நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Wednesday, August 24, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படுகிறதா ?

அன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக தொலைக்கட்சி சேனல்களில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள்,
அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா ?
இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தானே ?
pict13
நடுத்தர வர்க்கம் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதிகளா ?
அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும்  மிரட்டுகிறார்களா ?
15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலையில்லையா ?
120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?
pict17
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்தப் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா என்பதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை.
ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்குகளை நிர்ணயிப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான்.   அந்த நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்த ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது.   டெல்லி விமானநிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது, ஏசி வகுப்பில் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது, மல்டி ப்ளெக்சுகளில் சுகாதாரம் இல்லை, கேஎப்சி சிக்கனில் கொழுப்பு அதிகமாக உள்ளது, ஐஐடியில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளது போன்ற விபரங்கள், இந்த ஊடகங்களால் செய்தியாக்கப் படுவதற்கான காரணம் இதுதான்.
ஆனால் இந்த ஊடகங்களால்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது என்கிறா வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தகவல்களுக்காக பார்த்துத் தெரிந்து கொண்டு, தன்னெழுச்சியாக வரும் கூட்டமே அதிகம்.   மும்பையில் வேலை நிறுத்தம் செய்யும் டப்பாவாலாக்கள் அர்னாப் கோஸ்வாமியைப் பார்த்துத்தான் போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.   இந்தப் போராட்டத்தை லைவாக கவர் செய்வதால், தங்கள் டிஆர்பி ரேட்டிங் கூடும் என்ற சுயநல நோக்கத்தாலேயே இப்படி லைவ் கவரேஜ் செய்கிறார்கள்.
இதே புதுதில்லியில், நாட்டின் பல மூலைகளிலும் இருந்து, பல்வேறு மலைவாழ் மக்கள், விவசாயிகள், போன்றவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால், அந்தப் போராட்டங்கள் இந்த தொலைக்காட்சிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லை.  காரணம், நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை.

pict3
இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டுமே என்றால் இருக்கலாம் அதில் என்ன தவறு என்றுதான் கூற முடியும்.  ஏழை மக்களை விட நடுத்தர மக்கள், இந்த ஊழலால் மிக அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.  கிராமப்புரங்களில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஏழை விளிம்பு நிலை மக்களை, ஊழல் பெரிய அளவில் பாதிப்பதில்லை.  ஏனெனில், ஊழலை அவன் நேரடியாக சந்திக்கும் நேர்வுகள் குறைவு. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், லஞ்சத்தை நேரடியாக பல நேர்வுகளில் சந்திக்கிறார்கள்.    பைக்குகள், கார்கள் வாங்குகையில் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, வீட்டு மனை மற்றும் வீடுகள் வாங்குககையில் பல்வேறு அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுப்பது வரை, இவர்கள் நேரடியாக லஞ்சத்தை சந்திக்கும் நேர்வுகள் அதிகம் என்பதால், இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் வியப்பில்லை.
pict2
ஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில்.  ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால்.  உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர்.  சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள்.  இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.   இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே.    இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. ? இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் ?
நடுத்தர மக்கள் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியா என்றால், நடுத்தர மக்களும், இந்தியாவின் பிரதிநிதிகளே….  நடுத்தர மக்களை ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், விளிம்பு நிலை மக்களை மட்டும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ன ?   ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன ? குறைந்தபட்சம் அந்த மக்களின் வறுமையைக் கூட போக்கவில்லையே இந்த அரசியல்வாதிகள்…!!!!
pict14
இது நடுத்தர மக்களின் போராட்டம், ஆனால் நடுத்தர மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், எதற்காக காங்கிரஸ் அரசாங்கம் அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது ?   நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை, ஆகையால் நாங்கள் உங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எளிதாக சொல்லியிருக்க முடியுமே …..
சரி, நடுத்தர வர்க்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், இன்று பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகளா என்ன ?   பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே ? மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் அவர்கள் மட்டும் என்ன 120 கோடி மக்களின் பிரதிநிதிகளா என்ன ?
இவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்றார்களா என்ன ?  தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… ? அதிலும் பாதியைத்தானே பெற்றிருக்கிறார்கள் ?  இவர்கள் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதியா ?
pict4
அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?
இதை தலைகீழாக அல்லவா பார்க்க வேண்டும் ?   அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது ?  இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா ?  எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் ?  சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன ?  மேலும், இந்த பிரச்சினை இப்போது தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம், ஏப்ரலில் வலுப்பெற்றது.  அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினரோடு ஏறக்குறைய 100 மணி நேரத்துக்கும் மேல் இந்த அரசின் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களே… இப்போது காட்டும் இந்த வேகத்தை ஏப்ரல் மாதம் முதல் காட்டியிருந்தார்களேயானால், இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே…
15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?
pict5
மனமிருந்தால் மார்க்கமுண்டு.   15 நிமிடங்களில் 17 சட்டங்களை நிறைவேற்றியது இதே பாராளுமன்றம் தான்.   அதற்காக லோக்பால் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப் பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையே…..   விவாதித்து நிறைவேற்ற இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் போதாதா ?  மேலும், அரசு நினைத்தால், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட இயலுமே… இத்தனை நாள் செய்யாததை இப்போதாவது செய்யுங்கள் என்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமற்றது அல்லவே.
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை இல்லையா ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை என்பதை யாருமே மறுக்கவில்லையே.. அந்த வேலையைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார்கள்.  40 ஆண்டுகளாக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே துருப்பிடிக்க வைத்த காரணத்தாலே தானே இன்று போராட்டம் நடந்திருக்கிறது.  இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே….  மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 15 ஆண்டுகளாக சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே… இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின்  லட்சணம்.
120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?
pict12
ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக மஹாத்மா காந்தியை பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளவில்லையா ?  அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை   நடத்தினார்கள் ?  மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி   அல்லவே !!  உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம்.  சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா ?  அவ்வாறு வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றாலும் அவரைத்தானே அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக கருதுகிறார்கள்.   வெறும் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ப.சிதம்பரம் இன்று அமைச்சராக இல்லையா ?
சோனியா காந்தி தலைவராக உள்ள தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) கூட பல்வேறு சட்டங்களின் வரைவுகளை தயாரித்துத் தருகிறதே…  அந்த அடிப்படையில் உருவான சட்டம் தானே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ?   அந்த தேசிய ஆலோசனைக் குழு 120 கோடி மக்களின் பிரதிநிதியா என்ன ?
இன்று நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல்களை செய்து விட்டு, அதை மறைக்க கடும் முயற்சிகளை எடுத்த இந்த அரசாங்கத்தின் மீதானது.  ராசா தவறே செய்யவில்லை, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு, கூச்சமில்லாமல் லோக்பால் மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி மக்கள் நம்புவார்கள் ?  ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது ?  இந்த அன்னா ஹசாரே பிரச்சினை எழுவதற்கு முன்பு கூட, ஷீலா தீக்ஷித்தைக் காப்பாற்றத் தானே காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து கொண்டு இருந்தது. தயாநிதி மாறனை கடைசி வரை காங்கிரஸ் காப்பாற்றவில்லையா ?
pict15
சோனியாவின் குடும்ப நண்பர் ஒத்தாவியோ கொட்டரோச்சியை காப்பாற்றி, பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சத்தம் போடாமல், நீக்கி, முடக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கை சத்தமில்லாமல் ரிலீஸ் செய்து, சோனியாவின் நண்பரை காப்பாற்றியது அத்தனையும் சிபிஐ தானே ?
எதை வைத்து நம்பச் சொல்கிறார்கள் இந்தக் காங்கிரஸ் அரசை ?

Thanks to SAVUKKU

No comments:

Post a Comment