பாபா ராம்தேவ் கறுப்பு பணத்தை மீட்கக்கோரியும், ஊழலுக்கு எதிராகவும் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் உண்ணாவிரதம் இருப்பதற்கான போலீஸ் அனுமதி திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாபா ராம்தேவ் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, ஹரிதுவாரில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அவரது நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. அரசு எடுத்த நடவடிக்கையை பாரதீய ஜனதா கண்டித்து போராட்டம் நடத்தியது.
பாபா ராம்தேவ் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துள்ளார். இவை முறைகேடாக சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அவரது சொத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. பாபா ராம்தேவுக்கு மொத்தம் ரூ.1,100 கோடி சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. பாபா ராம்தேவ் ஆயுர்வேத மருந்து, உணவு, வாசனை பொருட்கள் விற்பனை, கட்டுமான பணி, ரியல் எஸ்டேட் தொழில்களை செய்து வருகிறார். இதன் மூலமும், யோகா வகுப்புகளுக்கான நன்கொடை மூலமும் இந்த சொத்துக்களை குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 5 வருடங்களில் பாபா ராம்தேவ் 30 நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வருகிறார். அவரது உதவியாளர் ஆச்சார்யா பால கிருஷ்ணா இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார். முறையாக வருமான வரி செலுத்தி நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறி உள்ளனர். இந்த நிறுவனங்கள் முறையாக நடத்தப்படுகிறதா என்பது குறித்து வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். 2009-2010 கணக்கின்படி அவரது ராம்தேவ் பதாஞ்சலி யோக்பித் மற்றும் திவ்யா யோக மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமாக ரூ.1,100 கோடி சொத்து உள்ளது. இந்த அறக்கட்டளை ஆஸ்தா டி.வி.” என்ற ஆன்மீக தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. பாபா ராம்தேவ் நிறுவனங்களை கண்காணித்து, ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தை மீறி இந்த சொத்து சேர்க்கப்பட்டதா? வெளிநாட்டு நன்கொடைகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்
No comments:
Post a Comment