நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 23, 2011

ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: லோக்பால் மசோதாவில் அதிகாரம்

"ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பால் அமைப்பிற்கு அதிகாரம் வழங்க வேண்டும். மேலும், ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு, போலீசாருக்குள்ள உரிமைகள் வழங்கப்பட வேண்டும்' என, அரசு தரப்பினர் தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்க, லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்காக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அமைச்சர்கள் ஐவர் அடங்கிய குழுவும், பிரபல காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே தலைமையில், சமூக பிரதிநிதிகள் ஐவர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் பல முறை ஆலோசனை நடத்தினர்.
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை சேர்ப்பது, லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் யார், யார் இடம் பெறுவது என்பது உட்பட பல விஷயங்களில், இந்த வரைவு மசோதா கூட்டுக்குழு உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.இதனால், ஒன்பதாவது முறையாக நேற்று முன்தினம் நடந்த வரைவு மசோதா கூட்டுக்குழு கூட்டம், தோல்வியில் முடிவடைந்தது. அதே நேரத்தில், மத்திய அமைச்சர்கள் தரப்பிலும், சமூக பிரதிநிதிகள் தரப்பிலும் தனித்தனியாக தயாரிக்கப்பட்ட வரைவு மசோதாக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அரசு தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: லஞ்ச ஊழலில் சிக்கியவர்கள், அதனால் பயனடைந்தவர்கள் மற்றும் அந்த நிதியை கையாளும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும். அதாவது, தற்காலிகமாக 90 நாட்களுக்கு மட்டுமே, அந்த சொத்தை லோக்பால் அமைப்பு முதலில் கையகப்படுத்த வேண்டும்.அதே நேரத்தில், சொத்தை கையகப்படுத்திய விவரத்தை சிறப்பு கோர்ட்டுக்கு லோக்பால் அமைப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும் போது, அந்த சொத்துக்கள் உண்மையிலேயே ஊழல் பணம் மூலம் வாங்கப்பட்டது என, கோர்ட் நம்பினால், வழக்கு விசாரணை முடியும் வரை அந்த சொத்துக்களை முடக்கிவைக்க உத்தரவிடும்.

மேலும், ஊழல் குற்றச்சாட்டில் அரசு ஊழியர் ஒருவர் தண்டிக்கப்பட்டால், அவரின் சொத்துக்களை மத்திய அரசே நேரடியாக பறிமுதல் செய்ய முடியும். அந்த சொத்தின் மீது கடன் வாங்கியிருந்தாலோ, சொத்தை லீசுக்கு விட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது வில்லங்கம் இருந்தாலும், அது எதுவும் மத்திய அரசை கட்டுப்படுத்தாது.

லோக்பால் அமைப்பானது தங்களின் புலனாய்வு பிரிவில் உள்ள எந்த ஒரு விசாரணை அதிகாரியையும், எந்த இடத்தில் சோதனை நடத்தவும், எந்த ஆவணங்களை பறிமுதல் செய்யவும் அல்லது எந்தவிதமான விசாரணைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். விசாரணை அதிகாரிகளுக்கு, போலீசுக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.ஊழல் செய்த நபர்களிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள், விசாரணைக்கு ஆதாரமாக பயன்படும் என, லோக்பால் அமைப்பு கருதினால், அதை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் அல்லது லோக்பால் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி, அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

லோக்பால் அமைப்பின் உத்தரவுகளை செயல்படுத்தவில்லையெனில், அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியிடம், விசாரணை அதிகாரியின் விசாரணை முடிந்தவுடன் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன், லோக்பால் அமைப்பே விசாரணை நடத்தலாம்.
இது போன்ற பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

லோக்பால் மசோதா: சமூக பிரதிநிதிகள் பரிந்துரை என்ன?அன்னா ஹசாரே தலைமையிலான சமூக பிரநிதிகள் குழுவினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள், அரசு தரப்பினர் தயாரித்துள்ள மசோதாவில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை விடுவிக்க வேண்டும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்களை சமூக பிரதிநிதிகள் தரப்பில் தயாரிக்கப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக பிரதிநிதிகள் தரப்பினர் மசோதாவில் தெரிவித்துள்ள யோசனைகள் விவரம் வருமாறு:
* முறையான விசாரணை நடத்த லோக்பால் அமைப்புக்கு தேவையான நவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும்.
* அனைத்து எம்.பி.,க்கள் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் வழங்க வேண்டும்.
* ஊழல் விசாரணையை துரிதப்படுத்துவதற்கான ஆணையை லோக்பால் அமைப்பே கோர்ட்டுகளை நேரடியாக அணுகிப் பெற வேண்டும். அரசு மூலம் ஆணை பெறும் முறையை தவிர்க்க வேண்டும்.
* "பொது அமைப்புகள் தங்களின் பணி நடவடிக்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்' என, பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் ஊழல் நடவடிக்கைகள் குறைவதோடு, ஊழல் செய்தவர்கள் பற்றி தகவல் கொடுப்போர் பழிவாங்கப்படுவதும் தடுக்கப்படும். மேலும், லோக்பால் அமைப்பின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டனவா என்பது குறித்த விவரங்களையும், சம்பந்தப்பட்ட அமைப்பினர் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
* ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு நிறுவனம் அல்லது கான்ட்ராக்டர் அல்லது இதர நபர்களின் லைசென்ஸ், குத்தகை உரிமம், அனுமதி, கான்ட்ராக்ட், ஒப்பந்தம் போன்றவற்றை ரத்து செய்யும் அதிகாரத்தை அல்லது மாற்றி அமைக்கும்படி பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும்.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
* லஞ்சம் கொடுப்பவர்கள், அது பற்றிய தகவலை தானாகவே முன்வந்து தெரிவித்தால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
* லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள், இரண்டு ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், லோக்பால் அமைப்பின் முந்தைய தலைவர்கள் இடம் பெற வேண்டும்.
* தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டும்படி உத்தரவிடும் அதிகாரம், தகவல்களை கண்காணிக்க உத்தரவிடும் அதிகாரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு சமூக பிரதிநிதிகள் தரப்பு வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment