நிலமோசடி வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் மதுரை தி.மு.க., நிர்வாகிகளை, மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்தார். மதுரை, திருமங்கலத்தில், நிலமோசடி தொடர்பாக, மதுரை நகர தி.மு.க., செயலர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு), திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர தி.மு.க., செயலர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 10.50 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழகிரி வந்தார். சிறை வளாகத்தினுள், தி.மு.க., பிரமுகர்களின் கார்கள் அனுமதிக்கப்பட்டன. உள்வட்ட வளாகத்தினுள், அழகிரியின் கார் மட்டும் அனுமதிக்கப்பட்டது. கைதாகி இருக்கும் நால்வரும், ஜெயிலர் அறையில், ஏற்கனவே உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.
அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, டி.பி.எம்., மைதீன்கான், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நெல்லை மேயர் சுப்பிரமணியன், துணைமேயர் முத்துராமலிங்கம், மதுரை துணைமேயர் மன்னன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். உள்ளே இருக்கும் நால்வரிடமும், ""எப்படியிருக்குது சிறை?'' என அழகிரி கேட்டார்.
"பரவாயில்லை... கொசுக்கடி தான் தாங்க முடியலைண்ணே...' என்றனர். ""ஓடோமாஸ் வாங்கித் தரச் சொல்றேன்...'' என்றபடி, பக்கத்தில் நின்ற கட்சி நிர்வாகிகளை பார்த்தார். அதற்கு பதிலளித்த கருப்பசாமி பாண்டியன், ""பழம், பிஸ்கட் எல்லாம் வாங்கி கொடுத்தாச்சு. ரெண்டு நாள் வெளியூர் போறேன். அப்புறம் ரெகுலராக வந்து பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார்.
""இருவருக்கு ஒரு கழிப்பறை வீதம் தான் உள்ளது,'' என கூறிய பொட்டுசுரேஷ், ""இங்கேயாவது பரவாயில்லைண்ணே... மற்ற இடங்களில் 10 பேருக்கு ஒண்ணுதாண்ணே இருக்குது,'' என்றார்.
அங்கிருந்த சிறை அதிகாரி ரவீந்திரனிடம், "உங்களுக்கு எதுவும் குறை உள்ளதா?' என, அழகிரியுடன் வந்தவர்கள் கேட்டனர். ""உள்ளே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது,'' என்றார். மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்கிறோம் என, நெல்லை மேயர் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தார் அழகிரி. பத்திரிகையாளர்களிடம், ""பொய்ப்புகாரில் போடப்பட்ட வழக்கு. நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க வந்தேன்,'' எனக் கூறியதும், கார் கிளம்பியது. 11.20 மணிக்கு மதுரைக்கு கிளம்பினார்.
Thanks to Dinamalar
No comments:
Post a Comment