அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது அவர் பேசியது: ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை உருவாக்குவது நமது லட்சியம். வறுமையை முழுவதும் அகற்ற வேண்டும்.

மாநில அரசும், திட்டக் கமிஷனும் ஏழைகள் யார் என்பதற்கான சரியான அளவுகோலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே, உண்மையான வறுமைக் கோடு என்ன என்பதையும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களையும் அடையாளம் காண வேண்டும். இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்க மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். படிக்க இயலாத லட்சக்கணக்கான ஏழைகள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழில் கொள்கை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப் படவில்லை. தங்களின் தேவைகளுக்காக ஏழை-நடுத்தர மக்கள் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வருவாய்த் துறையில் சான்றிதழ் பெறவும, காவல் துறையில் புகார் கொடுக்கவும், போக்குவரத்துத் துறையில் உரிமம் பெறவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும், மின்சார சேவை பெறவும், இலவச பட்டாக்களுக்காகவும் ஏழை-எளிய மக்கள் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் அரசின் கீழ் நிலையில் உள்ள லஞ்சத்தை அறவே தவிர்க்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் உண்மையான ஏழைகளைச் சென்றடைவது இல்லை. கடந்த ஆட்சியில் அதிலும் லஞ்சம் கேட்கப்பட்டது. அடையாள அட்டை திட்டம் மூலம் ஊழலுக்கு இடம் அளிக்காமல் உதவித் திட்டங்கள் வழங்க இருப்பது பாராட்டுக்கு உரியது. அதே நேரத்தில் உண்மையான ஏழைகளை அடையாளம் காண கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் திறம்பட செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது. இதற்கு எனது பாராட்டுக்கள். தலைமைச் செயலகம்: புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த அரசு முன்வந்துள்ளது. ஆனாலும் பல கோடி ரூபாய் செலவு செய்த அந்தக் கட்டடம் வீணாக போய்விடாதபடி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். விவசாய மேம்பாடு, உற்பத்தி அதிகரிப்பு, மின் பற்றாக்குறையை நீக்குவது, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவது ஆகிய வரவேற்கத்தக்கது. கிராம சுகாதார நிலையங்களை மேம்படுத்தி உரிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.
Thanks to Dinamani
No comments:
Post a Comment