
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் இ-சலான் முறையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை போக்குவரத்து காவல் துறையை நவீனமயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் அபராதம் வசூலிக்கும் இ-சலான் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டதால், இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் ஜெயலலிதா, இந்த திட்டத்தை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார். 7 இன்ஸ்பெக்டர்களுக்கு இ-சலான் கருவியை முதல்வர் வழங்கினார். பின்னர், 300 கருவிகளை போலீஸ் அதிகாரிகளிடம் வழங்கினார். இது போல், தானியங்கி சிக்னல் கருவிகளையும் முதல்வர் இயக்கி வைத்தார். சிக்னல்கள் பழுதாகும்போது இந்த கருவியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதையடுத்து, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பிடித்த எழும்பூர் எஸ்ஐ ரகுநாத்துக்கு ஒரு லட்ச ரூபாயை ஜெயலலிதா வழங்கினார். இதேபோல் மற்ற விளையாட்டுகளில் வென்ற பெண் போலீஸ் தமிழரசிக்கு ரூ.30 ஆயிரம், திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றும் வீரமணிக்கு ரூ.40 ஆயிரம், அதிரடிப்படையில் பணியாற்றும் பாப்பாத்திக்கு ரூ.40 ஆயிரம், திருச்சி போலீஸ்காரர் முகேஷுக்கு ரூ.20 ஆயிரம், கிருஷ்ண ரேகாவுக்கு ரூ.20 ஆயிரத்தை முதல்வர் வழங்கினார். இதையடுத்து, அண்ணா சாலை காவல் நிலையத்தை ஜெயலலிதா பார்வையிட்டார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில், ‘‘தமிழக காவல்துறைக்கு இந்த கருவிகளை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் அமல்படுத்த புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது அவசியமாகிறது. போலீசார், மனித நேயத்துடன் பொதுமக்களுடன் பழகி சட்டம் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என ஜெயலலிதா எழுதினார்.
No comments:
Post a Comment