நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, June 17, 2011

ஒரு தனியார் பள்ளித் தாளாளர், ""அட ஐநூறு ரூபாய் குறைஞ்சா என்னப்பா, புத்தகம் சீருடைக் கட்டணங்களை விருப்பம்போல வசூலிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களே, இதுபோதும்''





நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான "தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு' அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை என்பது கடந்த இரு நாள்களாக அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படும் கண்டனங்களிலிருந்தும் குமுறலில் இருந்தும் தெரியவருகிறது.

சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம், ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூ.7,000 அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. எஸ்பிஒஏ மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கு கோவிந்தராஜன் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.11,000, இப்போது ரூ.25,000-மாக அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பொதுவாகப் பார்க்கும்போது இந்தக் கட்டணங்கள், தனியார் பள்ளிகளைத் திருப்தி செய்யும் விதத்தில் சராசரியாக 40 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, நகர்ப்புறத்தில் உள்ள பெரிய பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளின் நலனைக் காக்க வேண்டும் என்ற முடிவோடு கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பது போலவும் தோற்றம் அளிக்கிறது.

சில பள்ளிகள் மிகக் கூடுதலாகவே கட்டணம் பெற்றுள்ளன என்பதோடு, மிகச் சில பள்ளிகளுக்கு மட்டுமே கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைவான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிகச் சில பள்ளிகளுக்கு முன்பைக் காட்டிலும் சில நூறு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டிருப்பதும்கூட நடைபெற்றுள்ளது. மொத்தத்தில் பார்த்தால் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை உயர்த்துவதற்காகவே இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டதோ என்றுகூடப் பெற்றோர்கள் அங்கலாய்க்கும் விதத்தில்தான் ரவிராஜபாண்டியன் கமிட்டியின் பள்ளிக் கட்டண நிர்ணயம் இருப்பதாகத் தெரிகிறது.

டிசம்பர் 2009-ல் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, மிகக் குறுகிய காலத்தில் 10,500 பள்ளிகளையும் ஆய்வு செய்து, கட்டணத்தைத் தீர்மானித்திருப்பது இயலாத காரியம் என்று தனியார் பள்ளிகள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன் இக்குழுவின் தலைவராக நவம்பர் 2010-ல் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர் நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை 6 மாதங்களில் இந்த 6,400 பள்ளிகளில் எப்படி ஆய்வு நடத்தியிருக்க முடியும்? ஒவ்வொரு பள்ளியாகத் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து இந்தக் கமிட்டி கட்டணம் நிர்ணயித்தது என்பது மட்டும் நம்பக்கூடியதாகவா இருக்கிறது?

கட்டணங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய கேள்வியைத் தனியார் பள்ளிகள் கிளப்பியிருக்கும். ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடியே இக்கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதால், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அவர்கள் என்ன அத்தனை அப்பாவிகளா?

மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலரால் இந்தக் கட்டண விவரக் கடிதம் அளிக்கப்பட்டபோது அதைப் பார்த்த ஒரு தனியார் பள்ளித் தாளாளர், ""அட ஐநூறு ரூபாய் குறைஞ்சா என்னப்பா, புத்தகம் சீருடைக் கட்டணங்களை விருப்பம்போல வசூலிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களே, இதுபோதும்'' என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் சத்தமாகவே சொல்ல, அனைவரும் புன்முறுவல் செய்தனர் என்று கேள்விப்படும்போது, நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவில் குறை இருப்பதைக் காணமுடிகிறது.

திமுக ஆட்சியால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் நீதிபதி ரவிராஜ்பாண்டியன். அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் வந்தால் வந்துவிட்டுப்போகட்டுமே என்ற எண்ணத்தில், இத்தகைய பாரபட்சமான ஒரு கட்டணத்தை அறிவித்துவிட்டு, பதவி விலகிச் சென்றுவிட்டாரோ நீதிபதி ரவிராஜ்பாண்டியன் என்றுகூட சந்தேகிக்க இடமிருக்கிறது.

எதற்காகப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வாங்க வேண்டும்? ஷு, கேன்வாஸ் ஷு ஆகியவற்றுக்கும்கூட இவர்கள் கடைவிரித்து கமிஷன் பார்க்கிறார்கள் என்று பெற்றோர் புலம்பியழும் நிலையில், இதனை அவர்கள் விருப்பம்போல வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் அதன் வசதிகள், தேர்ச்சி விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, இடவசதி, கல்வித் தளவாடங்கள் அனைத்தின் அடிப்படையிலும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கப்பட வேண்டும். அந்தத் தரத்துக்குள் வரும் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் இதேபோன்று நான்கு விதமாகப் பட்டியலிட்டாலே போதுமானது. நகரங்களில், பெருநகரங்களில் அமையும் பள்ளிகள் தங்கள் கட்டணத்தில் எத்தனை விழுக்காடு அதிகரித்துக்கொள்ளலாம் என்று அனுமதி தந்தாலும் போதும்.

ஓர் அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், வாடகைப் படி ஆகியன அவரது பதவி, அவர் பணியாற்றும் இடத்தைப் பொறுத்து ஒரே சீராக நிர்ணயிக்கப்படும்போது, பள்ளிகளையும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கவும், நகர்ப்புறத்துக்கு ஏற்பக் கட்டணத்தை உயர்த்தும் அளவையும் அரசு தீர்மானிப்பதில் என்ன சிக்கல்?

தனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம், சம்பளம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அப்படியானால் எல்லா தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தைத் தங்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க முன்வருவார்களா?

கல்வியறிவிலும் தொழில்வளர்ச்சியிலும் தமிழகத்திலேயே கடைநிலையில் உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பள்ளிக்கூடத்தில் எல்கேஜி படிப்புக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த ரூ.4,000-த்தையே அதிகம் என்று கூறிய நிலையில், அந்தப் பள்ளிக்கு ரூ.6,400 (அவர்கள் ஏற்கெனவே வசூலித்ததைக் காட்டிலும் ரூ.300 குறைவு) வசூலிக்க நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு அனுமதித்துள்ளது என்றால், மாவட்டத்தில் சாதாரண நடுத்தரவர்க்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எப்படித் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அனுப்ப முடியும்?

பள்ளிகளை நான்குவிதமாகத் தரம் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் நான்குவிதமான கட்டணங்கள் மட்டுமே இருக்க வகைசெய்தால் அனைத்துப் பெற்றோருக்கும் நன்மை தரும். மேலும், இப்போதைய கட்டணத்தைப் பள்ளியில் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறையைக்கூட அலட்சியப்படுத்தும் இந்தப் பள்ளிகளைத் தரவரிசைப்படுத்தினாலாவது, இதன் கட்டணம் இதுதான் என்பதை அரசு அறிவிப்பதிலும் சிக்கல் இருக்காது.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்துக்கும் மேலாக வசூலிக்கும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்வது அல்லது அரசுடைமையாக்குவது என்பதை ஓரிரு பள்ளிகளில் செய்தாலும்கூட போதும், தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் அனைத்தும் சட்டத்தின் ஆட்சிக்குள் வந்துவிடுவார்கள்.

இதற்கு அதிகாரிகளுக்கும் மனதில்லை. அரசியல்வாதிகளும் தயாரில்லை. ஆட்சியாளர்களுக்கும் துணிவில்லை. முந்தைய அரசின் நிலை இதுவாகத்தான் இருந்தது. இன்றைய ஜெயலலிதா அரசு பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்துவதன் மூலம், தன்னை ஒரு மக்களின் அரசாக நிலைநிறுத்த முடியும். இந்த வாய்ப்பை முதல்வர் நழுவவிடலாகாது!

K Raviraja Pandian
K Raviraja Pandian
Retired Justice, Madras High Court
PLOT NO: B2/5, THIRUVANMIYUR EXTENSIONDATE: 11 NOVEMBER 2009
SIZE: 3,117 SQ FT
PRICE: Rs. 68.54 LAKH
CURRENT MARKET PRICE: Rs. 3.2 CRORE
VIOLATIONS
Close relative of DMK supremo Karunanidhi and the Chairman of the School Fee Determination Committee. Little wonder then he was also the recipient of special favours while he was still a serving judge. At the time of the allotment, the judge owned a 50 percent share in an ancestral house at Thiruveezhimizhalai village. The judge had also sold a property he owned at Pazhavatthankattali village near Kumbakonam. The land was purchased in 1991, a house was constructed on it in 1992 and sold in 2009. He had also sold the landed property of his wife in 2009.

நன்றி தினமணி மற்றும் டெஹல்கா

No comments:

Post a Comment