நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, June 20, 2011

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிரத்யேகமாக ரூ.190 கோடி திட்டங்கள்-அறிவித்தார் ஜெ.

           தன்னைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதிக்காக ரூ. 190 கோடியிலான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து அவற்றுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அங்கு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நேற்று ஸ்ரீரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கான அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ரூ. 190 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் 430 பேருக்கு ரூ. 1.23 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் ஜெயலலிதா திட்டப் பணிகளை விளக்கிப் பேசியதாவது:

பக்தர்கள் தங்கும் விடுதி

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியத் திருத்தலமாக விளங்குகிறது. வெள்ளிதிருமுத்தம் கிராமத்தில், திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 330 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஸ்ரீரங்கம் திருக்கோயில் வைணவர்களுக்கு உகந்த திருத்தலமாக மட்டும் அல்லாது, தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டின் கருவூலமாகவும் விளங்குகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளிலும் இருந்தும் கூட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அருள்மிகு ரங்கநாதரை தரிசனம் செய்யும் போது, இங்குள்ள சிற்பக் கலைகளைப் பற்றி ஆராய்ச்சியும் செய்கின்றனர். எனவே, இறைவன் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயில், ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. இத்திருக்கோயிலுக்கு, சாதாரணமாக, நாளொன்றுக்கு சுமார் 10,000 பேர் வருகை புரிகிறார்கள்.

சுமார் 2,000 பேர் சுவாமி தரிசனத்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் இங்கே தங்குகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான வசதிகள் ஸ்ரீரங்கம் நகரத்தில் இல்லை. எனவே, பக்தர்கள் வசதிக்காக, பக்தர்கள் தங்கும் விடுதி ஒன்றை அமைத்துத் தர வேண்டியது அவசியமானது ஆகும்.

எனவே, அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக, கொள்ளிடக் கரையில், பஞ்சக்கரை சாலையில் உள்ள 8 ஏக்கர் 60 சென்ட் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய எழில்மிகு பக்தர்கள் தங்கும் விடுதி ஒன்று கட்டப்படும். சுமார் 1000 பக்தர்கள் தங்கும் வகையில், துயில் கூடம், குடும்பத்துடன் தங்கும் தனி அறைகள்; உணவு விடுதி; பாதுகாப்புப் பெட்டகம்; குளியலறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து வசதிகளும் அடங்கிய வளாகமாக இது அமைக்கப்படும்.

இந்த வளாகம், 36 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு புதிதாக கட்டப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாது, திருவானைக்காவல், சமயபுரம் ஆகிய திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

முதியவர்களுக்கு பேட்டரி கார்கள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பில், நீண்டப் பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நீண்டப் பிரகாரத்தை சுற்றி உள்ள சுவாமி சன்னதிகளுக்கு, தரிசனத்திற்காக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்துகள், இருந்தால் நலமாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனவே, திருக்கோயில் நிர்வாகம் மூலம் 11 நபர்கள் அமரக் கூடிய மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்து ஒன்று பக்தர்களின் வசதிக்காக வாங்கப்பட்டுள்ளது.

மேலும், 6 நபர்கள் அமரக் கூடிய, மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்து ஒன்றை நான் எனது சொந்த செலவில் ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளேன். இந்த இரண்டு சீருந்துகளும், வயதான மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய உதவிகரமாக இருக்கும்.

தோட்டக் கலைக் கல்லூரி

வேளாண் துறை வளர்ச்சி அடைந்தால் தான், வேளாண் பெருமக்கள் வாழ்க்கைத் தரம் உயரும். எனவே, எனது தலைமையிலான அரசு, வேளாண் உற்பத்திக்கு மிக முக்கியத்துவம் அளிக்க முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோட்டக்கலை வணிக நோக்கமாக மாற்றப்படுவதன் மூலம், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.

தோட்டக்கலை மேம்பாட்டிற்கு, தோட்டக்கலை பயின்ற பட்டதாரிகள் மிகவும் இன்றியமையாதவர்கள் ஆவர். தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இரண்டு தோட்டக்கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 190 பேர் வருடந்தோறும் தோட்டக்கலையில் பட்டம் பெறுகின்றனர்.

எதிர்காலத்தில், தோட்டக்கலை வல்லுநர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், நாவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் தற்போதுள்ள வேளாண்மைக் கல்லூரிக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு ஏற்படுத்தப்படும் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மகளிருக்காகவே ஏற்படுத்தப்படும். இந்தக் கல்லூரியில், 40 மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதலாம் ஆண்டில், 10 கோடி ரூபாய் இதற்காக ஒப்பளிப்பு செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் 40 கோடி ரூபாய் செலவிடப்படும். இதற்கான அடிக்கல்லை இன்று நாட்டியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மின் திட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து, எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத ஒரு இருண்ட காலத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.

ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மின் தடை என முந்தைய தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், அறிவிக்கப்படாத மின் தடையாக மேலும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. எனது அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, மின் நிலைமையைச் சீரமைக்கும் பல பணிகளை நான் மேற்கொண்டுள்ளேன்.

இதன் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்த வழுதூர் எரிவாயு சுழலி மின் நிலையமும்; ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த குத்தாலம் எரிவாயு சுழலி மின்நிலையமும் சீர் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் மூலம், மின் தட்டுப்பாட்டை நீக்க எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாகத் தான், ஜுலை 1-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தற்போது நடைமுறையில் உள்ள 3 மணி நேர மின் வெட்டு ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என நான் சட்டமன்றத்திலேயே அறிவித்தேன். குறைந்த மின் அழுத்தம் காரணமாக, ஸ்ரீரங்கம் பகுதியில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை நீக்கும் வகையில், சில புதிய மின் திட்டங்களுக்கு தற்போது நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.

தற்போது ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மூலம், மேலூர் மற்றும் ஸ்ரீரங்கத்தைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து வழங்கப்படும் மின் அழுத்தம் குறைவாக இருப்பதால், வீடுகள் மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மின் அழுத்தத்தை மேம்படுத்தும் வகையில், இந்த துணை மின் நிலையம் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும். இதற்கான செலவு மதிப்பீடு சுமார் 22 கோடி ரூபாய் ஆகும்.

அதே போன்று, பெட்டைவாய்த்தலையில் இயங்கி வரும் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும். இதற்கான செலவு மதிப்பீடு சுமார் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். இதன் மூலம், பெட்டைவாய்த்தலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வழங்கப்படும் மின் அழுத்தம் மேம்படுத்தப்படும்.

மேலும், திருவானைக்காவலில் உள்ள துணை மின் நிலையமும், 110/11 கிலோ வோல்ட் துணை மின்நிலையமாக மேம்படுத்தப்படும். இதற்கான செலவு மதிப்பீடு சுமார் 10 கோடி ரூபாய் ஆகும். இவற்றுக்கான அடிக்கற்களை நான் தற்போது நாட்டியுள்ளேன். இந்தப் பணிகள் முடிவடையும் போது, இப்பகுதிகளில் மின் அழுத்தம் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பயன் அடைவர்.

அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்

ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதி வழங்கப்படும் வகையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், 2 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு, அதில் அதிநவீன பிரசவ வார்டு மற்றும் பேறு கால நிலையம்; அறுவை அரங்கம்; 30 படுக்கைகள் கொண்ட பெண்கள் சிகிச்சை பிரிவு ஆகியவை இந்த புதிய கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்ட பின்னர், தற்போதுள்ள பிரசவ வார்டு இப்புதிய கட்டடத்திற்கு மாற்றப்படுவதால், அந்த இடத்தில் 30 படுக்கைகள் கொண்ட ஆண்கள் சிகிச்சைப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் தற்போது இல்லை. அதி நவீன உபகரணங்கள் வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனையில், இரண்டு டயாலிசிஸ் யூனிட்கள் ஏற்படுத்தப்படும். மேலும், அதி நவீன பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். மேலும், வெண்டிலேட்டர் ஆகிய வசதிகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 5 சிறப்பு அறைகள் ஏற்படுத்தப்படும். இவைகளை ஏற்படுத்த 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தற்போது சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் இல்லை. ஒரு காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்; ஒரு கண் மருத்துவர்; ஒரு மனநோய் மருத்துவர் மற்றும் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் இம்மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்படுவர். புதிய கட்டடம் கட்டப்பட்டதும், 3 முதன்மைக் குடிமை மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவர்.

மேலும், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதன வசதியுடன் கூடிய, அமரர் கிடங்கு ஒன்றும் 19 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

ரூ. 50 லட்சத்தில் ஆரம்ப சுதாகார நிலையங்கள்

அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம் தற்போது இல்லை. இந்த இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 50 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும்.

மணிகண்டம் ஒன்றியத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் தற்போது, இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த ஒன்றியத்தில், சோமரசம்பேட்டையில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் எனக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதனை ஏற்று, சோமரசம்பேட்டையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஓன்று அமைக்க நான் இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன். மணப்பாறை ஒன்றியம், மரவனூர் கிராமத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் நான் இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த இரு, ஆரம்ப சுகாதார நிலையங்களும், சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என நான் தேர்தல் நேரத்திலேயே வாக்குறுதி அளித்திருந்தேன். பெட்டவாய்த்தலை கிராமத்தில், 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று சுமார் 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். இதற்கான அடிக்கல்லையும் தற்போது நான் நாட்டியுள்ளேன்.

இவையன்றி, மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும். இந்த மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். இதற்கான அடிக்கல்லையும் தற்போது நான் நாட்டியுள்ளேன்.

மீண்டும் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம்

ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஒன்றியத்தைச் சார்ந்த 146 குடியிருப்புகள்; அந்தநல்லூர் ஒன்றியத்தில் 22 குடியிருப்புகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்தைச் சார்ந்த 5 வழியோர குடியிருப்புகள் மற்றும் ஆலந்தூர் பகுதியில் உள்ள, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எனது முந்தைய அரசால், 8.9.2005ல், 13 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பணிகள், 2007 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு 2010 மார்ச் மாதம் முடிவடைந்தது. இந்தத் திட்டத்தின் படி, 37 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டாலும், தற்போது 18 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், மணிகண்டம் ஒன்றியத்தில், 47 குடியிருப்புகளுக்கு மட்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவான, நபர் ஒருவருக்கு, நாள் ஒன்றுக்கு, 40 லிட்டர் வீதம், முழுமையான அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 99 குடியிருப்புகளில், 20 குடியிருப்புகளுக்கு 50 விழுக்காட்டுக்கு மேலும்; 79 குடியிருப்புகளுக்கு 20 லிட்டருக்கும் குறைவாகவே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக 99 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதற்கான முக்கிய காரணம் நாளொன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் தான். எனவே, வடுகப்புதூரில் அமைந்துள்ள தரைமட்ட தொட்டியில் இருந்து, நிர்ணயித்த அளவு குடிநீர் இந்தப் பகுதிகளுக்கு வழங்க இயலாமல் உள்ளது.

இதனை சரி செய்து, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, பகிர்மான மின் ஆக்கி ஒன்றை அமைத்திட நான் ஆணையிட்டு உள்ளேன். இது 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். மின்சார வாரியத்தால் இந்தப் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும்.

எதிர்வரும் சுதந்திர திருநாளான ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 99 குடியிருப்புகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு, நாளொன்றுக்கு, 40 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தடுப்பணை

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர மக்களுக்கு தங்குதடையின்றி, பாதுகாப்பான குடிநீர் வழங்க இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய குடிநீர் திட்டங்கள் மட்டுமின்றி, செயல்பாடு குறைந்த பழைய திட்டங்களை சீர்படுத்தவும், எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகர குடிநீர் திட்டம் மற்றும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குடிநீர் திட்டம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்கு, காவிரி ஆற்றுப் படுகையில் இருந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம், தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோடை மற்றும் வறண்ட காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால்,

காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், காவிரிப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, இந்தப் பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. மழைக் காலங்களில் பெறப்படும் நீர் மற்றும் மேட்டூர் அணையிலிருந்து உபரியாக விடப்படும் நீர்வரத்தைத் தடுத்து சேமிப்பதன் மூலம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சிராப்பள்ளி மாநகர குடிநீர் திட்டம் ஆகியவற்றிற்கு தேவையான குடிநீர் வருடம் முழுவதும் கிடைக்க வழிவகை ஏற்படும். அதே போன்று, காவிரிப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் அந்தப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரவும்; நீரின் தன்மை மேம்படவும் வழிவகை ஏற்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கம்பரசம்பேட்டை கிராமம், முத்தரசநல்லூர் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை ஒன்று கட்டப்படும். இதற்கான அடிக்கல்லை இன்று நான் நாட்டியுள்ளேன்.

தரம் உயரும் பள்ளிகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும், அவர்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே, தரமான கல்வி வழங்கப்பட பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது இவ்வரசின் கொள்கையாகும். ஸ்ரீரங்கம் பகுதிக்குட்பட்ட பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என எனக்கு கோரிக்கைகள், வரப் பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கே.பெரியப்பட்டி, காட்டுப்பட்டி; அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தேவி நகராட்சித் தொடக்கப் பள்ளி; மேலகொண்டையம் பேட்டை நேருஜி நினைவு துவக்கப் பள்ளி ஆகிய நான்கு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முத்தரசநல்லூர், சீராத்தோப்பு, உத்தமர்சீலி, பெட்டைவாய்த் தலை, தேவஸ்தானம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக, இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்படும். மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியநாயகி சத்திரம், பெரியஆலம்பட்டி, தாயனூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மேலூர் அய்யனார், திருவானைக்காவல் ஆகிய இடங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதே போன்று, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பட்டி மற்றும் சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

மணிகண்டம் ஒன்றியம், பூங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு, 17 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதால், சுமார் 2000 மாணவ, மாணவியர், பயன் அடைவார்கள். பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதால், 104 ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு தரம் உயர்த்தப்படுவதற்கு, இக்கல்வி ஆண்டில், அரசுக்கு, 10 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

சோமரசம்பேட்டை முதல் கோப்புப் பாலம் வரை உள்ள பகுதி, திருச்சி-குழுமணி-ஜீயர்புரம் சாலையில், கி.மீ 5/4 முதல் 6/8 வரை 1.4 கி.மீ. இடைவழித் தடமாக உள்ள சாலை, இருவழித் தடமாக அகலப்படுத்தி கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். 1 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் இப்பணி மேற்கொள்ளப்படும்.

மேலும், 6/8 முதல் 11/4, 4.6 கி.மீ வரை, ஒருவழித் தடமாக உள்ள இந்த சாலை இடைவழித் தடமாக அகலப்படுத்தி, மேம்பாடு செய்யப்படும். 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் இப்பணி மேற்கொள்ளப்படும்.

மணப்பாறை குளித்தலை சாலையில், கி.மீ.4/6ல் பிரிந்து, சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் இணையும் சாலை, மரவனூர் முதல் கொட்டப்பட்டி செல்லும் சாலை ஆகும். இந்த சாலையில், காட்டாற்றின் குறுக்கே, இடையப்பட்டி அருகே, தரைமட்டப் பாலம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் மழை காலங்களில் இந்த சாலையைப் பயன்படுத்த சிறு பாலம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிறு பாலப் பணி மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஊரக வளர்ச்சி மற்றும், ஊராட்சித் துறையின் மூலம், 21 கோடியே 53 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், பின்வரும் பாலங்கள் கட்டப்படும். அதற்கான அடிக்கற்களை நான் இன்று நாட்டியுள்ளேன்.

மணிகண்டம் ஒன்றியம், நாச்சிக்குறிச்சி நாடார் சத்திரம் சாலை, நடுத்தெருவில்,20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; திருச்சி விராலிமலை, மதுரை சாலையிலிருந்து மாத்தூர் வரை செல்லும் சாலையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்;

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தேசிய நெடுஞ்சாலை 45 முதல் கண்ணுடையான்பட்டி செல்லும் சாலையில், 3 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தேசிய நெடுஞ்சாலை முதல் சித்தா நத்தம் செல்லும் சாலையில், 10 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணப்பாறை ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, நான்கு நகர் அருகே, 5 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், காந்திபுரம், பெட்டவாய்த்தலையிலிருந்து எல்லைக் கரைக்கு, உய்யகொண்டான் வாய்க்கால் இடத்தில், 40 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தேசிய நெடுஞ்சாலை முதல் சமுத்திரம் செல்லும் சாலையில், 5 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர்-மேக்குடி சாலையில், 1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் இணைப்புப் பாலம் ;

அந்தநல்லூர் ஒன்றியம், புலிவலம் அய்யலாப்பேட்டை, உய்யகொண்டான் வாய்க்காலில் 4 கோடி ரூபாய் செலவில் பாலம்;

மணிகண்டம் ஒன்றியம், ஆவூர்-துறைக்குடி ஆவூரான் ஆற்றில், 90 லட்சம் ருபாய் செலவில் பாலம்; மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சிக்குறிச்சி ஊராட்சியில், இனியனூர் செல்லும் சாலையில், உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே 80 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், அல்லித்துறை – தோகைமலை சாலை முதல் அரியாவூர் செல்லும் சாலையில் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், ஆலம்பட்டிபுதூர் மேலூர் சாலையில், அரியாற்றின் குறுக்கே, 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், அல்லித்துறை சாலையில், அரியாற்றின் குறுக்கே, 1 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் பாலம்;

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தேசிய நெடுஞ்சாலை முதல் கத்திக்காரன்பட்டி, சின்னசமுத்திரம் செல்லும் சாலையில் 32 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம்;

மேலும், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கடலூர்-மருதாடக்குறிச்சி சாலையில்,2 கோடி ரூபாய் செலவில் பாலம் ஆகியவற்றிற்கு நான் இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன்.

ஸ்ரீரங்கம் பகுதி, அந்தநல்லூர் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், மணப்பாறை ஒன்றியம், ஆகிய பகுதிகளில் பேருந்து வசதிகள் கேட்டு, இங்குள்ள மக்கள் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1. பெட்டவாய்த் தலையிலிருந்து சென்னைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தும் விதமாக, திருச்சி-சென்னை வழித்தடம், பெட்டவாய்த்தலை வரை தட நீட்டிப்பு செய்யப்படும்.

2. மத்தியப் பேருந்து நிலையம், மணிகண்டம் வழியாக ஸ்ரீரங்கத்திலிருந்து, சூரக்குடிப் பட்டிக்கு புதிய வழித்தடம் மூலம் பேருந்து இயக்கப்படும்.

3. சோமரசம்பேட்டை, அல்லித்துறை வழியாக, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தாயனூருக்கு கூடுதல் வழித்தடம் இயக்கப்படும்.

4. சோமரசம்பேட்டை, கொய்யாத் தோப்பு வழியாக, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, நெய்தலூர் காலனி வரை கூடுதல் வழித்தடம் இயக்கப்படும்.

5. கூ.ஏ. கோவில், பொன்னுரங்கபுரம், பனையபுரம் வழியாக, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை வரை;

6. கூ.ஏ.கோவில், புதிய செக் போஸ்ட், பழைய செக் போஸ்ட், தாகூர் தெரு வழியாக, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை வரை;

7. கூ.ஏ. கோவில் வழியாக, ஸ்ரீரங்கம் முதல் கல்லணை வரை, ஒரு நகரப் பேருந்து மூலம் இயக்கப்படும்.

8. மரவனூர் முதல், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் முதல் மரவனூர்;

9. படுகளம் முதல் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்; திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் முதல் படுகளம் வரை; கூடுதல் வழித்தடமாக பேருந்து இயக்கப்படும்.

10. மத்தியப் பேருந்து நிலையம் செங்குறிச்சி வழியாக சத்திரம் பேருந்து நிலையம், மேக்குடி வரை ;

11. தில்லை நகர், மத்தியப் பேருந்து நிலையம் வழியாக, சத்திரம் பேருந்து நிலையம் முதல் மேக்குடி வரை;

12. மத்தியப் பேருந்து நிலையம், கே.கே.நகர், முள்ளிப்பட்டி வழியாக சத்திரம் பேருந்து நிலையம், கொழுக்கட்டை குடி வரை, தட நீட்டிப்பு மூலம் பேருந்து இயக்கப்படும்.

13. தட மாற்றம் மூலம், கண்ணுடையாம்பட்டி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரை பேருந்து இயக்கப்படும்.

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் இந்த விழாவில் வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் அன்போடும், ஆதரவோடும், கல்விச் சீர்திருத்தம், பொருளாதாரச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம், ஆகியவற்றை ஏற்படுத்தி, சமதர்ம சமுதாயம் அமைக்கவும்; உங்களுடைய குறைகளை தீர்க்கவும் பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு மக்களின், நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ‘தமிழ்நாட்டிற்கு இணை தமிழ்நாடு’ என்று அனைவரும் பாராட்டும் வகையில், இந்த மாநிலத்தின் பெருமையையும், சிறப்பையும் மேன்மைப் படுத்துவேன் என்று தெரிவித்து, “மீண்டும் விரைவில் சந்திப்போம் என்றார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment