நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, August 23, 2011

சமச்சீர் கல்வி வெற்றி விழா புறக்கணிப்பு : அழகிரி அதிருப்தி காரணமா?

 
சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை, அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடத்தாததால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரம் துவங்கியதிலிருந்தே, தி.மு.க.,வில் உட்கட்சி பூசல்கள் நிலவுகின்றன. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பதில் தெரியாததால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, அழகிரி ஆதரவாளர்களும், ஸ்டாலின் ஆதரவாளர்களும் இரு துருவங்களாக செயல்படுவதால், கட்சி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், அழகிரி தரப்பில் தொடர்ந்து, கருத்து வேறுபாடான சூழல் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், தேர்தல் தோல்வி, பொதுக்குழுவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் ஆகியவற்றை தாண்டி, சமச்சீர் கல்வி விவகாரத்தில் தி.மு.க., மகிழ்ச்சியடைந்தது.

தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை அமல்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், அதை தி.மு.க.,வினர் வெற்றி கொண்டாட்டமாக்கினர். இதற்காக, 30 மாவட்டங்களிலும், தி.மு.க., சார்பில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும், சமச்சீர் கல்வி வெற்றி விழா அறிவிக்கப்பட்டது. சென்னை பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்றார். இதில், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகிரியின் கட்டுப்பாட்டில், அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கும் நான்கு மாவட்ட கூட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு இடங்களில், கடந்த 19ம் தேதி கூட்டம் நடக்கவில்லை. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அழகிரியின் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும், அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா, பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. பின், அங்கு மட்டும் நேற்று ஸ்டாலின் பங்கேற்று கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரிக்கு, தலைமை கழகம் உரிய மரியாதை கொடுக்கவில்லை. முக்கிய அறிவிப்புகளை அவர், கட்சி பத்திரிகையை பார்த்தோ, அல்லது அறிக்கை வந்த பிறகோ தான் அறிய முடிகிறது. சட்டசபையில் கனிமவளக் கொள்ளை நடந்ததாக அமைச்சர் வேலுமணி பேசிய விஷயத்தில், தலைமைக் கழகம் தனியாக அறிக்கை விடவில்லை. வேளாண்துறை மானியத்தில், உர மானியம் தொடர்பாக அழகிரி அமைச்சராக உள்ள ரசாயனத் துறையை கண்டித்து, தமிழக சட்டசபையில் பேசினர். இதுகுறித்து, தி.மு.க., தலைவரிடம், நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் கூறாமல் அழகிரியிடம் கேட்கச் சொல்லி நழுவி விட்டார். இதுமட்டுமின்றி, தி.மு.க., வெற்றிக்காக பாடுபட்ட, அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டதாலும், அழகிரி தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால், நெருக்கடியான நேரத்தில், வெற்றி விழா கொண்டாடுவது நல்லதல்ல என்பதால், அதை தவிர்த்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களான பொட்டு சுரேஷ், தளபதி போன்றவர்களையும், திருச்சி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியையும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். ஆனால், ஸ்டாலினை மதுரை மாவட்ட நிர்வாகிகள் யாரும் வரவேற்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to Dinamalar

No comments:

Post a Comment