நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, August 19, 2011

மன்மோகன் சிங்கும் கருப்பண்ண சாமியும்

நீங்க அமேரிக்காவுல பொருளாதாரம் படிச்சவரு.   நாலு அஞ்சு டாக்டர் பட்டமெல்லாம் வாங்குனவரு.  நெறய்ய படிச்சவருன்னு என் மவன் சொல்றான். ஆனா இவ்ளோ படிச்சுட்டு நாட்ட குட்டிச்சொவரு பண்ணதே நீங்கதான்னு சொல்றாங்கய்யா.    நாங்கள்ளாம் படிக்காதவங்க.  பூமிய தெய்வமா நெனைக்கறவங்க.   சூதுவாதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.  அடுத்தவங்களுக்கு துரோகம் நெனைக்க மாட்டோம்.  துரோகம் பண்ணவங்கள மன்னிக்கவும் மாட்டோம்.

ஆனா நீங்க துரோகம் பண்ணவங்களோடவே சேந்து இருக்கீங்கன்னு என் மவன் சொல்றான் அய்யா.  இந்திரா அம்மா செத்தப்போ டெல்லில உங்கள மாதிரி தலப்பா கட்னவங்க எல்லாத்தையும், அவங்க பொண்டாட்டி கொழந்தைங்க எல்லாத்தையும், ஆடு மாடு மாதிரி வெட்டிக் கொன்னாங்களாமே…   குழந்தைங்களையெல்லாம் தீய வெச்சு எரிச்சாங்களாமே…. அதுக்கு காரணமே காங்கிரஸ் கட்சிக் காரங்கத்தானாமே… அதே காங்கிரஸ் கட்சியில 1991ல ஒங்களுக்கு பதவி கொடுத்தப்போ வெக்கமே இல்லாம ஏத்துக்கிட்டீங்களாமே..?  எங்களுக்கெல்லாம் மானம்தான்யா பெருசு..  மீதி எல்லாமே அப்புறம் தான்.     இப்புடி சொந்தக் காரங்களை கொன்னவங்க கூட உயிரே போனாலும் கூட்டணியெல்லாம் வைக்கவே மாட்டோம்யா. ஆனா அமெரிக்காவுல போயி படிச்சுட்டு, எப்படி மான ரோசத்தையெல்லாம் அத்துப் போட்டுட்டு இருக்கீங்களோ தெரியலையே அய்யா…
 l2011080135956
இந்தியா இன்னைக்கு நாசமாக போனதுக்கு காரணமே நீங்கதான்னு சொல்றான்யா என் மவன்.  91ல நீங்க நிதி அமைச்சரா வந்த பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியவுக்குள்ள வந்துச்சுன்னு சொல்றான் அய்யா.  கிழக்கு இந்தியா கம்பேனின்ற ஒரு வெளிநாட்டு உள்ள வந்துதானேய்யா நம்ப நாட்டையே அடிமையாக்குச்சு ? அப்புடி இருக்கும் போது வெளிநாட்டு நிறுவனங்கள தாறுமாறா இந்தியாவுக்குள்ள வந்ததுனால நமக்கு ஆபத்து வராதா அய்யா ?  இன்னைக்கு எங்க ஊருல கூட வெளிநாட்டு டிவியெல்லாம் தெரியுது.  எங்க ஊருலேயே பல பேரு வெளிநாட்டு காரெல்லாம் வெச்சுருக்காங்க.  கம்ப்யூட்டரெல்லாம் வந்துருச்சு.   எங்க ஊருல எல்லாரும் கலர் கலரா செல் போனெல்லாம் வெச்சுருக்காங்க.  ஆனா நெல்லுக்கு போதுமான வெல கெடைக்க மாட்டேங்குதேய்யா ?   இன்னும் நம்ப நாட்டுல சோத்துக்கு இல்லாதவங்க கோடிக்கணக்குல இருக்காங்களாமே… சோத்துக்கு இல்லாதவங்க இத்தனை பேரு இருக்கும் போது, வெளிநாட்டுக் காரும், செல் போனும் என்னத்துக்குய்யா ?   எங்க ஊருல பெரிய பெரிய கவிஞருங்க, மகானெல்லாம், பசிச்சவனுக்கு சோறு போடணும்னுதான் சொல்லிருக்காங்க.   எங்க ஊரு கவிஞர் பாரதி, ஒரு ஆளுக்கு சோறு இல்லன்னா ஒலகத்தையே அழிக்கலாம்னு சொல்லிருக்காரு.  இதெல்லாம் கிராமத்துல இருக்கற படிக்காத தற்குறியான எனக்கே தெரியும் போது, வெளிநாட்டுல படிச்சுட்டு  டாக்டர் பட்டம் வாங்குன ஒங்களுக்கு எப்புடி அய்யா தெரியாம போச்சு ?

உங்களோட செல்போனும், வெளிநாட்டு காரும், மஹாராஷ்ட்ராவுல தற்கொலை பண்ணிக்கிட்ட 10 ஆயிரம் விவசாயிங்கள காப்பாத்தலேயே அய்யா ?

இந்தியாவுல ஊழலை எப்படி உரம் போட்டு வளக்கறதுன்னு நீங்கதான் திட்டம் போட்டு செயல்படுத்தினீங்கன்னு என் மவன் சொல்றான் அய்யா. 100 நாள் வேலைத் திட்டம்னு ஒன்னு கொண்டு வந்தீங்களே….  அத நீங்க என்னன்னு நெனச்சு கொண்டு வந்தீங்கன்னு தெரியாது.  ஆனா, அது கிராமத்துல பெரிய பிரச்சினைய உண்டு பண்ணிடுச்சு அய்யா.   எங்க நெலத்துல வெதைக்கவும், அறுக்கவும், களையெடுக்கவும், மருந்து தெளிக்கவும், கூலிக்கு வந்துகிட்டு இருந்த ஆளுங்கல்லாம் இப்போ வர்றது இல்ல.   ஏன்னா, வயலுக்கு வந்தா வேலை செய்யணும்.  ஆனா 100 நாள் வேலை திட்டத்துல வேலை யாருமே செய்யறது இல்ல.   ஆளை வெச்சு வேலை செய்யணும்னு திட்டம் போட்டீங்க.   ஆனா, எல்லாரும் போயி மரத்துக்கு கீழே படுத்து தூங்கிட்டு சாயங்காலம் அந்த ஆபீசருங்களுக்கு ஒரு பங்கு குடுத்துட்டு, பணத்த வாங்கிட்டு வந்துடுறாங்க.  அதிகாரிங்களும் அவங்க பங்க வாங்கிட்டு, மெஷின வெச்சு வேலையை முடிச்சுட்றாங்க.  ஒங்களோட இந்த 100 நாள் வேலை திட்டம், கிராமப் பொருளாதாரத்தோட மென்னிய ஒடச்சுடுச்சு தெரியுமா ?

அப்புறம் ஒங்கள உங்க கட்சிக்காரங்க எல்லாம் நேர்மையான மனிதர்னு சொல்றாங்களாம்.  அத என் மவன் ஒத்துக்கவே மாட்டேங்குறான்.   ஏண்டான்னு கேட்டேன்.   2004ல ஒங்க கட்சி ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து தான் ஊழல் பெரிய அளவுல நடந்ததுன்னு சொல்றான்.    உங்க கூட்டணி கட்சியா இருக்கற திமுக 2004லேர்ந்து அடிச்ச கொள்ளை இந்தியாவுல யாருமே அடிச்சுருக்க முடியாதுன்னு சொல்றான்.  நானும் கேள்விப் பட்டேன் அய்யா.   திமுக மந்திரிங்கள சகட்டு மேனிக்கு கொள்ளையடிக்க விட்டீங்களாமே..  டிஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன் அப்டின்னு ஒரு பெரிய கூட்டமே சேந்து கொள்ளையடிக்க நீங்க உதவி பண்ணது உண்மை தானே அய்யா ?  அப்புறம் என்ன நீங்க நேர்மையானவரு ?   அந்த ஊழலெல்லாம் உங்களுக்கு தெரியாம நடந்துருக்கும்ணு என் மவன் கிட்ட சொன்னேன்.   அவன் சொல்றான்.  உளவுத்துறை ஒங்க கையில இருக்கதுனால, ஒங்களுக்கு தெரியாம ஒன்னுமே நடக்காதாமே… அப்பிடி இருக்கும் போது இத்தனை பேத்த இவ்ளோ கொள்ளையடிக்க விட்டுட்டு வேடிக்கை பாத்த நீங்கதானே அய்யா முதல் குற்றவாளி ? திமுக அமைச்சருங்க மட்டும் இல்லாம, ஒங்க கூட்டணியில இருக்கற சரத் பவார் கொள்ளையடிக்கறத இன்னைக்கு வரைக்கும் வேடிக்கை பாத்துகிட்டு தானே இருக்கீங்க.. ?
 l2010110731618
அதக்கூட விடுங்க அய்யா.   2008ல ஒங்களுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி, ஆதரவ வாபஸ் வாங்கிட்டாங்க.  ஒங்க ஆட்சிய காப்பாத்தறதுக்காக எத்தனை எம்பி.க்கள விலைக்கு வாங்கினீங்க ?  இது நேர்மையான ஆளு செய்யற காரியமா அய்யா ?  கம்யூனிஸ்ட் கட்சிங்க, திமுக மாதிரி, ஸ்பெக்ட்ரத்துல பணம் குடுக்கலன்னா வாபஸ் வாங்குனாங்க ?  அமெரிக்காவோட நீங்க போட்ட ஒப்பந்தம் சரியில்லன்னுதானே வாபஸ் வாங்குனாங்க ?  இந்த மாதிரி ஒரு ஒப்பந்தம் போட்டா, இந்தியாவுக்கு ஆபத்துன்னு அவங்க சொன்னது என்ன அய்யா தப்பு ?  ஒங்களுக்கு மட்டும்தான் இந்தியா மேல அக்கறையா ?  அவங்களுக்கு இல்லையா ?  அவங்க ஆதரவ வாபஸ் வாங்குனதும் ஒங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது ? அமெரிக்காவ யாராவது தப்பா சொன்னா ஒங்களுக்கு அவ்வளவு கோபம் வருதே…  நீங்க இந்தியாவச் சேர்ந்தவரா … இல்ல அமெரிக்காவச் சேந்தவரா ?   நாங்க குடுக்கற வரிப்பணத்துல தானேய்யா நீங்க வாழறீங்க..

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழல் நடந்துச்சுன்னு மக்களுக்கு தெரிஞ்சு கொதிச்சுப் போயி, எப்ப நடவடிக்கை எடுப்பாங்கன்னு ஏங்கிகிட்டு இருந்தப்போ, ஊழலே நடக்கலன்னுதானே உங்க கட்சிக் காரங்க பேசுனாங்க ?  ராசா என்னுடைய மதிப்பு மிக்க அமைச்சரவை சகான்னுதானே நீங்க அவரப் பத்தி சொன்னீங்க ?  இன்னைக்கு கோர்ட்டுல ராசா, எல்லாமே பிரதமருக்கு தெரிஞ்சுதான் நடந்துச்சுன்னு சொல்றாரு..  ஆனா நீங்க எதுவுமே தெரியாத மாதிரி உக்காந்துகிட்டு இருக்கீங்களே அய்யா ?  உங்க கட்சி ஆட்சியில இல்லாம, வேற கட்சி ஆட்சியில இருந்துருந்தா, உங்கள சிபிஐ சும்மா விட்டுருக்குமா ?  சிபிஐ உங்க கட்டுப்பாட்டுல இருக்குதுன்னு தானே இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க ?
 mm_singh_a_raja_20101129
அந்தப் பெரியவரு அன்னா ஹசாரே என்னய்யா அப்புடி தப்பா கேக்கறாரு ?   இந்தியாவுல இவ்வளோ ஊழல் பெருகிப் போச்சே…  இத சரிப் பண்றதுக்கு ஒரு சட்டம் கொண்டு வாங்கன்னு கேக்கறது அவ்வளவு தப்பா ? அவரு ஜனவரி மாசத்துலேர்ந்து கேட்டுக்கிட்டுதானே இருக்கறாரு ?  நீங்கதானே அவருகிட்ட போயி பேசுனீங்க ?  சரி வாங்க பழகலாம்னு நீங்கதானேய்யா கூப்டீங்க ?

அவர கூப்புட்டு உக்கார வச்சு பேசிட்டு, அதுக்கப்புறம் அவரு சொல்றத எதயுமே கேக்காம உங்க இஷ்டத்துக்கு ஒரு சட்டத்த கொண்டு வந்தீங்க.   இதையெல்லாம் மக்கள் பாத்துக்கிட்டு தானேய்யா இருந்தாங்க.  அவங்களுக்கு நீங்க நடத்துற நாடகம் ஒன்னுமே தெரியாதுன்னா நெனச்சுகிட்டு இருக்கீங்க ?

மக்களோட சக்திய ரொம்ப கொறச்சு மதிப்பிட்டுட்டீங்க அய்யா நீங்க.  உங்ககிட்ட இருக்கற அரசியல் அதிகாரத்த பயன்படுத்தி அன்னா ஹசாரேவ ஏதாவது ஒரு குற்றச் சாட்டுக்கு ஆளாக்கி இந்தப் பிரச்சினையை முடிச்சுடலாம்னு நீங்க போட்ட திட்டம் இன்னைக்கு உங்களை பெரிய சிக்கல்ல இழுத்து விட்டுருச்சு.

அந்தப் பெரியவரப் பத்தி என்னல்லாம் தப்பா பேசுனாங்க உங்க கட்சிக் காரங்க ?  அவுரே ஊழல் பண்ணிருக்காரு.  2 லட்ச ரூபாயை பிறந்த நாளுக்காக செலவு பண்ணாருன்னாங்க.  உங்க கட்சிக் காரங்க மாதிரி கோடிக்கணக்கான ரூபாயவா ஆட்டையப் போட்டுட்டாரு அந்தப் பெரியவரு ?  இவ்ளோ ஊழல் பண்ண ஆளுங்களையெல்லாம் உங்க மந்திரி சபையில வச்சுக்கிட்டு, 2 லட்ச ரூபாய் ஊழல்னு நீங்க பேசுனா அதக் கேக்கறதுக்கு மக்கள் என்ன  அவ்வளோ முட்டாள்களா ?
 Anna_Hazare
அந்தப் பெரியவருக்கு உங்கள மாதிரி அரசியல்வாதிகளப் பத்தி நல்லாவே தெரியுது அய்யா.  அதனாலதான் உங்கள நம்பாம அவரு மக்கள நம்பி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொன்னாரு.  எவ்வளவு நாள் முன்னாடியே, அவர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாரு ?  உண்ணாவிரதத்துக்கு வெறும் 5 ஆயிரம் பேர்தான் வரணும்னு சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்கா ?  உங்க தலைவி சோனியா காந்தி பேசுற கூட்டத்துக்கு வெறும் 5 ஆயிரம் பேர்தான் வரணும்னு போலீஸ் உத்தரவு போட்டா ஒத்துக்குவீங்களா ?  உங்கள பெரிய மனுஷன்னு நெனச்சு, டெல்லி போலீஸ் போட்ட நிபந்தனைய உங்ககிட்ட தானே சொன்னார் அந்தப் பெரியவர்.   உங்களுக்கு லெட்டர் குடுத்தா, போயி டெல்லி போலீசுக்கிட்ட கேளுன்னு பதில் எழுதுனது உங்க திமிர்தானே ?  அப்புறம் தடைய மீறி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொன்னதும், உங்க போலீசை விட்டு அவர உடனே கைது பண்ணீங்களே… அது நியாயமா அய்யா ?  உத்தரப்பிரதேச மாநிலத்துல உங்க தலைவியோட மகன் போனப்போ, தடை உத்தரவு தானே இருந்துச்சு ?  அவரு தடைய மீறலயா ?  ஆனா, அன்னா ஹசாரேவ மட்டும் வீட்லேர்ந்தே கைது பண்ணீங்களே….  அது எந்த விதத்துல அய்யா நியாயம் ? அவரை கைது பண்ண அன்னைக்கு, எங்க ஊரு அமைச்சர், டெல்லியில பத்திரிக்கைகாரங்களெயெல்லாம் கூப்புட்டு, உங்க கவர்மென்டுக்கும் அன்னா ஹசாரே கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ரெண்டு மணி நேரம் பேசுனாரு.  அன்னைக்கு சாய்ங்காலமே, நீங்க எல்லாம் கூடி பேசிட்டு, அவரை விடுதலை பண்றேன்னு சொன்னது நீங்க அந்தப் பெரியவரப் பாத்து பயந்தீங்கன்றதத் தானே காட்டுது ?  இப்புடி பயப்படற ஆளு எதுக்கு அவர கைது பண்ணணும் ?  அந்தப் பெரியவர் ஜெயில விட்டு வெளிய வர மாட்டேன்னு சொன்னதும், ஒன்னுமே பண்ண முடியாம, அவரு காலுல விழுந்து கெஞ்சுறீங்களே….   இப்பிடி ஒரு பொழைப்பு ஒங்களுக்கு தேவையா அய்யா ?

மக்களோட மனநிலைய ரொம்ப தப்பா புரிஞ்சு வெச்சுருக்கீங்க அய்யா.  இன்னைக்கு மக்களுக்க உங்க கட்சி மேல மட்டும் இல்லாம, எல்லா கட்சிங்க மேலயும், இந்த ஊழல் காரணமா கடுமையான கோபம் இருக்கு.  இன்னைக்கு அந்தப் பெரியவருக்கு ஆதரவா வீதியில வந்து நிக்கறதுல பெரும்பாலும் கட்சிய சேந்தவங்க கிடையாது.  எல்லாரும் படிச்சவங்க.  நடுத்தர வர்க்கத்த சேந்தவங்க.  அவங்க எல்லாருக்கும் இந்த லஞ்சத்த ஏதாவது பண்ணணும்னு ஒரு ஆதங்கம் இருக்கு.  அந்த ஆதங்கத்த ஒரு பெரியவர் வெளிப்படுத்தும் போது அவரு கூட எல்லாரும் சேந்து நிக்கறாங்க.  இன்னைக்கு அவருக்கு ஆதரவா கூட்டம் போட்ருக்கவங்க எல்லாருக்கும் லோக்பால்னா என்னன்னு கேட்டா, என்ன மாதிரியே தெரியாமக் கூட இருப்பாங்க.  ஆனா அவங்க அத்தனை பேருக்கும் லஞ்சம்னா என்னன்னு தெரியும்.  அவங்க அத்தனை பேரும், அவங்க வேலைகளுக்காக லஞ்சம் கொடுத்துருக்காங்க.  கொடுத்துக்கிட்டும் இருக்காங்க.  எங்க ஊர்ல இந்தியன்னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படத்துல, ஒரு பெரியவரு, லஞ்சம் வாங்குற ஆளுங்கள கொல பண்ணுவாரு.  அந்தப் படம் என்னா ஹிட்டு தெரியுமா ?  லஞ்சம் வாங்கற ஆளுங்கள அந்தப் பெரியவரு கொலை பண்ணும் போது தியேட்டர்ல விசில் பறக்கும்.   மக்கள் அப்பிடி ரசிச்சாங்க.  அந்தப் பெரியவரு மாதிரியேதான், அன்னா ஹசாரேவையும் மக்கள் பாக்கறாங்க.
 19IN_TIHAR_758977f
எங்களால செய்ய முடியாததை அந்தப் பெரியவரு செஞ்சா, நாங்க அவரு கூட நிப்போம்னு சொல்றாங்க.  இன்னைக்கு அந்தப்  பெரியவரு திஹார்லேர்ந்து வெளியில வந்ததும் என்னா கூட்டம் பாத்தீங்களா ?   நீங்க 2011 தேர்தலுக்காக, கோயம்பத்தூர் வந்து பேசுனப்போ, 300 பேர் கூட இல்லை.  அதுவும் காசு குடுத்து கூட்டுன கூட்டம்.   ஆனா அந்தப் பெரியவருக்காக, ராத்திரி பகலா, ரோட்டுல காத்திருக்குது பாருங்க மக்கள் கூட்டம்.

ஊருல இத்தனை பேருக்கு புரிஞ்சத ஒங்களுக்கு ஏன்  புரிய மாட்டேங்குதுன்னு என் மவன் கிட்ட கேட்டேன்.  அவன் சொல்றான், நீங்க தலைவரே இல்லையாம். ஏதோ உலக வங்கின்னு இருக்குதாமே… அந்த வங்கியோட க்ளார்க்காம்.  அதனால தான் மக்களை சந்திச்சு தேர்தல்ல ஜெயிக்காம, குறுக்கு வழியில எம்.பி ஆனீங்கன்னு சொல்லுதான் என் மவன்.

என்னமோ அய்யா… எனக்கு சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன்.   தப்பு இருந்தா மன்னிச்சுக்கங்க சாமி….

இப்படிக்கு

கும்பக்கரை கருப்பண்ணசாமி

Thanks to Savukku

No comments:

Post a Comment