நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Saturday, July 9, 2011

ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது குறித்து சன் டிவி பெருத்த அமைதி!

சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கைது செய்யப்பட்டது தொடர்பாக சன் டிவி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பெருத்த அமைதி காக்கப்படுகிறது.

சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "நான் சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்கிறேன். "சன்பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ள "தீராத விளையாட்டுப்பிள்ளை'' படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார். அதன்பேரில், ரூ.1.25 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன்.

ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டுவிட்டார். நான் கொடுத்த ரூ.1.25 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா தராமல் இழுத்தடித்தார்.

கடந்த ஜனவரி மாதம் அதுபற்றி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இந்த புகார் மனு மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந் தேதி அன்று கொலை மிரட்டல் மற்றும் மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்கள்.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சக்சேனா நேற்று இரவு 7 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் வைத்து அவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் சன் டிவி வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் சக்ஸேனா, சன் குழும அதிபர் கலாநிதி மாறனின் வலது கரம் போன்றவர், அவருடைய நெருங்கிய நண்பர். சன் டிவியின் நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வந்தவரும் சக்ஸேனாதான். இதனால் அவரது கைது விவகாரம் சன் குழுமத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை சன் குழுமத்திலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. சன் டிவி செய்திகளிலும் கூட இதுகுறித்து எந்த செய்தியும் இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment