நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, October 3, 2011

சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன?

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தான் சன் டிவி குழுமத்தில் வைத்திருந்த 20% பங்கை விற்றுவிட்டார் என்றும் அதிலிருந்து கிடைத்த பணத்திலிருந்து ரூ. 10 கோடியை கருணாநிதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றும் கருணாநிதி அதிலிருந்து ரூ. 5 கோடிக்கு ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி தமிழ் வளர்ச்சிக்கும் பணத்தேவை உள்ளவர்களுக்கு தர்மமாகவும் தர முடிவு செய்துள்ளார் என்றும் தெரிய வந்தது.
கருணாநிதி ஏற்கெனவே தனது புத்தக ராயல்டியை வைத்து திமுக அறக்கட்டளை மூலமாக மக்களுக்கு உதவி செய்கிறார். அத்துடன் தான் கடைசியாக திரைக்கதை வசனம் எழுதிய இரண்டு படங்களின் பணத்தை தமிழக முதல்வர் சுனாமி நிதிக்காகவும் வழங்கியுள்ளார். எல்லாமே நல்ல செயல்கள். பாராட்டப்பட வேண்டியவை.
இந்தப் பதிவில் நான் சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன என்ற என் யூகத்தை முன்வைக்கிறேன்.
சன் டிவி குழுமம் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகை, செய்தித்தாள், கேபிள் தொலைக்காட்சிச் சேவை ஆகியவற்றை வழங்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள - பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட - நிறுவனம் ஜீ டெலிஃபில்ம்ஸ் (Zee Telefilms). இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருப்பதால் இதனது ஆண்டு வருமானம், நிகர லாபம், பங்கின் விலை, எனவே நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Capitalization) ஆகியவை என்ன என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் P/E விகிதம் என்று ஓர் எண் உண்டு. ஒரு நிறுவனத்தின் சந்தை விலை பங்குக்கு எவ்வளவு, ஒரு பங்குக்கான லாபம் எவ்வளவு என்று கண்டறிந்து அவற்றுக்கிடையேயான விகிதமே P/E = Price/Earning.
ஜீ டெலிஃபில்ம்ஸை எடுத்துக்கொண்டால் அதன் 2004-05 நிதியாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ. 1,360 கோடி. நிகர லாபம் ரூ. 310 கோடி. மொத்தப் பங்குகள் 41.25 கோடி. எனவே ஒரு பங்கு ஈட்டிய லாபம் ரூ. 7.6. ஒரு பங்கின் விலை (31 மார்ச் 2005-ல்) = ரூ. 139 (குத்துமதிப்பாக). எனவே P/E = 139/7.6 = 18.3
இன்றைய தேதியில் ஜீயின் பங்குகள் ரூ. 150ஐத் தாண்டியுள்ளன. ஆனால் நிகழும் நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களின் ஜீயின் நிகர லாபம் சற்றே குறைந்துள்ளது. இன்ரைய தேதியில் P/E கிட்டத்தட்ட 20ஐத் தொடும். சன் டிவி குழுமத்துக்கும் P/E 20 என்றே வைத்துக்கொள்ளலாம்.
அதே போல சென்ற நிதியாண்டின் கணக்கை வைத்து ஜீயின் லாப விகிதம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம். மொத்த வருமானம் ரூ. 1,360 கோடி, லாபம் ரூ. 310 கோடி என்றால் லாப விகிதம் = 310/1360 = 22%
அடுத்து சன் டிவி குழுமத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம். 2002-03 நிதியாண்டுக் கணக்குப்படி சன் குழுமத்தின் மொத்த வருமானம் ரூ. 224.43 கோடி. 2004-05 நிதியாண்டில் அவர்களது ஏழு சானல்களின் வருமானம் மட்டுமே ரூ. 546 கோடிகள் என்று கணிக்கிறார்கள். நடப்பு நிதியாண்டில் இந்த வருமானம் இன்னமும் மேலே செல்லும். மற்ற சானல்கள், ரேடியோ, செய்தித்தாள், குங்குமம், SCV என்று எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால் ஒரு யூகமாக சன் குழுமத்தின் ஆண்டு வருமானம் நடப்பு நிதியாண்டில் ரூ. 700 கோடியையாவது எட்டும் என்று கருதலாம்.
அடுத்து லாப விகிதம். சன் டிவி செயல்படும் இடங்களில் ஜீ டெலிஃபில்ம்ஸ் அளவுக்கு செலவுகள் இருக்காது. மேலும் ஹிந்தித் தொலைக்காட்சி சானல்கள் போடும் சண்டைகள் போல இங்கு கிடையாது. எனவே சன் குழுமத்தின் லாப விகிதம் 28%ஆவது இருக்கும் என்று யூகிக்கலாம். சன்னின் குறைந்த பட்ச லாபம் நடப்பு நிதியாண்டில் ரூ. 150 கோடியாவது இருக்கும். அப்படியானால் சன் குழுமத்தின் சந்தை மதிப்பு குறைந்தது ரூ. 3,000 கோடி.
இதில் தயாளு அம்மாளின் 20% பங்கு என்றால் அதற்கான மதிப்பு ரூ. 600 கோடியாவது இருக்க வேண்டும்.
ஆனால் சன் குழுமத்தில் பங்குதாரராகச் சேரும்போது சில கால் ஆப்ஷன்களை, புட் ஆப்ஷன்களை பங்குதாரர் ஒப்பந்தத்தில் வைத்திருந்திருக்கலாம். (இதுபற்றிய சில தகவல்களை தமிழ் நிதி தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.) அதாவது ஏற்கெனவே இருக்கும் பங்குதாரர்கள் விலகுவதாக இருந்தால் பங்கினை யாருக்கு விற்கலாம், எந்த விலைக்கு விற்கலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்திருக்கலாம். அதனால் உண்மையில் எந்த விலைக்கு தயாளு அம்மாள் விற்பனை செய்தார் என்பது நமக்குத் தெரியாது.
நாளையே சன் டிவி குழுமம் பங்குச்சந்தைக்கு வருகிறதென்றான் அதன் சந்தை மதிப்பு கட்டாயமாக ரூ. 3,000 கோடிக்கு மேல்தான் செல்லும் என்பது மட்டும் நிச்சயம்!

Thanks to Badri

No comments:

Post a Comment