நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, June 28, 2011

மெரினாவில் மெழுகுவர்த்தி அஞ்சலி

   இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி உயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணகானவர்கள் கலந்து கொண்டனர்.
.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26வது நாளை உலகெங்கிலும் சித்தரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி, சித்திரவதைக்குள்ளாகி  உயிரிழந்த  ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று பல்வேறு அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள்,  தமிழ் ஆர்வலர்கள், நாம் தமிழர் கட்சி, மதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சி தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு பின்புறம் குவிந்தார்கள். இதில் பெரும்பாலோனர்கள் கருப்பு ஆடைகளை அணிந்திருந்தார்கள். இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை சித்தரிக்கும் படங்களை கையில்  ஏந்தி வந்திருந்தார்கள்.

இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் நினைவாக மெரினா கடற்கரையில் நினைவு தூண் அமைக்கப்பட்டு, அதன் அருகில் மலர்களால் தூவப்பட்டு மெழுகு வர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை சுற்றி தமிழர் உணர்வாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கினைப்பாளர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீர சந்தானம், மே 17 இயக்கம் திருமுருகன் மற்றும் மதிமுக சமூக அமைப்பினர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment