நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, October 13, 2011

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பரிதி இளம்வழுதி நீக்கம்

கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கு பரிதி இளம்வழுதி எழுதிய கடிதத்தில் “தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக உட்கட்சி ஜனநாயகத்தில் எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்.  வாழ்க உட்கட்சி ஜனநாயகம்” என்று எழுதியிருந்தார்.  இந்தக் கடிதமே பரிதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பரிதி நீக்கப் பட்டதற்காக காரணத்தை விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
 Dinakaran.com-Election_2011_18888491393
“பல நெருக்கடிகளை பார்த்திருக்கிறோம்.  பல ஆபத்துக்களை பார்த்திருக்கிறோம்.  இந்தப் பேரிடியை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இனியும் முடியாது.   நிச்சயமாக முடியாது.

அந்தோ ! எவ்வளவு பெரிய தாக்குதல் ! எத்துணை அவமானம் தரும் காரியம் ! இதற்கோ இவ்வளவு எழுச்சி பெற்றொம் !  இதன் பொருட்டோ இப்படி வளர்ந்தோம் ! இந்தப் பழியையும் ஏற்றுக்கொள்ளவா இந்த அளவுக்கு வளர்ந்தோம் !

இத்தனை துயருக்கும் என்னை ஆளாக்கிய பரிதி செய்த காரியம் தான் என்ன ?   சொல்லவே நெஞ்சு பொறுக்குதில்லையே !   என்ன சொல்லி விட்டான் என் இளவல் ?   என்ன வார்த்தை சொல்லி விட்டான் என் அன்பு உடன்பிறப்பு ?   எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டானே !
 DSC_7718
முத்தமிட வந்த குழந்தையின் மூக்கை கடித்தெறியும் காரியமல்லவா அது !   என்ன வார்த்தை சொல்லி விட்டான் என் இளவல் !  இதயத்தில் ஈட்டியாய் அல்லவா இறங்கியது அந்த வார்த்தைகள் ?

சுயமரியாதை.  யாருக்கு வேண்டும் சுயமரியாதை ?  சுயமரியாதை இயக்கம் என்ற பெயரால் அரசியலில் நுழைந்து, சுயத்தையும் மரியாதையையும் சுத்தமாக மறந்து, இன்று சொத்துக்களையும், சொந்தங்களையும் அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்தா இந்த வார்த்தையைச் சொன்னான் என் இளவல் ?

திராவிட முன்னேற்றக் கழகத்திலே, கழகத்தின் மூத்த தலைவரான பேராசிரியர் அன்பழகன் வரை, வட்டச் செயலாளர் வண்டு முருகன் வரை, மானத்தையும், அறிவையும் சுத்தமாக துறந்துதானே இன்று திமுகவில் இருக்கின்றனர்.  அவர்கள் இந்த வார்த்தையைக் கேட்டால் என்ன பாடு படுவார்கள் ?   இனமான என்று தன்னுடைய பெயருக்கு முன்னால் அடை மொழி போட்டுக் கொள்ளும் அன்பழகன் கூட, என் குடும்பத்தில் பிறந்த நண்டு சிண்டெல்லாம் மந்திரியாக பதவியேற்று, கோடிகளைக் குவித்து, கோதைகளுடன் குலவி, கோடீஸ்வரர்களாக பவனி வருவதை தன் கண்ணால் கண்டும் இன்னும் திமுகவில் பொதுச் செயலாளராக இருக்கிறாரே…?  சுயமரியாதை இருந்தால் அவரால் இருக்க முடியுமா ?
 adssadf
கழகத்தின் முன்னணிப் பேச்சாளர் திருச்சி சிவா.  பல காலமாய் திமுகவின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருப்பவர்.   மாணவராக திமுகவில் நுழைந்து திமுகவுக்காகவே தன்னுடைய வாழ்வை அர்பணித்துக் கொண்டிருப்பவர்.   அவரும் பல ஆண்டு காலமாக ராஜ்யசபை எம்.பியாக இருந்து வருகிறார்.   1998 முதல் மத்திய அரசில் வலுவான இடத்தைப் பெற்று பல மந்திரிப் பதவிகளை திமுக பெற்றிருந்தாலும், திருச்சி சிவாவுக்கு ஒரு மந்திரிப் பதவியைத் தராமல், என் குடும்பத்தில் உள்ள, நேற்று முளைத்த காளான்களுக்கெல்லாம் மந்திரிப் பதவியை வாங்கித் தந்தேனே…   திருச்சி சிவா என்ன சுயமரியாதையோடு பதவி விலகி விட்டாரா என்ன ?  அவருக்கு இல்லாத சுயமரியாதை பரிதிக்கு எப்படி வரலாம் ?

டிகேஎஸ் இளங்கோவன் என்று புதிதாக ஒரு எம்.பி இருக்கிறாரே திமுகவில்.   தேசிய ஊடகங்கள் திமுகவை புரட்டி எடுக்கும் போதெல்லாம் குத்துச் சண்டையில் வீரர்கள் பயன்படுத்தும் பைபைப் போல பல குத்துக்களை வாங்கிக் கொண்டு சளைக்காமல் தன் கண்ணாடியை துடைத்துக் கொண்டு பேட்டியளிக்கிறாரே…..  திமுக கோட்டாவான இரண்டு மந்திரிப் பதவிகள் காலியாக இருந்தும் அவரை மந்திரிப் பதவிக்கு பரிந்துரைக்காமல், காலியாகவே வைத்திருக்கிறேனே…. அவர் என்ன திமுகவை விட்டு விலகியா போய் விட்டார் ?   நேற்றைக்கு என் பேரன்கள் வீட்டில் சிபிஐ ரெய்டுகள் நடத்திய போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கருத்து கேட்ட போது, “சார் இது அவர்கள் குடும்ப பிரச்சினை.  இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள்.  நாளைக்கு சேர்ந்து கொள்வார்கள்.   நான் கருத்து சொன்னால் சேர்ந்த பிறகு என்னை காலி பண்ணி விடுவார்கள்”  என்று சொல்லி விட்டு, சொரணை கெட்டத் தனமாக இன்னும் திமுகவிலேயே இருக்கிறாரே அவருக்கு இல்லையா சுயமரியாதை. அவர் ஏன் இன்னும் திமுகவில் இருக்கிறார்.   சுயமரியாதை இருப்பவன் திமுகவில் இருக்க மாட்டான் என்பது அவருக்கு தெரியாதா ?
 197617_173631149355563_100001260373380_452368_4936820_n
உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.  மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்தில் நுழைந்தவன் நான்.   அதற்குப் பிறகு நான் சந்தித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா ?  நான் வளரக் கூடாது. பெரிய தலைவராகக் கூடாது என்று நெடுஞ்செழியன் செய்த இடைஞ்சல்கள் கொஞ்சமா நஞ்சமா ?   அதையெல்லாம் தாண்டி நான் வளரவில்லையா ?  திராவிடர் கழகமாகட்டும் திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும்.  படை வரிசை ஒன்று என்றாலும் கொள்கை ஒன்றுதான்.  கோட்பாடு ஒன்றுதான்.  திட்டமும் வேறு அல்ல.  படை வரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும், என்று கொள்கை முழக்கமிட்டு விட்டு, வடநாட்டு அரசியல்வாதிகளின் காலில் விழுந்து நான் கதறவில்லையா ?

அறிஞர் அண்ணா, என் உயிர், நான் இழந்த மயிர் என்றெல்லாம் வீர வசனம் பேசி விட்டு, அண்ணாவின் ஆதரவாளர்கள் என்று நான் அறிந்தவர்களையெல்லாம் திமுகவை விட்டு ஓரங்கட்ட   வில்லையா ?  சுயமரியாதை உள்ளவன் செய்யும் செயலா இது ?

என்னை விட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நெடுஞ்செழியன் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக வேண்டும் என்று முயற்சி எடுத்த போது, அந்த முயற்சியை எம்.ஜி.ஆரின் துணையோடு நான் முறியடிக்கவில்லையா ?  முறியடித்து நான் முதல்வர் ஆகவில்லையா ?  இவ்வளவு ஏன் ?

நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், ராசாத்தி என்ற நாடக நடிகை.  நான் எழுதிய காகிதப்பூ என்ற நாடகத்தின் கதாநாயகி.   அந்த நாடகத்திற்கு நான் வசனம் எழுதினேன்.  நான் எழுதிய வசனத்தின் காரணமாக ஈர்க்கப் பட்டு கர்ப்பமான அவர், தனது பிரசவத்திற்கு நேரடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லையா ?  அங்கே சென்று என் குழந்தைக்கு தந்தை தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் என்று சொல்லவில்லையா ?  அவர் சொன்னதும் ஆர்எம்ஓ, டீனிடம் சொல்ல, டீன் மருத்துவத்துறை அமைச்சரிடம் சொல்ல, அவர் அண்ணாவிடம் சொல்ல, அண்ணா என்னை அழைத்து, “தம்பி, வேலையா, தாலியா” என்று என்னை கேட்கவில்லையா ?  கேட்டதும், சுயமரியாதையை விட, பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி முக்கியம் என்பதை உணர்ந்த நான், வேறு வழியில்லாமல் இரண்டாவதாக திருமணம் செய்யவில்லையா ?  இரண்டாவதாக திருமணம் செய்த சேதி அறிந்து, தயாளு அம்மாள், என்னை துடைப்பத்தால் அடிக்கவில்லையா ?
 DSC_7713
அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, எனது பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிதான் முக்கியம் என்று பதவியில் நீடிக்கவில்லையா ?  நான் சுயமரியாதைதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் இதைச் செய்திருக்க முடியுமா ?

அதற்குப் பிறகு திடீரென்று இந்திரா காந்தி திமுக ஆட்சியைக் கலைத்து நெருக்கடி நிலையை பிரகடனப் படுத்த வில்லையா ? அந்த நெருக்கடி நிலையின் போது, திமுக கட்சிக் காரன் என்று சொன்னவன் அத்தனை பேரையும் சிறையில் வைத்து அடித்துத் துவைக்கவில்லையா ?  நான் பெற்ற மகனை அடிக்கவில்லையா ?  நான் பெற்ற மகன் சாகக் கூடாது, அடி வாங்கக் கூடாது என்று சிட்டிபாபு உயிரை விட வில்லையா ?

இத்தனை துரோகங்களுக்குப் பிறகு நான் இந்திராவுடன் கூட்டணி அமைக்கவில்லையா ?  சுயமரியாதை உள்ளவன் செய்யும் செயலா இது ?

சர்க்காரியா கமிஷன் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக நான் இந்திராவுடன் கூட்டணி சேர்ந்தேன் என்று எக்காளமிட்டனர் எதிரிகள். ஏளனம் செய்தனர்.  ஏச்சுக்களை அள்ளி வீசினர்.     ரோஷப்பட்டேனா நான் ?    கோபப் பட்டேனா நான் ? இல்லையே. கோபப்பட்டாலும், ரோஷப்பட்டாலும், இழப்பது என் பதவியும், ஆட்சி அதிகாரமும் என்பதை உணராதவனா நான் ? எங்கே போனது என் சுயமரியாதை என்ற கேள்வியை என்றாவது நான் கேட்டிருப்பேனா ?

1991ம் ஆண்டு முதல் 1996 வரை அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே நடைபெற்ற ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்றதற்காகத் தானே எனக்கு வாக்களித்தனர் மக்கள்.   1996லே பதவியேற்ற நான், அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்தேன்.   அந்த ஊழல் புகார்களிலே சிக்கிக் கொண்ட பார்ப்பன அதிகாரிகளை மட்டும் காப்பாற்ற வில்லையா ?  பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரே கோஷத்தின்  அடிப்படையில் அரசியலை துவக்கிய நான் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவில்லையா ?

2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார் ? ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார்.   ஸ்ரீஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கொலை வழக்கில் கைது செய்தார்.  இந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யார் ?    ஒரு நேபாளப் பெண்ணோடு, மடாதிபதிகள் விட்டு விலகக் கூடாத அந்த தண்டத்தை விட்டு விட்டு, காமத்தை கட்டுப் படுத்த முடியாமல் ஓடியவர் தானே ?  அதன் பிறகு, காஞ்சி மடாலயத்திலேயே தனது காம வெறிக்கு தீனி கிடைக்கும் என்பது தெரிந்து மீண்டும் மடாலயத்திற்கு திரும்பி வந்தவர் தானே ?    வந்தவரின் காம வெறிக்கு இடைஞ்சலாக இருந்த சங்கரராமனை போட்டுத் தள்ளியதில் என்ன தவறு ?  எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்று குரல் கொடுத்த மாணவனை நான் போட்டுத் தள்ளவில்லையா ?
 M-KARUNANIDHI-SONG
2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயேந்திரரை நான் காப்பாற்றவில்லையா ?  ஜெயேந்திரர் கொலை வழக்கை நாங்கள்தான் வெளியே கொண்டு வந்தோம் என்று மார் தட்டிக் கொள்ளும் நக்கீரன் கோபாலும், காமராஜும், நான் சந்தடியில்லாமல் ஜெயேந்திரர் விடுதலை பெற உதவுவதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் என்ன செத்தா போய் விட்டார்கள் ?  நாம் உண்டு, நமது வசூல் உண்டு என அவர்கள் வேலையைப் பார்க்கவில்லை ?  அவர்கள் உண்மையில் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு பொருள் அறிந்திருந்தால் பத்திரிக்கை நடத்த முடியுமா ?
அந்த நக்கீரன் பத்திரிக்கை திமுக 130 தொகுதிகளில் ஜெயிக்கப் போகிறது.  நக்கீரன் சர்வே பொய்க்காது என்று சர்வே வெளியிட்டது.   தமிழக மக்கள் அந்த சர்வேயை காறித் துப்பி, திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளினார்கள்.    அந்த பத்திரிக்கையை என்ன மூடியா விட்டார்கள் ?  சுயமரியாதை இருந்தால் பத்திரிக்கை நடத்துவார்களா ? திமுகவின் அரசியல் வாரமிருமுறை இதழாக நக்கீரனை இன்னும் நடத்திக் கொண்டிருக்க முடியுமா ?

ஈழத் தமிழர் போராட்டத்தின் போது, தமிழகமே திரண்டு போரை நிறுத்து என்ற கோரிக்கையை விடுத்த போதும், போரை நடத்தும் அந்தோனியோ மொய்னோ சோனியாவிடம் நான் கோரிக்கை மனு வைத்து விட்டு, அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவில்லையா ? எனக்கு சுயமரியாதை இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பேனா ? மரியாதையோடு சேர்த்து சுயத்தையும் இழந்தேனே...
 karuna_one_eyed_jack
கொஞ்ச நஞ்சம் சூடு சொரணையோடு நடந்து கொள்ளலாம் என்று முனைந்த சிறு சிறு கட்சிகளைக் கூட, சூடு சொரணை பதவியைத் தராது என்ற விளக்கத்தை அவர்களுக்களித்து அவர்களையும் என்னைப் போலவே மாற்றவில்லையா ?

இவ்வளவு ஏன் ? 2ஜி ஊழலில் பெருமளவு பங்கை வாங்கியிருந்தாலும், திமுக மட்டுமே ஊழல் செய்தது போலவும், தங்களுக்கு இந்த ஊழலில் சம்பந்தமே இல்லாதது போலவும், பசப்வு நாடகத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்தி வந்தாலும், வெட்கம் கெட்டத் தனமாக அவர்களோடு நான் இன்னும் கூட்டணி வைத்திருக்கவில்லையா ?
பெரியார் வழி, அண்ணா வழி என்று பேசி விட்டு, என் மனைவி தயாளு ஒரு போலிச் சாமியாரின் காலில் விழுந்து ஆசிர் வாதம் வாங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை விட ஒரு கேவலமான செயலை யாராவது செய்ய முடியுமா ?


sai-dayaluamma

இப்படிப் பட்ட ஒரு வரலாற்றுச் சுவட்டில் வந்த நான் தலைவராக இருக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர், திடீரென்று சுயமரியாதை காரணமாக பதவியில் இருந்து விலகுகிறேன் என்று எனக்கே கடிதம் எழுதுகிறார் என்பதை எப்படி மன்னிக்க முடியும் ?

அதன் காரணமாகவே வேறு வழியின்றி, கனத்த இதயத்துடன் பரிதி இளம் வழுதியை கட்சியை விட்டு நீக்கும் முடிவில் கையெழுத்திடுகிறேன்.

என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Thanks to சவுக்கு

No comments:

Post a Comment