர்கள்தான் பயப்பட வேண்டும். அந்த அளவிற்கு நமது கொள்கை உயர்ந்த நோக்கமுடையதாக இருக்க வேண்டும்.
மற்றபடி, இந்த எனது கைது ஏன்.. எதற்காக.. எப்படி.. என்பதை எல்லாம் வாய்ப்பிருக்கும் போது நீதியைத்தேடி... நூல் வரிசையில் இரண்டாம் நூலான பிணை எடுப்பது எப்படி? நூலைப்படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதிலும் ஓரிரு முக்கிய நிபந்தனைகள்.
உண்மையிலேயே ஜெயிலுக்குப் போகணும் என மனதார நினைப்பவர்கள், அப்படிப்பட்டதொரு அரிய வாய்ப்பு கிடைக்கும் முன்பாகவே நீதியைத்தேடி... வரிசையிலான நூல்களைத் தப்பித்தவறி கூட படித்து விடாதீர்கள்.
படித்து விட்டால், ஜெயிலுக்குப் போயே ஆக வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்து விடும். ஆனால், அதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்காமல் பொய்த்து விடும்.  அப்புறம் ஆசைக்காட்டி மோசம் செய்த பாவம் எனக்குத்தானே!
பச்சிளம் குழந்தையாய் தவறு செய்தேன்.
மழலை என கை கொட்டி சிரித்து ரசித்தார்கள்.
அரும்பு மீசை வயதில் குறும்பு செய்தேன்.
அறியா வயதென விட்டு விட்டார்கள்.
இளைஞனாய் தவறு செய்தேன்.
இனிமேல் செய்யாதே என விட்டு விட்டார்கள்.
தவறென தெரிந்தே செய்தேன்.
தவறென தெரிந்தே விட்டு விட்டார்கள்.
இனி, தவறே செய்யக்கூடாது என்பதற்காக நீதியைத்தேடி... படித்தேன்.
அதனால், இந்த ஜென்மத்தில் சிறை செல்லும் அதிர்ஷ்டத்தை இழந்தேன்!
என்ற புலம்பல் கவிஞனாய், கவிஞையாய் ஆகி விடுவீர்கள். இப்படி ஆனவர்களும் உண்டு. ஆதலால், சிறைக்குச் சென்றதும், சிறை நூலகத்தில் நீதியைத்தேடி... நூல்களைக் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள எந்த தவச்சாலைக்கு நீங்கள் செல்ல நேர்ந்தாலும், அங்கேயே படித்து அனைத்து சட்டப் பலன்களையும் பெற வசதியாக ஐந்து நூல்களையும் நன்கொடையாகவே கொடுத்துள்ளோம். கைதிகளிடமும் கிடைக்கும்.
தவறு செய்தால், உடனே நீங்கள் சொல்கின்ற தவச்சாலைக்கு மிக எளிதாக போய் விடலாமே என, எதார்த்தமாக நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மையிலேயே மனதார தவச்சாலைக்க்ச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு குற்றச் செயல்களைச் செய்ய முயல்வீர்களேயானால், உங்களது முயற்சி நிச்சயம் தோல்வியில்தான் முடியும். அதுதான், நியாயம்.
சரி.. கனிமொழி கைது விசயத்துக்கு வருவோம்.
கனிமொழியின் கைது மற்றும் பிணை விவகாரம் அடுத்தடுத்து நீதிமன்றங்களின் தள்ளுபடி உத்தரவால், பெரும் (வெறும்) விவாதப் பொருளாக இருந்து, சிறையில் நிறுத்தி வைக்க வேண்டிய அரசியலமைப்பின் அதிகபட்ச காலத்தையும் கடந்து தற்போது கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது.
இக்கட்டுரையின் நோக்கம், பிணை தொடர்பாக நம் நாட்டில் அமலில் உள்ள சட்டங்களைப் பற்றிய புரிதல் எதுவும் இல்லாமல் அனுதாபிகள் அனுதாப்படுவதும், எதிர்த் தரப்பினர்கள் எப்போதுமே வெளியில் விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும், இவ்விரண்டு நிலையிலும் இல்லாதோர் இருதலைக் கொள்ளியாய் பரிதவிப்பதும் தேவையில்லாதது என்பதை எனது சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் தெளிவுபடுத்துவதே ஆகும்.
ஒருவர் கைது செய்யப்பட்டால் பிணையில் வருவதற்கு எத்தனை சட்ட விதிகள் இருக்கின்றன என்பதை உங்களுக்குத் தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் உங்களின் உற்ற உறவினராகவோ, நண்பராகவோ இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால், நமது நீதியைத்தேடி... பிணை எடுப்பது எப்படி நூலைப் படிக்காதவர்களாக  இருக்க வேண்டும்.
இவர்கள், குற்ற விசாரணை முறை விதிகள் 436, 437, 438 மற்றும் 439 ஆகிய நான்கை மட்டுமேதான் சொல்லுவார்கள்.
இதில் 436 ஆனது, கைது செய்ய கூடாத மற்றும் பிணையில் குற்றத்திற்காக, கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவர் முன் முன்னிலைப்படுத்தும் போது அல்லது நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட பின், அதே நடுவரிடம் பிணை கோரி மனுத்தாக்கல் செய்வதற்கான விதியாகும்.
குற்றவியல் விதி 437 ஆனது, கைது செய்யக் கூடிய மற்றும் பிணையில் விடத்தகாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நடுவர் முன் முன்னிலைப்படுத்தும் போது அல்லது நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட பின், அதே நடுவரிடம் பிணை கோரி மனுத்தாக்கல் செய்வதற்கான விதியாகும்.
இவ்விரண்டு விதிகளிலும் நன்றாக கவனிக்க வேண்டியது, ஒருவர் பிணையில் விடத்தக்க குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தாலும் அல்லது பிணையில் விடத்தகாத குற்றத்துக்காக கைது செய்யப் பட்டிருந்தாலும் பிணை கோர முடியும்.
குற்றவியல் விதி 438 ஆனது, குற்றம் சாற்றப்பட்ட ஒருவர் அல்லது சாற்றப்படலாம் என நம்புகிறவர், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் பிணை கோரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகும். இதன்படி மனுவைத் தாக்கல் செய்யும் போதே தான் குற்றவாளி என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டு விடுகிறார் என்பது எனது ஆய்வு முடிவு.
ஏனெனில், தவறு செய்தவர்களே முன் பிணை வாங்க முனைவார்கள். தவறு செய்யாதவர்கள் மற்றும் தன் பக்கம் நியாயம் இருப்பதாக கருதுபவர்கள் சர்வ சாதாரணமாக பயந்து விடமாட்டார்கள். எது நடந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்றே எதிர்கொள்வார்கள்.
முன் பிணை என்பது குற்றம் புரியாதவர்கள், கைது செய்யப்படுவதால் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்று என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தாமல் அறிவு வெறுமை வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களின் லஞ்சப் பிச்சைக்காகவே பயன்படுத்தி, பாழ்படுத்தி விட்டார்கள்.
குற்றவியல் விதி 439 ஆனது, பிணையில் விடத்தக்கது அல்லது விடத்தகாதது என எந்த வகையான குற்றம் சாற்றப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தாலும், அவர் நேரடியாகவே அல்லது மேல் முறையீடாகவே தனது பிணை கோரும் மனுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ தாக்கல் செய்வதற்கு வழி வகுப்பதாகும்.
ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவரைக் கைது செய்தாலே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கட்டாயம் பதினைந்து நாள் சிறையில் அடைத்து விடுகிறார்களே... அப்படி அடைக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வி அது போன்ற நாளிதழ் செய்திகளைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே எழுகிறது இல்லியா..?
ஆம்! உங்களின் கேள்வி நியாயமானதுதான். நிச்சயமாக, சிறையில் அடைத்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அப்படி அநாவசியமாக அடைத்து வைப்பதைச் சட்டப்படி தடுத்து, பதிலுக்கு போலீசுக்கும், நீதிபதிக்கும் எப்படி சாட்டையடி கொடுத்து கதிகலங்க வைத்தோம் என்பது குறித்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அனுபவ கட்டுரையைப் பின்னர் எழுதுகிறேன்.
பொதுவாக, பிணையில் நடக்கும் கூத்துகள் (விவாதம்) குறித்து அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் நடுவர் மன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடக்கும் ஊழல்களில், மிக முக்கியமான ஊழல் பிணையில் விடுவிப்பது, தண்டனையில் இருந்து தப்பிக்க வைப்பது ஆகியவற்றில் தான் சாதாரணமாக நடக்கிறது. அசாதாரணமாக நடப்பது எதில் என்று தெரியவில்லை.
இதை உணர்ந்ததால் தான், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் கூட லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார், காந்தியவாதி உண்ணா ஹசாரே..!
வக்கீல்கள் இதற்கென்றே பணத்தை தனியாக கறந்து, அரசு தரப்பு வக்கீலையும், நீதிபதியையும் சரி கட்டும் இந்த ஊழல்கள் மிகவும் வெளிப்படையாக தெரியக் கூடியவை. நீங்களும் எளிதாக அறிந்து கொள்ள கூடியவையே!
இதற்கு நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய சரியான இடம் மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள்தான். இதனை ஆங்கிலத்தில் செசன்ஸ் கோர்ட் என்பார்கள். பல மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அமர்வு நீதிமன்றங்கள் இருக்கும் போது, அதற்கெல்லாம் தலைமையாக முதன்மை அமர்வு நீதிமன்றம் இருக்கும். பெரும்பாலும், இதில்தான் பிணை குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
திருமண மற்றும் பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணைகளைப் பார்வையிட மட்டுமே பொது மக்களுக்கு அனுமதியில்லை.
மற்ற எல்லா வழக்கு விசாரணைகளையும், பெரும்பாலான தமிழ்ச் சினிமா நீதிமன்றங்களில் காட்டப்படுவது போல, பொதுமக்கள் பார்வையிட முடியுமே தவிர, கை தட்டி ரசிப்பது போன்றவைகளைச் செய்ய முடியாது. இந்த அருமையான, அறிவார்ந்த வசதிக்குச் சட்டத்தின் பெயரில் சொல்ல வேண்டுமென்றால், தமிழில் திறந்த நீதிமன்றம் என்றும், ஆங்கிலத்தில் ஓப்பன் கோர்ட் என்றும் பெயர்.
இதற்காக யாரிடமும், எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை என்றாலும், அவர்களின் அந்தரங்க (ர)கசியங்கள், கசிந்து விடுமே என்பதற்காக, நீதிமன்ற மா(மா)(ம)க்களான (மாக்கள், மாமாக்கள், மாமக்கள்) ஊழியர்கள் முதல் நீதிபதி வரை, உள்ளே வரக்கூடாது என அரட்டி மிரட்டுவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால், இது சட்டப்படி திறந்த நீதிமன்றம் என நீதிபதி வரை எடுத்துச் சொல்லி விட்டு விசாரணையைப் பார்வையிடுங்கள்.
பிணை மனுவைத் தாக்கல் செய்த வக்கீல், தனது மனு குறித்து எதையாவது சம்பிரதாயத்திற்கு உளறுவார். அச்சம்பிரதாயம் முடிந்ததும் நீதிபதி சாம்பிராணி போட ஆரம்பிப்பார். அரசு தரப்பு வக்கீலைப் (பப்ளிக் பிராசி கூட்டரை) பார்த்து, பெயரைச் சுருக்கி பிபி என கருத்து கேட்பார். நீதிபதி பிபின்னு சொன்னாரோ இல்லியோ, பிணை மனு தாக்கல் செய்த வக்கீலுக்கு உண்மையில் பீபி ஏறிடும்.
ஏன்னா, பிணை கொடுப்பதற்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என அடித்தளம் இட வேண்டியதே அவர்தானே?! அதனால, சாற்றப்பட்டுள்ள குற்றத்தின் தன்மை மற்றும் கைதியின் எதார்த்த நிலைகளுக்குத் தக்கவாறு, அவருக்குக் கவனிக்க வேண்டியதை எல்லாம் (பணம், மது, மாது) கவனித்திருந்தால் மட்டுமே ஆட்சேபணை செய்யமாட்டார். இல்லையென்றால்  அதோகதிதான்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் பிணை கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து நீதிபதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சூசகமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும். எப்படி?
அதாவது பிபி, தனது இருக்கையில் இருந்து எழும் போதே, எங்களின் நிதி ஆதாரத்திற்கெல்லாம் அதிபதியாக விளங்க கூடியவரே என்பதை மனதில் நிறுத்தி...
நீதிபதியவர்களே! இந்த வழக்குல (இன் திஸ் மேட்டர் ஆர் கேஸ் யுவர் ஆனர்) என்ற ஒலியோடு சவ்வு போல இழுத்தால், உனக்கு வர வேண்டியதும், எனக்கு வர வேண்டியதும் வந்து விட்டது. ஆதலால், பிணையில் விடுவதும் விடாததும் உன் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அர்த்தம்.
இதையே, எங்களின் நிதி ஆதாரத்திற்கெல்லாம் அதிபதியாக விளங்க கூடியவரே என்பதை மனதில் நிறுத்தி...
நீதிபதியவர்களே! இந்த வழக்கை நான் மிகவும் கடுமையாக ஆட்சேபிக்கிறேன் (ஐம் ஸ்டாங்லி அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்) என்ற ஒலியோடு எழுந்தால், பங்காளி உனக்கு வர வேண்டியது, எனக்கு வர வேண்டியது என எதுவுமே ஒழுங்கா வந்து சேரல (பேசினதுல குறையாத்தான் வந்திருக்கு அல்லது அறவே வரவே இல்லை) அதனால, பைத்தியக்காரதனமாக ஆர்டர் கீர்டர் போட்டுட போற (பிணையில் விடாதே) என்பது அர்த்தம்.
இப்படி நீதிமன்ற கூத்துக்களைப் பார்க்கும் போது, "தாத்தா காந்தியின் கூற்றான, வக்கீல்களும், நீதிபதிகளும் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாய், தக்க பாலமாய் இருப்பவர்கள்" என்ற கருத்துதான், நமது மனத்திரையில் பிரதிபலிக்கும்.
இதையே நாம் சிறையில் இருந்து கொண்டு மாமல்லன் மகேந்திரன் போல பிணை மனு போட்டால், அரசு வக்கீல் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து உத்தரவு போட சொல்லுவாரா அல்லது நீதிபதி அரசு வக்கீலுக்கு லஞ்சம் கொடுத்து அப்ஜெக்சன் பண்ணாதே என்பாரா.. யோசித்துப் பாருங்கள்.
அரசு வக்கீல் பிணையில் விட எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எழுதி கையெழுத்து போட்டு விடுவார், அல்ல அல்ல நீதிபதி போட வைத்து விடுவார். அதை வைத்து நமக்கும் பிணை உத்தரவு போட்டு விடுவார். இப்படி தண்டனைக் கைதிகள் கூட மேல்முறையீட்டில் பிணை மனு போட்டு உத்தரவு பெற்று பிணையில் வந்துள்ளனர்.
பல வேலைகளில், பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, தனது க(கா)ட்சிக்காரரிடம் வக்கீல்களின் புலம்பல் பெரும் அலம்பலாகத் தான் இருக்கும். அப்பதானே, அடுத்த மனு போட சம்மதிக்க வைத்து மேன்மேலும் பணம் சம்பாதிக்க முடியும். பலரையும் சம்பாதிக்க வைக்க முடியும்.
அடச்சே..! நாம சொல்ல நினைக்கிற செய்திய, ஒழுங்கா நேரா சொல்ல விடுறாங்களா? எவ்வளவு குறுக்கீடுகள் செய்யுறாங்கன்னு நீங்களே பாருங்க.. நமக்கு இருக்கிற திறமைய பயன்படுத்தி எப்படியெல்லாம் ஆங்காங்கே அவங்கள சரியாக சமாளித்து உங்களிடம் பேச வேண்டியிருக்குப் பாருங்க...
எனது சட்ட ஆராய்ச்சியில் பிணையில் வருவதற்கென்று வக்கீல்களுக்குத் தெரிந்த நாலு விதிகள் மற்றும் தெரியாத அதன் உள்விதிகள் உட்பட குத்து மதிப்பாக ஐம்பத்தி இரண்டு விதிகளைக் கண்டறிந்து, அதில் பல விதிகளைப் பயன்படுத்தி, பலனடைந்து அது குறித்த சுவையான தகவல்களை, இரண்டாவதாக எழுதியுள்ள பிணை எடுப்பது நூலில் பதிவும் செய்துள்ளேன்.
உண்மையில் பிணையில் வருவதற்கான தகுதி கைது செய்யப் பட்டுள்ளோம் என்று எப்போது தெரிகிறதோ, அந்த நிமிடத்தில் இருந்தே பிணை கோர முடியும். இதற்கான முதல் சட்ட விதி வக்கீல்கள் சொல்வது போல் 436 இல் தொடங்கி 439 இல் முடியவில்லை. மாறாக, விதி 42(2) இல் ஆரம்பமாகி 447 இல் முடிகிறது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்வது தொடங்கி, புலன் விசாரணையில் குற்றம் உறுதி, நீதிமன்ற விசாரணையில் குற்றம் உறுதி, மேல்முறையீட்டில் குற்றம் உறுதி, பைத்தியக்காரர்களின் குற்றம் உறுதி என பல்வேறு தரப்பட்ட சூழ்நிலைகளில் பிணை வழங்க சட்ட விதிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன.
இவற்றில் 167(2) என்ற விதி மிக மிக முக்கியமானது.
இவ்விதியின் கீழ் சிறையில் இருந்து கொண்டே அமர்வு நீதிமன்றத்திற்குத் தபால் மூலம் பிணை மனுவை அனுப்பி, பிணை உத்தரவு குறித்து எனக்கு சென்னை மத்திய சிறையில் இருந்து எழுதிய அஞ்சல் அட்டையை நீங்களும் படித்துதான் பாருங்களேன்.


இக்கடிதம் எழுதியவரைப் பற்றி சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல வேண்டும். இவர் பெயர் டி.மாமல்லன் மகேந்திரன். பெயரிலியே மிட்டா மிராசின் வாரிசு என்பது தெரிகிறது. இளநிலை பட்டயத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். ஆதலால், விவசாயம் பார்த்தால் கேவலம் இல்லியோ?
அதேசமயம், பலத்த எதிர்ப்புக்கு இடையில் காதல் திருமணம் செய்திருப்பார் போல... இந்தப் பிரச்சிணையில சுயமாக சம்பாதித்து காட்டுகிறேன் பார் என ஊரில் சபதமிட்டு, மனைவியோடு சென்னைக்கு வந்திருப்பார் போல... படிப்புக்கேற்ற வேலையும் கிடைக்கல போல...
எவரோ கொடுத்த சட்டத்துக்குப் புறம்பான யோசனையின் பேரில், படிப்பில் தங்க பதக்கம் பெற்ற இம்முட்டாள் போலி நிலப்பத்திரம் ஒன்றைத் தயார் செய்து, வங்கியில் அடமானம் வைத்து அதன் பேரில் ரூபாய் ஏழு லட்சத்தைப் பெற்ற மோசடியில் கைதாகி, பின் அப்பணம் முழுவதையும் செலவு செய்து வக்கீலின் துணையுடன் நிபந்தனை பிணையில் வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் காவல்துறையால் கைது செய்யப் படுகிறார். ஏன் தெரியுமா?  இவர் எப்படி போலி பத்திரம் தயார் செய்து ஏழு லட்சத்தை மோசடி செய்தாரோ, அதேபோல, இவரது பெயரில் வேறு எவரோ ஏழு லட்சத்தை ஆட்டைய போட்டு விட்டார்கள்.
இக்கைதில் வக்கீலை வைத்து பிணை மனு போட்டதில், ஐந்து லட்சத்தை வைப்பீடு செய்து விட்டு பிணையில் போகலாம் என நீதிபதி உத்தரவு போட்டு விட்டார். இதை எதிர்த்து அப்பீல் செய்ய பொய்யர்கள் உச்சநீதிமன்றம்தான் போக வேண்டும் என அங்கலாய்திருக்கிறார்கள்.
இதற்கு முப்பதாயிரத்தில் கூலி பேரத்தை ஆரம்பித்து, பத்தாயிரத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். கூடவே, குறைந்தது ஒரு லட்சத்தையாவது (அவர்களுக்கு) வைப்பீடு செய்ய வேண்டியிருக்கும் என சொல்லியிருக்கிறார்கள்.
இதில், தலை கிறுகிறுத்துப் போய் வேறு வழியில்லாமல் சுமார் எட்டு மாதங்களாக சிறையில் இருந்து வந்த நிலையில், சக கைதியான சட்ட கோவிந்தனைச் சந்திக்கிறார். கோவிந்தன் சிறையில் எப்போதும் சட்ட புத்தகமும் கையுமாக இருந்ததால், சிறை ஊழியர்களே வைத்த பெயர்தான், சட்ட கோவிந்தன்.
ஏழாவது வரை மட்டுமே படித்துள்ள சட்ட கோவிந்தன், ஒரு திருட்டு வழக்கில் உண்மையை ஒப்புக் கொள்ளப் போய், அதை அடிப்படையாக வைத்தே அவர் மீது மேலும் பதினோரு திருட்டு, வழிபறி போன்ற பொய் வழக்குகளைப் போட்டு விட்டார்கள். ஆண்டுக்கு ஆண்டு என நான்கு முறை குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டார்கள்.
எனது ஆலோசனை மற்றும் புலனாய்வின் பேரில், குண்டர் சட்டத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிறையிலேயே சட்டம் படித்து, அவர் மீதான பதினோரு வழக்குகளிலும் அவரே வாதாடி விடுதலையானவர். தற்போது சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.
இவர் மூலமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வழக்கு நிலவரங்களை விளக்கி கடிதம் எழுதுகிறார், மாமல்லன் மகேந்திரன்.
ஒரு வழக்கு உண்மை. ஒரு வழக்கு பொய். உண்மையான வழக்கிற்கு நாம் ஆலோசனை சொல்லப் போவதில்லை. இரண்டாவது வழக்கிற்கு நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும்; அதுதான் நியாயம். எனது இந்த முடிவிற்கு, முதல் மோசடி வழக்கில் குற்றச்சாற்றுகளை வனையவில்லை என்பது மேலும் ஒரு வலுவான காரணமாக இருந்தது.
முதல் வழக்கு உண்மைதானே! பின் ஏன் வழக்கை எட்டு மாதமாகியும் விசாரிக்கவே இல்லை? இதுபோன்ற மோசடி வழக்குகளில் வங்கி அதிகாரிகள், புரோக்கர்கள், பொய்யர்கள் என பலரும் சிக்குவார்கள்.
ஆதலால், தங்களுக்குப் பங்கு பிரிக்கப்பட்ட மோசடிப் பணம் உள்ளிட்ட அனைத்தையும் குற்றவாளியிடம் இருந்து ஏதாவதொரு வழியில் வசூல் செய்து விட்டு, பின் வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள்.
அதனால், விதி 167(2) இன்கீழ், என்னை அறுபது நாட்களுக்கு மேல் விசாரணை கைதியாக சிறையில் வைத்திருப்பது சட்ட விதியை மீறிய குற்றம் என்றும், இது முதல் வழக்கை அடிப்படையாக கொண்டு தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்கு எனவும், விசாரணையை ஆரம்பித்தால் வழக்கை பொய்ப்பிக்க தயார் எனவும், எனவே, எந்த நிபந்தனையும் இல்லாமல் பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும் அதிரடியாக பிணை மனு அனுப்ப சொல்லி அஞ்சல் அட்டை எழுதினேன்.
எனது அறிவுரையை நடைமுறைப்படுத்தி பார்க்காமல், அடாவடியாக திரும்ப திரும்ப ஏதாவதொரு அற்ப காரணத்தை முன் வைத்து எனக்கு கடிதம் எழுதியே காலத்தை கழித்துக் கொண்டிருந்ததோடு, எனக்கும் இரண்டு ரூபாய் அஞ்சலட்டையை நஷ்டம் செய்து விட்ட கடுப்பில், நான் சொல்லியபடி மனு போட்டு பிணையில் வந்தால் வா.. இல்லையென்றால் சிறையிலேயே இரு.. இனி எனக்கு கடிதம் எழுதாதே என்று இறுதியாக கடிதம் எழுதினேன். அதற்குப் பிறகுதான், மகேந்திரன் மசிந்து மனு அனுப்பினார்.
ஆனாலும், தனக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் பிணை கிடைக்காது என்ற தனது சந்தேக புத்தியில், இவரே முன் வந்து, ஐந்து லட்சம் ரொக்க வைப்பீட்டிற்குப் பதிலாக, அதற்கு ஈடான நிலப்பத்திரங்களை வைப்பீடு செய்வதாக தெரிவித்து அதன்படி பிணை உத்தரவும் பெற்றுள்ளார். இப்படி செய்ததால், வழக்கு முடியும் வரை வயல் வெளிகளை கூட, பணத்தேவைக்கு ஏற்ப எதுவுமே செய்ய முடியாது.
பொதுவாக, சட்டத்தில் பல முக்கிய விடயங்களுக்கு விளக்கம் சொல்லப்படவில்லை. இதில் குறிப்பிடத்தக்க ஒன்றே, பிணை!
பிணை என்பது குற்றம் சாற்றப்பட்ட ஒருவரை, தண்ணி தெளித்து தனித்து விட்டு விடாமல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பிடிப்பதற்கு வசதியாக சமுதாயத்தோடு ஏதாவதொரு வகையில் கட்டுப் பாடுகளை விதித்து பிணைத்து வைத்திருத்தல் என்பது பொருளாகும்.
எவருடைய செயலுக்காவது உ(ப)த்திரவா(வ)தம் (சூரிட்டி) தருவது, சமூக விரோதிகளால் கடத்தி செல்லப்படுபவர்கள் (பிணைய கைதி) என எல்லாவற்றுக்கும் அடித்தள பொருளும் இதுதான்.
எனவே, பிணையத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு இருக்கும் இந்திய நீதிமன்றங்களின் தரங்கெட்ட சூழ்நிலையில், மாமல்லன் மகேந்திரன் போல, மண்ணுமுட்டிதனமாக தேவையே இல்லாமல் ந(நி)லப்பத்திரங்களை வைப்பீடு செய்கிறேன் என்பது போன்ற கட்டுப்பாடுகளை நமக்கு நாமே நீதிபதிகளிடம் முன் மொழியக் கூடாது.
மாறாக, நீதிபதிகளிடம் சிக்கி சீரழியாமல் இருக்க என்னென்ன ஆக்கப் பூர்வமான சட்ட வழிகள் உண்டோ அதனை மட்டுமே கையாள வேண்டும்.
கனிமொழியின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு பிணையில் கூட, கனிமொழியின் நடவடிக்கைகளை அவரது வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணிக்கலாம் என்ற வக்கீலின் வாதம் எவ்வளவு பெரிய முட்டாள் தனமென யோசித்துப்பாருங்கள்...
சாதாரணமாக மனிதர்களுக்கென்று சில அந்தரங்க விசயங்கள் உண்டு. இதில் பல்துலக்குவது, குளிப்பது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது, உடை உடுத்துவது, அலங்கரித்துக் கொள்வது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, தூங்குவது போன்றவையும் அடங்கும்தானே? இவைகளுக்கு ஒரு நபருக்குச் சராசரியாக, குறைந்தது பத்து மணி நேரமாவது தேவைப்படுமே!
அதிலும் குறிப்பாக ஆண்களை விட, பெண்களின் அந்தரங்க விசயங்கள்தானே, சட்டப்படியும் சமுதாய சம்பிரதாயங்களின் படியும் போற்றப்பட்டு பேணி பாதுகாக்கப்படுகிறது. இந்த அடிப்படை அறிவு கனிமொழிக்காக வாதாடிய வக்கீலுக்குக் கிடையாதா? அல்லது கனிமொழி மனித இனத்திற்கு உட்பட்டவர் அல்ல, அப்பாற்பட்டவர் என்கிறாரா?
ஒருவேளை இச்சிக்கல்களை எல்லாம் நீதிபதிகள் கருத்தில் கொள்ளாமல், அதே நிபந்தனை பிணையில் விட்டிருந்தால் கனிமொழியின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை யோசிக்காமல், இப்படி கேட்டும் கூட, பிணையில் விட மறுத்து விட்டார்களே என ஆதங்கப்பட்டவர்கள்தானே அதிகம்!
வக்கீல்களின் வாதம் வாதமே அல்ல. மனித குலத்தின் வதமே! இதுதான் மெய்யே!! என்பதை மனித குலம் எப்போது உணரப் போகிறதோ அப்போதுதான், குற்றங்களைப் புரியாது, பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உண்மையான விழிப்பறிவுணர்வுடன் துன்பத்தில் இருந்து விடுதலை பெறும்.
மகேந்திரன் பிணையில் வந்த பின், மரியாதை நிமிர்த்தம் ஓரிரு முறை சந்தித்ததோடு சரி. இப்போது வழக்கு நிலவரம் என்ன? மனிதர் எங்கிருக்கிறார் என்ற விபரம்பெதுவுமே தெரியவில்லை. ஆனால், கடிதத்தின் இறுதியில் பாருங்கள். "இந்த இயக்கத்தைப் பெரிதாக்க இயன்ற அளவு செயல்படுவேன்" என கூறியுள்ளார்.
இப்படி சட்டத்தால் பலனடைந்தவர்கள் பலருமே, தானடைந்த பலனை மற்றவர்களும் அடைய வேண்டும் என முயற்சிப்பதே இல்லை. பின், எப்படி சமுதாயம் விழிப்பறிவுணவு அடையும்?
மகேந்திரனின் கடிதப் பக்கம் இரண்டில், சட்டம் தெரிந்ததால், தபால் செலவில் உத்தரவு வாங்கியாகி விட்டது என்ற வாசகம் சிறைத்துறை தபால் தணிக்கை ஊழியரால் அடிக்கோடிடப்பட்டு சுருக்கொப்பம் இடப்பட்டுள்ளதை மனதில் நிறுத்தவும்.
இது போன்ற முக்கியத்துவம் மிக்க ஆவணங்கள் நமது கைக்குக் கிடைப்பதே அரிது என்றால், அக்ச் சேதாரமில்லாமல் பல வருடங்களாக பாதுகாத்து வருவது சவாலான காரியமாகத்தான்  இருக்கிறது.
இதேபோல, இன்னொரு சுவரசியமான வழக்கு. இவர் கோவை உடுமலையைச் சேர்ந்த செல்வராஜ். பத்தாம் வகுப்பு வரை படித்தவர். நீதியைத்தேடி... வாசகர். இவர் மீது ஏற்கனவே பாதை தகராறு வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியதில், உடுமலை நடுவர் நீதிமன்றத்தில் இவரே வாதாடி விடுதலையானவர்.
இவ்விடுதலைக்கு முன்பாக நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக சென்னை மத்திய சிறைக்கு வருகிறார். அப்போது நானும் சிறைக்குச் சென்றிருந்த சமயம்.
இது தன் மீதான பொய் வழக்கு என்றும், வக்கீல் மூலம் பிணை மனு போட்டதில் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரத்தை வைப்பீடாக செலுத்தி விட்டு பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி என்னிடம் ஆலோசனை கேட்டார். அறுபது நாளைக்குச் சிறையில் இருங்கள். அடுத்த நாளே விதி 167(2) இன்கீழ், நீங்களே மனுவை அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன்.
ஆனால், இவரோ தனது மனைவி மூலம் சொன்னதைச் சொன்னபடி செய்யும் வழக்கில்லாது திரியும் வக்கீலைத் தேடி கண்டு பிடித்துச் சிறைக்கு வரவழைத்து, தான் எழுதிய மனு மாதிரியை அவரிடம் கொடுத்து, அப்படியே ஏற்கனவே பிணை வழங்கிய அதே அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுவாக போடு. அதற்காக ஆயிரம் ரூபாய் கூலி தருகிறேன் என ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்.
வக்கீலோ தங்களின் சமுதாயத்திற்குத் தெரிந்த நாலு சட்ட விதியில் மட்டுமே மனு போட முடியும் என்றும், தனது அனுபவத்தில் எந்த வக்கீலும் இவ்விதியின்படி மனு போட்டு பார்த்ததில்லை என்றும், ஏற்கனவே அமர்வு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று விட்டால், உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம் கொஞ்சம் கலந்து பேசியிருக்கிறார்.
மனு என்னவானாலும் பரவாயில்லை. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் சொல்லுறத செய்தா போதும்! நான் சொன்னபடி பிணை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் கேட்கிறேன் என சவால் விட்டிருக்கிறார். அதன் பிறகே, எதற்குச் சும்மா வருகிற ஆயிரம் ரூபாய விடுவானே என நினைத்து வக்கீல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனு கே.பாஸ்கரன் என்ற நீதிபதியிடம் விசாரணைக்கு வந்ததில், மனு சட்டப்படி சரிதான் என ஏற்கனவே பிறப்பித்த இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் வைப்பீடு என்பதை, ரூபாய் பத்தாயிரத்துக்கான பிணைய பத்திரம் எழுதிதர வேண்டும். கூடவே, இரண்டு பிணையதாரர்கள் எழுதி தர வேண்டும் என உத்தரவைத் திருத்தி உத்தரவு பிறப்பித்து விட்டார். ஆக ஒரு சல்லிப் பைசா கூட வைப்பீடு செய்யாமல் பிணையில் வந்து விட்டார்.
வக்கீலுக்கு இந்த உத்தரவை நம்பவே முடியலையாம். இப்படியெல்லாம் கூட, சட்டத்தை ஆராய்ந்து கையால ஆள் இருக்காங்களா? என்று ஆச்சரியப்பட்டதோடு, பிணை எடுப்பது நூலையும் வாங்கிக் கொண்டுள்ளார்.
இதையெல்லாம் விட கூத்து, இப்பிணை உத்தரவைத் தட்டச்சு செய்த நீதிமன்ற ஊழியர், பழக்கதோசத்தில் வழக்கம் போலவே 439 இன்கீழ் உத்தரவு என தலைப்பிட்டு சாதாரண தட்டச்சு யந்திரத்தில் தட்டச்சு செய்து கொண்டே வர பிற்பகுதியில்தான் விதி 167(2) இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என நீதிபதி அடிக்கோடிட்டு இருப்பது தெரிகிறது.
பொதுவாகவே, நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுக்களின் சட்ட விதிகள் பெரும்பாலும் நீதிபதிகளுக்குப் புதிதாகத்தான் இருக்கும். ஆதலால், அதற்குரிய சட்டப் புத்தகத்தை எடுத்து கட்டாயம் படிக்கத்தான் வேண்டியிருக்கும்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அச்சட்ட விதியைச் சமயோசித்த புத்தியோடு புத்தகத்தில் சரியாக எடுத்து படிக்க தெரியாத நீதிபதிக்கு எப்படி சரியாக கண்டுபிடித்து படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த அனுபவமும் எனக்குண்டு.
அத்தோடு, அந்தச் சட்ட விதியுடைய பக்கத்தை ஞாபகத்திற்காக அடையாளப்படுத்திக் கொள்வார்கள். பின் தனது உத்தரவில், அச்சட்ட விதியைக் குறிப்பாக அடிக்கோடிட்டு (நாம் மனு எழுதும் போது, சில முக்கிய விசயங்களைத் தனிமைப்படுத்தி காட்ட எதோவொரு விதத்தில் வித்தியாசப்படுத்தி காட்டுவோமே) அதுபோல காட்டுவார்கள்.
மகேந்திரனின் பிணை உத்தரவில் இப்படியொரு விசித்திரத்தைக் கண்ட தட்டச்சு ஊழியர் 439 என்பதன் மேல் / / / இப்படி மூன்று நெடுக்கு கோடிட்டு அடித்து விட்டு, அதற்கு மேல் பகுதியில் 167(2) என்பதைத் தட்டச்சு செய்துள்ளார். இந்த உத்தரவு என் வசம் பத்திரமாக இருக்கிறது. ஆனால், அதைத் தேடி எடுத்து இங்கு பிரசுரிக்கத்தான் நேரமில்லை.
இதே உத்தரவின் நகலைச் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பல்வகை மனு எண் 2022/2005 உள் குற்ற எண் 1/2005 பொருளாதார குற்றப்பிரிவு கோவை - 2 இன்கீழ் நகல் மனு செய்து நீங்களே கூட வாங்கலாம்.
இவைகள் எல்லாம், இந்திய நீதித்துறையே செக்குமாடு போன்று ஒரே இடத்தில், குறுகிய வட்டத்தில்தான் இன்றும் சுழன்று கொண்டு இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
2005 ஆம் ஆண்டே நீதியைத்தேடி... வாசகர்களால் நடைமுறைப்படுத்தி காட்டப்பட்ட சட்ட விதிகள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் தெரியவே வாய்ப்பில்லை என்ற எனது அன்றைய கூற்றும், குற்றச்சாற்றும் கனிமொழி பிணை விவகாரத்தில் இன்றும் உறுதியாகி விட்டது.
கனிமொழி பிணை மனு அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்ட போதிலும்,  குற்றவியல் விதிப்படி அறுபத்தி ஒன்றாவது நாளே அல்லது அரசமைப்பின்படி அதிகபட்சமான தொண்ணூற்று ஒன்றாவது நாளே பிணையில் வந்து விட முடியும் என்பது யாருக்காவது தெரிந்தால், இந்நேரம் அதற்கான மனுச் செய்யப்பட்டு, பிணையிலும் வந்திருப்பார்.
இதுபற்றிய செய்தி இந்தியா பரபரப்பாக பேசப்பட்டிருக்கும், வெளிவந்திருக்கும். அட, இவ்வளவு ஏன்? இந்த இந்நேரம் தளத்தில் கூட, இதற்கு முன்பாக ஏதாவதொரு வகையில், வடிவில் செய்தி வந்திருக்குமே?!
இப்படி ஏதும் செய்தி வருகிறதா என்பதற்காகத்தான் இக்கட்டுரையை எழுதுவதில் தாமதம் செய்து வந்தேன். ஆனால், இப்படிப்பட்ட செய்தி ஏதும் எனக்கு தெரிய வரவில்லை என்பதோடு, கைது செய்து சிறையில் அடைத்து தொண்ணூறு நாட்களைக் கடந்து 01-09-2011 ஆன இன்று நூற்று நான்கு நாட்கள் ஆகி விட்டன.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆண்டிமுத்து ராசா உள்ளிட்ட பலரும், பல மாதங்களாக சிறையில் இருந்து வருகின்றனர் மற்றும் கனிமொழி போலவே பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு சிறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ராசா உயிருக்குப் பயந்தே பிணையில் வராமல் சிறையில் தங்கியிருக்கிறார் என்ற கருத்து பரவலாகவே இருக்கிறது. இதற்கு ராசாவின் நெருங்கிய நண்பர் மர்மமான முறையில் இறந்ததே அடித்தளமாக இருந்தது. ஆனால், அதுவும் தற்போது தற்கொலை என தடயவியல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத சிலர் சாதாரண விசாரணைக்கே பயந்து சாவார்கள் என்பதற்குப் பற்பல சம்பவங்கள் இருந்தாலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்காதது ஏன், என்பதற்கு விளக்கமளிக்க நேரில் முன்னிலையாக கோரி தகவல் ஆணையம் அனுப்பிய அழைப்பாணையைப் பெற்ற மேட்டூர் துணை வட்ட ஆட்சியரே (குற்றவியல் சட்டப்படி வட்ட நிர்வாக நீதிபதி பொறுப்பு) கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சராக இருந்த தனது நண்பரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண சாதிக் பாட்சா சாகாமல் இருப்பது எப்படி சாத்தியம்? ஒருவேளை அப்படி தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், எப்படி இவ்வளவு துணிச்சலாக இருக்கிறீர்கள் என சந்தேகத்தோடு கேள்வி கேட்டிருக்க வேண்டியதுதானே நியாயம்.
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஒருவர் பிணையில் போகவே விரும்பவில்லை என்றாலும் கூட, அவரைத் தொண்ணூறு நாட்களுக்கு மேல் சிறையில் தங்க அனுமதித்திருப்பது இந்திய சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிகொடுப்பதும், பறிப்பதுமாகும்.
அதனால், இதனை இந்திய அரசும், நீதித்துறையும் தனக்கு ஏற்பட்ட அவமானமாகத்தான் கருத வேண்டுமேயன்றி ஒருகாலும் சாதகமாக கருதக்கூடாது. கருதவும் முடியாது. அப்படி கருதினால், அது நிச்சயமாக தங்களின் இயலாமையே ஆகும்.
இப்படியொரு சட்டச் சிக்கல் வந்தால், அவரை எப்படி சிறையில் இருந்து வெளியேற்றுவது என்பதற்கு எனது அறிவுக்கு எட்டிய ஆராய்ச்சி வரை குற்ற சட்ட விதிகளில் போதிய வழிவகைகள் காணப்படவில்லை. இதனைச் சட்டத்தின் குறைபாடாகவும் நிச்சயம் கருத முடியாது.
ஏனெனில், குற்றம் சுமத்தி கைது செய்யப்படும் எவரும், ஆண்டிமுத்து ராசா போல விசாரணை முடியும் வரை சிறையிலேயே தான் இருப்பேன். விடுதலையானால்தான், வீட்டிற்குப் போவேன் என்று முற்போக்கு சிந்தனையோடு அடம்பிடித்ததில்லை.
மாறாக, பிற்போக்கு சிந்தனையில், குற்றம் சுமத்துவார்கள் என்று தெரிந்தாலே, முன் ஜாமீனுக்கு ஓடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பிறகும் உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எப்படியாவது பிணையில் போய் விட வேண்டும் என முயற்சிப்பவர்களே என்பதற்கு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட பலரும் நல்லதொரு எடுத்துக்காட்டுதானே?
எனவே, துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்ற கருத்தொற்றுமை அடிப்படையில், பிணையில் போகமாட்டேன் என்பதிலும், தனக்காக தானே வாதாடும் நிலைப்பாட்டிலும், பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற மனோதிடத்திலும் ஆண்டிமுத்து ராசா மத்திய அரசுக்கும், இந்திய நீதித்துறைக்கும் விடுத்துள்ள சவாலாகவே என்னால் பார்க்க முடிகிறது என்பதால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அத்தோடு, அத்தகவல் தொழில் நுட்பத் துறையில் யார் யார் போட்ட ஆட்டைகளுக்கு, அத்துறையின் பொறுப்பை வகித்தவர் என்பதால், ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் ஓரளவிற்கு உணர முடிகிறது.
கருணாநிதியின் கூடா நட்பு கேடாய் முடியும், ராசா ஒருவரே அவ்வளவு பெரிய ஊழலைச் செய்திருக்க முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு மறைமுக புலம்பல்கள் அனைத்தும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தங்களது அரசியல் சதுரங்கத்தைச் சாமார்த்தியமாக நகர்த்தி வருவதையே காட்டுகிறது.
சட்ட அதிகார ரீதியாகவும், சொல்லப் போனால் வெளிப்படையான அரசியல் ரீதியான ஆதரவுடனும், உச்சநீதிமன்றத்தின் அதிகாரமில்லாத அதிகார கண்காணிப்பிலும், சுமார் இரண்டாண்டுகளுக்கும் மேலாக சிபிஐ இந்த வழக்கைப் புலனாய்வு செய்து வரும் நிலையில், அறுபது நாட்களுக்குள் குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்யாததோடு, இதுவரையிலும் கூட முழுமையானதொரு அறிக்கையைத் தாக்கல் செய்யாதது மற்றும் குற்றச்சாற்றின் பேரில், தமது மத்திய அமைச்சர் பதவியை இழந்த பின்னும் தயாநிதிமாறன் கைது செய்யப்படாமல் இருப்பது ஆகியன புரியாத புதிராகவும், பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது.
எது எப்படியோ, சட்டத்தை ஏன் சரியாக கையாளவில்லை என்பதைக் கேள்வி எழுப்பி, விழிப்பறிவுணர்வூட்டி அனைவருக்கும் உரிய பொதுவான நியாயத்தை நிலை நாட்ட முயல்வதே நமது கடமை. இக்கடமையைச் செய்யவில்லை என்றால், நாளை நமக்கும் இதே நிலைமை வரலாம். இப்போது போலவே அப்போதும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
இந்திய சாசன கோட்பாடு 22(4) இன்படி, தொண்ணூறு நாட்களுக்கு மேல் ஒருவரை தண்டனையில்லாமல், விசாரணைக் கைதியாக சிறைப்படுத்தி வைக்க வேண்டும் என்றால், அவரைத் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்த மூன்று மாதத்திற்குள்ளாக அதற்கென நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தகுதிக்குக் குறையாத பிரத்தியோக அறிவுரை குழுமத்தின் உத்தரவைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இவ்வழக்கில் கைதாகியுள்ள அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் உ(ஊ)ழல் தடுப்புச் சட்டம் 1988 ஆகிய பிரிவுகளின் கீழ்தானே தவிர, மற்றபடி தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற பயங்கரவாத ஒழிப்பு சட்டங்களின் கீழும் அல்ல என்பதால், அனைவரின் சிறைவைப்பு அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.
பத்து ரூபாய் லஞ்ச பிச்சை எடுக்கிற அரசு ஊழியர்களுக்கும், பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்கிற அரசியல் ஊழியர்களுக்கும் ஒரே ஊழல் தடுப்பு சட்டம் 1988 தான் என்பதும், ஒரே தண்டனைதான் என்பதும் ஒழிக்கப்பட வேண்டும். லஞ்சமும், ஊழலுமே முதல் தேச விரோத செயலென அறிவிக்க வேண்டும். லட்சத்திற்கு உட்பட்ட லஞ்ச ஊழலுக்கு குறைந்தது ஐந்து முதல் பத்தாண்டுகள் வெறுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும்.
லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கினாலோ அல்லது ஊழல் செய்தாலோ அது மாபெரும் தேச விரோத செயல் என்ற வகையில், அறுபது நாட்கள் அல்ல, ஆறு மாதங்கள் அல்ல ஒரு வருடம் வரை தடுப்புக் காவல் சிறையில் அடைக்கவும், குறைந்தது பத்து முதல் ஆயுள் தண்டனை வரை கடுங்காவல் தண்டனை விதிக்கவும், கோடியைத் தாண்டும் ஊழல் கேடிகளுக்கு மரண தண்டனை விதிக்கவும் வழி செய்ய வேண்டும்.
முன்பாக, அடிப்படை உரிமைகளைப் பொருத்தமட்டில் கோட்பாடு 32 இன்கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனிமொழியின் பிணை விசயத்தில் இக்கோட்பாடு உச்சநீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏன்.. எப்படி.. என்பது பற்றி இறுதியில் பார்ப்போம் என சொல்லியிருந்தேன் அல்லவா? அதுபற்றி சற்றே சிந்திப்போம்.
இந்திய சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டிய கடமை உச்சபட்சமாக உச்சநீதிமன்றத்திடமே இருக்கிறது என்பது பட்டிக்காட்டு பாமர, குடிமகனும் அறிந்ததே என்ற நிலையில்...
அ) குற்ற விசாரணை முறை விதி 167(2) இன் அறிவுறுத்தல்படி, அதிகபட்சமாக அறுபது நாட்களுக்குள் மத்திய புலனாய்வு துறை, தனது புலனாய்வை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,
ஆ) அப்படி செய்யாத போது, அடுத்த நாளே கைது செய்யப்பட்டவர்களை, சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தன் விருப்புரிமை பிணையில் விடுவிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றமே தன் விருப்புரிமையில் உத்தரவிட்டு ராசா உட்பட அனைவரையுமே எப்பவோ வெளியில் அனுப்பியிருக்க வேண்டும்.
இ) ஆனால், அப்படி எதையுமே செய்யவில்லை என்பதோடு, கனிமொழியின் பிணை மனு மீது பிறப்பித்துள்ள உத்தரவில், "குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்படும் வரையில் பொறுத்திருக்க வேண்டும் என்றும், பின்னர் சிறப்பு நீதிமன்றத்திலேயே பிணை மனுச்செய்ய வேண்டும்" எனவும் எவ்விதத்திலும் சட்டத்திற்கு உட்படாத வகையில், நீதிபதிகள் தங்களின் மனம் போன போக்கில் அறிவுருத்தியிருப்பது...
அடிப்படை உரிமைகள் குறித்த அறிவில்லாதனமா...! வில்லத்தனமா..?
குற்றவியல் உரிமைகள் குறித்த குழப்பமா...! குதர்க்கமா..?
அரசியல் சதுரங்கத்தில் அக்கரையா...! அதீத ஈடுபாடா..?
புலனாய்வு துறையில் புகலிடமா...! புல்லுருவி தனமா..?
என்ன நடக்கிறது... இந்திய மக்களாட்சியில்... நீதித்துறையில்...
மக்களுக்காக, மக்களின் நல்வாழ்வுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்தை மீறி செயல்படுவதற்கு சட்டம் ஒன்றும் நீதிபதிகளின் பாட்டன், முப்பாட்டன் சொத்துமல்ல. நீதிமன்றம் அவர்களின் சொந்த வீடுமல்ல. நீதிபதிகள் மக்களின் பண்னை எஜமானர்களும் அல்ல; மக்கள் நீதிபதிகளின் கொத்தடிமைகளும்  அல்ல.

மாறாக, சட்டம் மற்றும் நீதிமன்றம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமையுள்ள பொதுச் சொத்து. அதற்கு சேதாரம் வரும் போது காக்க வேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை கடமை. குடிமக்களே நீதிபதிகளின் எஜமானர்கள். குடிமக்களுக்கு சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டியதே நீதிபதிகளின் வேலை.

நமக்கு நன்றாக தெரிந்தது ராசா, கனிமொழி போன்றோர் என்றால் தெரியாமல், இந்தியா முழுவதும் இப்படி சட்ட விரோத சிறையில், அடிமைகளாக, கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள நபர்கள் எத்தனை ஆயிரமோ அல்லது லட்சமோ தெரியவில்லையே..?!
ராசா, கனிமொழி உள்ளிட்டு இவ்வழக்கிற்காக சிறைப்படுத்தப் பட்டிருக்கும் பலருக்கும் கிடைக்கும் பிணை உத்தரவு, ‘இந்தியச் சிறைச்சாலைகளில் பல மாதங்களாக, பல்லாண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறைப்பட்டு கிடக்கும் அத்துனை இந்தியர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை’.
முக்கிய குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கம், "உண்மையில் நம் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் எப்படியெல்லாம் அருமையாக, அற்புதமாக அடிப்படையே இல்லாமல் எவர் ஒருவரின் அடிப்படை உரிமையையும் சர்வ சாதாரணமாக பறிக்காத அளவிற்கு நியாயம்தான் சட்டம் என்ற வகையில் இருக்கின்றன" என்பதை உணர்த்தவே!
ஆனால், நீதிபதிகள் உள்ளிட்ட எவருக்குமே சட்டம் குறித்த மிகச்சரியான புரிதலும், உணர்வும் இல்லாததால் பாமரர்கள் முதல் பணக்காரர்கள் வரை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சி மற்றும் அனுபவ ஆதாரங்களோடு விளக்கி, சட்டத்தை நடைமுறையில் சா(ச)த்தியப்படுத்துவதேயாகும். எக்காரணம் கொண்டும் இதை அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ கருத வேண்டாம்.

No comments:

Post a Comment