நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, October 7, 2011

‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது!’

உண்மையிலேயே மின்வெட்டா… ‘கூடங்குள’த்துக்கு புது ரூட்டா?

 

திமுக ஆட்சியை காவு வாங்கியதில் மின்சாரத்தின் பங்கு கொஞ்சமல்ல…. ரொம்பவே உண்டு.
2009, 2010 ஆகிய ஆண்டுகளிலிருந்தே மின் தட்டுப்பாடு காரணமாக, குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரத்தை நிறுத்திவைத்து வழங்கி சமாளித்து வந்தது அன்றைய திமுக அரசு. சென்னைக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் வழங்கியவர்கள், இந்த ஆண்டு, அதுவும் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு மணிநேரம் ‘கட்’ என அறிவித்தார்கள்.
கிராமப்புறங்களில், குறிப்பாக தொழில்களை நம்பியுள்ள கொங்கு மண்டலத்தில் 6 மணிநேரம் வரை மின்சாரம் தடைபட, மக்கள் கொதித்துப் போய்விட்டனர்.
இப்போது அதிமுக ஆட்சி. பதவிக்கு வந்த முதல் ஒரு மாதம் வரை மின்வெட்டு பற்றி ஆட்சியாளர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். மக்கள் எதுவுமே பேசவில்லை. அவர்கள் அவ்வளவு ‘விவரம்’!
இதோ 5 மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது!’ என்பதுதான் மக்களின் நிலை!
சென்னையில் மே – ஜூன் மாதங்களில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு என்றார்கள். அதுவே ஜூலையிலும் தொடர்ந்தது (வள்ளூர் மின் நிலைய பணிகளுக்காக என்ற கூடுதல் காரணம்).
ஆகஸ்ட், செப்டம்பரில் ஓரளவு மழையும் பெய்தது. காற்று நன்றாக வீசியது. இருந்தாலும் கரண்ட் மட்டும் வரவில்லை. நிலைமை இன்னும் மோசமானது. எப்படி தெரியுமா?
தினசரி 2 மணி நேர மின்வெட்டு, சென்னையில் ஒன்றரை மணி நேரமானது. கிராமங்களில் 3 மணி நேரம் 2.30 மணி நேரமானது. ஆனால் அறிவிப்புக்கு அப்பால் வெட்டப்பட்டது மேலும் 2 மணிநேரத்துக்கும் அதிகமானது!
சென்னையிலும் புறநகர்களிலும் எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்பது தெரியாத நிலை. பிற்பகல் 1 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும். 2 அல்லது 2.30க்கு வரும். இதற்கு இடையில் காலையில் குறைந்தது 3 முறை, மாலை மற்றும் இரவில் சராசரியாக 6 முறை மின்சாரம் தடைபடும்.
ட்ரிப் ஆகிடுச்சி, குறைந்த மின் அழுத்தம், லைன்ல பிரச்சினை, மெயின்ல கட் ஆகிடுச்சி இப்படி காரணங்களுக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு முறை கட்டாகி வருவதற்கும் சராசரியாக 10 முதல் 30 நிமிடங்கள் வரை பிடிக்கின்றன.
கிராமங்களில் இப்போதைய நிலையைப் பாருங்கள்:
தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் காலை 10 மணிக்கு கட்டாகும் மின்சாரம் 1 மணிக்குத்தான் திரும்பும். அதன் பிறகு 4 மணிக்கு ஒருமுறை நிறுத்தப்படும். எப்போது வரும் என்று தெரியாது. அதிர்ஷ்டமிருந்தால் 30 நிமிடம். இல்லாவிட்டால் 5 மணிநேரமும் ஆகும் (நேரடி அனுபவம்)!
வடக்கே வேலூர் – தர்மபுரி மாவட்ட மக்கள் பாவம் செய்தவர்கள் போலும். காலையில் 6 மணிக்கு இங்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. சமயத்தில் 12 மணிக்குப் பிறகுதான் வரும். அல்லது 11 மணிக்கு வந்து, 12 மணிக்கு மீண்டும் நிறுத்தப்படும். 3 மணிக்கு போனால் போகிறதென்று மின்சாரம் தந்துவிட்டு, மீண்டும் இரவு உறங்கும் நேரத்தில் மொத்தமாக நிறுத்திக் கொள்வது இந்த மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் ஸ்டைல் (இதுவும் நேரடி அனுபம்தான்!!)
அதிமுகவை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த விவரங்களைச் சொல்லவில்லை. காரணங்கள் திமுக ஆட்சியிலும் இருந்தன. உங்கள் ஆட்சியிலும் அதைத்தான் சொல்கிறீர்கள். முழுசாக 5 மாதங்கள்… எவ்வளவோ செய்திருக்கலாமே. வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப் போகிறோம், மோடி தரப்போகிறார் என அரசு அறிக்கையே வெளியிட்டது மே மாத இறுதியில். இதுவரை எந்த அறிகுறியும் இல்லை.
கடந்த நான்கு தினங்களில் மின் வழங்கல் படு கேவலமாகப் போய்விட்ட பிறகு, இன்று மீண்டும் அதே வெளிச்சந்தை கொள்முதல் பற்றித்தான் அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கூடவே ஆந்திர போராட்டம், காற்று வீசவில்லை, நிலக்கரி இல்லை, ஒரிசாவில் வெள்ளம்… 
என காரணங்களை அடுக்கியுள்ளார்!
வள்ளூர் மின் நிலையம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகச் சொன்னார்கள். 10 நாட்களுக்குள் அது செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்கள், ஜூன் மாதத்திலேயே. ஒரு மாற்றமும் தெரியவில்லை.
மக்கள்தான் இந்த அளவு சிரமப்படுகிறார்களே தவிர, பெரும் தொழிற்சாலைகள், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் 24 மணிநேரம் சீரான மின்சாரத்தை தடையின்றிப் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
அதே போல தடையற்ற மின்சாரத்தை எப்பாடுபட்டாவது வழங்குவோம் என்று கூறித்தானே இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்… எந்தப் பாடும் பட்டதாகவே தெரியவில்லை, அறிக்கை வெளியிடுவதைத்தவிர. மின்வாரியத் தலைவர் சிபி சிங்கைக் கேட்டால் 2013-க்குப் பிறகு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என்கிறார். அதற்கப்புறம் எப்படியும் இவர் பதவியில் இருக்கப் போவதில்லை. அப்போது நாற்காலியில் இருப்பவர் பாடு அது!
இப்போதைய நிலவரப்படி, திமுக ஆட்சிக்காலத்தில் நுகர்வுக்கு கிடைத்த 9500 மெவா மின்சாரம் கூட கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 1100 மெ வா பற்றாக்குறை. அதாவது 8400 மெ வாட்தான் கிடைக்கிறது. அனல் மின்சார நிலையங்களுக்கு ஆந்திர நிலக்கரி வராத நிலையில், இது 7000 மெ வா ஆக குறைய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், பாதி நாள் மின்சாரமின்றி தவிக்கும் நிலை வரலாம்.
கூடங்குளம் அணு மின் நிலையம் வரும் டிசம்பரில் உற்பத்தியைத் தொடங்கவிருந்த நிலையில்தான், மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு மின்சாரத்தின் அருமையை உணர்த்த இதுதான் தருணமென தமிழக அரசு நினைக்கிறதா… கூடங்குளத்துக்கு விரைந்து உயிர் கொடுக்க, இருக்கிறவர்களின் உயிரை மின்வெட்டு மூலம் வதைக்கிறார்களா?
அல்லது மின்வெட்டுக்கு உண்மையிலேயே நியாயமான காரணங்கள் உள்ளனவா?
முதல்வர் ஜெயலலிதாவுக்கே வெளிச்சம் (ஹை, கட்டுரையாவது வெளிச்சத்தில் முடிகிறதே!)
-வினோ

No comments:

Post a Comment