
2ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான குழு சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, பாஜக சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. பொதுவாக சிபிஐ இயக்குநர்கள் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில்லை. எனினும், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் 5 எம்.பி.க்கள் அவரைச் சந்தித்து 2ஜி விவகாரம் தொடர்பாக மனு அளிக்க அனுமதி கோரி இருந்தனர்.சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பாஜக எம்பிக்களான பிரகாஷ் ஜவடேகர், மாயா சிங், சிவகுமார் உதாசி, பூபேந்திர யாதவ், ஜகத் பிரசாத் நடா ஆகியோர் அடங்கிய 5 பேர் குழு அவரைச் சந்தித்தது. 2ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் அப்போதைய நிதி அமைச்சரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்திற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை சிபிஐ இயக்குநரிடம் அவர்கள் வழங்கினர். தங்களுக்குக் கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாகவும் ஏ.பி.சிங்கிடம் அவர்கள் தெரிவித்தனர்.சிபிஐ இயக்குநரிடம் அளித்த மனுவில், 2ஜிஅலைக்கற்றையை முறைகேடாக ஓதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக, அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்காதது ஆச்சரியமாக உள்ளது.2ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஓதுக்கீடு செய்த விவகாரத்தில் விலையை நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும்தான் தீர்மானிக்க வேண்டும் என்று 2003-ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, எந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு அமைச்சகங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அதில் பாஜக சுட்டிக்காட்டி உள்ளது.சிபிஐ இயக்குநரைச் சந்தித்த பின்னர், பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியது:இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்த ஆவணங்களை சிபிஐ இயக்குநரிடம் அளித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்து வந்த காலக்கட்டத்தில்தான் அனைத்தும் நடைபெற்றுள்ளது. ஜனவரி 2008-ம் ஆண்டு வரை நிதியமைச்சகம் வசம்தான் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழ்ங்குவதற்கான அதிகாரம் இருந்தது என பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் சிபிஐ என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தெரிவித்தார். இப் பிரச்னையை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லத் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், சிபிஐ-யிடம் மனு அளித்துள்ளோம், அது நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம். நடவடிக்கை ஏதும் இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.காங்கிரஸ் கருத்து: பாஜக குழு நேரில் சிபிஐ-யிடம் மனு கொடுத்துள்ளது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது: ஒவ்வொரு முறையும் சிபிஐ-யை குறை கூறி வந்த பாஜகவினர். இப்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐ இயக்குநரைச் சந்தித்து உள்ளனர். இதன் மூலம் சிபிஐ செயல்பாடுகள் மீது பாஜகவினருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. அதே சமயம் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வரும் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் அந்த அமைப்பை அவமதிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
Thanks to Dinamani
No comments:
Post a Comment